செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

இதயம் எழுதும் மடல் (15)

இதயத்தில் மணம் வீசும் அதிகாலை மலரே!

உன்
உதயத்துச்சூரியனின் இதயம் எழுதும் மடல்
இன்றும் மலர்கிறது!

மலர்ந்திருக்கும்
இனிய அதிகாலைப்பொழுது இது!
மலர்ந்திருக்கும் இதய நந்தவனத்தில் உதயமாகும்.......

புலர்ந்திருக்கும்
என் எண்ணமலர்கள் என் இனியவண்ணமலருக்கு......
புலர்ந்திருக்கும் புத்தம் புதுக்காலைப்பொழுதில்....

பூமாலைச்சரமாக
கோர்த்தெடுக்கும் நேரம் இது!
பாமாலையாய் நேர்த்தியாகத் தொடுத்துவிடும் நேரம் இது!

நேரம்!
அற்புதமான நேரம்! சிற்பச்சிலையழகை.......
நேர்த்தியாகச் சேர்த்தெடுத்து மடிமீது சேர்த்தெடுத்து.........

பாரங்களை இறக்கி
மனப்பாரங்களை தூரத்தே இறக்கிவைத்து........
நேரங்களை மறந்திருந்து சுதிராகம் மீட்டுகின்ற இன்பநேரம் இது!

தூரங்களை
மனக்கணக்கில் பதித்து சற்று சிந்தனைக்கு
வேலைகொடுத்து படுக்கையில் வந்து புரண்டபோது.......

இதயத்து மலர் நீ!
"என்னங்க! என்ன தூக்கம் வரவில்லையா!
இதயத்தில் என்ன பாரம்! என் உதயத்துச்சூரியனே!

உங்கள்
இதயத்தில் என்ன பாரம்!" என்று
என்கண்ணோரம் கண்வைத்து....

இதயத்து நாதம்
இதமாகத்தாளமிட நெஞ்சோடு சேர்த்துநின்று........
விழியாலே வினாத்தொடுத்தாய்!

மௌனமொழியாலே
ஏக்கங்கள் சுமந்துநின்று
"உங்கள் இதயபாரத்தை என்னிடம் இறக்கிவிடக்கூடாதா!"என்று

ஏங்கிநின்றாய்!
"தாங்கிநிற்க நானிருக்க
தயங்காமல் கூறுதற்கு என்ன தடை!" என்றாய்!

உன் மௌனவிழிப்பார்வைகள்
படம்பிடிக்க இடம்பிடிக்கும் வடம்பிடிக்கும்.....
உன் அன்புவடப்பிடிப்புக்குள் அடங்கிவிட நான் துடித்தேன்!

என் துடிப்பறிந்து
மார்போடு சேர்த்தெடுத்து என்னை
உன்மடிமீது தவழவிட்டு மயிலிறகாய்....

உன் மயிலிறகு விரல்களினால் வருடிவிட்டாய்!
"ம்....இப்போது கூறுங்கள்! என்ன மனத்தின் அழுத்தம்!
வருத்தம் தந்த மனத்தின் அழுத்தம் என்ன! கூறுங்கள்!" என்றாய்!

"தேன்மொழியாளே!
வான்நிலவாய் நீ குளிர்மைதர
எனக்கேது வருத்தமடி!

வான்வழி தவழ்ந்துவந்த சேதியொன்று
என்சிந்தையைக் கிளறியது!
என்வழிதனில் என்மனவழிதனில் புகுந்துகொண்டு....

ஏதேதோ உளறியது!
என்எதிர்வழி நின்று ஏதேதோ கதைபேசியது!
இனம்புரியவில்லை!இதயத்தில் கனம் தெரிகிறது!

எடுத்துச்சொல்லத்தெரியவில்லை!
எப்போதோ எங்கேயோ பார்த்தமுகம்!
பார்த்துப்பேசிய முகம்போல் தெரிகிறது!

இப்போது வந்து
என்னோடு பேசிவிடத்துடிக்கிறது போன்றதொரு உணர்வு!
என்னவென்று புரியவில்லை! ஏதென்று புரியவில்லை!

இதயமதில் அது
மீளாக்கனத்தோடு இருப்பது தெரிகிறது!
இதயத்துவேதனைக்குவடிகாலாய்.........

வருந்தியழைக்கிறது!
'மருந்து நீதான்!' என்கிறது!
'புரிந்தும் புரியாத புதிர்போல் சதிராடுகிறாய்!' என்று

என்மேல் எகிறிவிழுகிறது!
காரணம் புரியவில்லை!
என்னிதயம் கனக்கிறது! அதுமட்டும் எனக்குத்தெரிகிறது!

உன்னிதயம் துடிப்பது எனக்குப்புரிகிறது!
என்னிதயத்துக்கனமதை இறக்கிவைத்துவிட
உன்னிதயம் துடிக்கிறது எனக்குக்கேட்கிறதே!"

என்றபடி உன்மடியில் தவழ்கிறேன்!
எனைச்சேர்த்தெடுத்துக் குழந்தையைப்போல் முத்தமிட்டு......
இதமாக என்னை வருடுகிறாய்!

"குழந்தைமனம் உங்களுக்கும் இதயமதில் பாரமா!
கூடாது! இருக்கக்கூடாது!" என்று கட்டிஅணைக்கிறாய்! பலகதைபேசுகிறாய்!
தொட்டில்குழந்தைபோல் தாலாட்டுப்பாடுகிறாய்!

"அமைதியாகத்தூங்குங்கள்!
அதிகாலைவேளையிது! அமைதியாகத்தூங்குங்கள்" என்று
அழுத்திச்சொல்கிறாய்!

"ஓ! அதிகாலைவேளையாடி!
அப்படியா சங்கதி!சுதிராகம்பாடுகின்ற
இன்பவேளையன்றோ! இது மதுவுண்ணும் நேரமன்றோ!

இதழ்மதுவுண்ணும் நேரமன்றோ!
புதுமலராய் மலர்ந்திருக்கும் மலருன்னில்
இந்த மதுவுண்ணும் வண்டுக்கு வேளையிதுவன்றோ! இன்பவேளையன்றோ!

இப்போது உறக்கம் என்னடி உறக்கம்!
இதுகிறக்கமன்றோ! இன்பக்கிறக்கம்!
வாடிகண்ணே! வாடி! புதுராகம் பாடிடநீ வாடி!

வாடிவிடும் வேளையல்ல!
இதயம் வாடிவிடும் வேளையல்ல!
உதயகீதம் பாடிவிடும் வேளையிது! வாடி என்வீணையே!

நாதம் இசைத்துவிட விரல்கள் துடிக்கிறதே!
இன்னும் என்ன சோககீதம்! இன்னும்என்ன எனக்கு இதயபாரம்! வாடி!
நாடித்துடிப்பறிந்து இதயநாடித்துடிப்பறிந்து......

மருந்தை விருந்தாக்கும்
சித்தவைத்தியையடி நீ!
கோடுகாட்டிக்காட்டிய பின்னும்......

அந்தக் குறிப்பறியாத முட்டாளா இவன்!
மாடிவீடென்ன மண்குடிசையில்கூட....
மனந்தரும் சுகந்தமதை மனத்தோடு இணைத்துவிடும்.....

மயக்கம் தரும்முற்றத்து மல்லிகை நீ!
என்மனமுற்றத்து மல்லிகை நீ!
உனக்காக ஓர்கவிதை! எழுதிவிடத்துடிக்கிறது!

உன்வீணைநரம்புகளை மீட்டி
உனக்காக ஒர் இராகம் பாடிவிடத்துடிக்கிறது!
வாடி என்கப்பக்கிழங்கே!வாடி! வாடிகள்ளி" என்கிறேன்!

என்வீட்டுக்கடிகாரம்
சொல்லிவைத்து அடிப்பதுபோல்
மூன்றுமுறை அடிக்கிறது!

கண்விழித்துப்பார்க்கிறேன்!
கண்டது கனவடி! கடிகாரத்தை பார்க்கிறேன்!
நேரம் அதிகாலை மூன்றுமணி!

ம்..............ம்.........சுதிராகம் மீட்டிவிட
இதமான வேளைதான்! என்னசெய்வது!
எழுந்துவந்து விசைப்பலைகையை வீணையாக.....

உனை எண்ணி...
இன் இதயத்து உதய நிலவுக்கு....
இம்மடலைவரைகின்றேன்!

"அதுசரி! யார்அந்தச்சக்களத்தி!
உங்கள் நித்திரைக்கு எமனாய் வந்து
தொந்தரவு செய்த அந்தச்சக்களத்தி யார்" என்று எனைக்கேட்கிறாயா!

"போடி! அதற்குப்பதில் வாராது!
ஏனென்றால் எனக்கே அவள் யாரென்று தெரியவில்லை!
தெரிந்திருந்தால் இந்த அதிகாலை வேளையில்....

உனக்கு மடலா வரைந்துகொண்டிருப்பேன்!!!!!!!
அடி! போடி பைத்தியமே! நீ சிரிப்பதற்காக.......
நீ மனம் விட்டு இம்மடல்பார்த்துச்சிரிப்பதற்காக..........

இருபினும் "இந்த ஆம்பிளைங்களே
இப்படித்தான்" என்று உன் இதயம் பேசுவது எனக்குக் கேட்கிறதடி!.....
அதுதான் வைரமுத்துவே சொல்லிவிட்டாரே.."ஆண்களில் இராமன் கிடையாது"......என்று

"சரி! சரி! வைரமுத்துவைத் திட்டாதே1....
அவர் என்ன செய்வார்...பாவம்..சினிமாவுக்குப்பாட்டெழுதவந்தால்
உள்ளதையும் எழுதவேண்டிவந்துவிடுகிறதே....

உண்மையும் அதுதானே.....
வாழ்வியலின் யதார்த்தம் அதுதானே....
நகைச்சுவைக்காகக்கூறினேன்.....நீயும் கொஞ்சமாவுதல் சிரிப்பாயல்லவா...

வைரமுத்து கோவிக்கமாட்டார்!'
என்ற நம்பிக்கையில்தான்....
பார்க்கலாம்... அடுத்துவரும் மடல்களில்....

வைரமுத்துவின்
கவிதைவரிகளில் நான் இரசித்தவற்றை
நேரம் கிடைக்கிறபோது உன்கூட மடல்மூலம் பகிர்ந்துகொள்கிறேனே.....

அவருடைய "தண்ணீர்த்தேசம்" என்ற
கவிதைத்தொகுப்பை எடுத்துப்பார்! அதில்
எத்தனையோ விஞ்ஞானப்புள்ளிவிபரங்கள்...

மெஞ்ஞானத்தோடு சண்டைபிடிக்கவைக்கும்...
அற்புதமான கவிதைத்தொகுப்பு அது.....
"சரி! சரி! அதிகாலைவேளையில்.....

இன்னும் கொஞ்சநேரம் பாக்கி இருக்கிறது!
வாருங்கள் சற்று சங்கீதம் பாடுவோம்" என்று
மனத்தினால் நீ கூடுவது உணர்வலைகளில் புரிகிறது!

அதிகாலை வேளை! ஆனந்தக்கோலம்!
சுதிராகம் பாடும் இதயம் சுகமான நேரம்!
மதிகாலை வேளை மயக்கங்கள் நாடும்!
புதிராகும்! கூடும்! இதயம் புலர்காலை தேடும்!

இதமான இளந்தென்றல்தாலாட்ட தென்றலோடு
தென்றலாய் மறுமடலோடு உன்னை வருடும்வரை....

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4144&hl=

நன்றி
சுபம்!

இதயம் எழுதும் மடல் (14)

அருந்தமிழ்க் கவிதைக்குள் விருந்தாகும்
இளந்தேன்மொழித்தென்றலே!

உன்னோடு இணைந்திருக்கும்
உன் உதய இதய ஆதியின் அன்புமடல்
இணைந்துவரும் இதய ஆத்மார்த்த இதழ்முத்தங்களுடன்....

அன்றைய நினைவுகள் இதமாகத் தாலாட்ட....
இன்றைய மடல் மனதில் இனம்புரியா
இன்பக்கிளுகிளுப்பில் பாலூட்ட......

இதய மன்றுதனில் மனம் துள்ளிக்குதிக்க.....
மனத்தோடு துள்ளுகின்ற மனத்தோடு....
விரல்கள் நர்த்தனத்தில் விசைப்பலகை துள்ளியெழுகிறது....

அள்ளிவரும் என் எழிலரசி!
உன் அழகு அள்ளியெடுத்து.....
வெள்ளித்தட்டில் அறுசுவை விருந்துபோல் உன்அழகு.....

ஆசையுடன் என்னைப்பார்த்திருக்க....
உன் காந்தவிழிப்பார்வைசொல்லும் கவிதைக்குள்
ஆயிரம் தந்தி என்விரல்கள் சேர்த்திழுத்து மீட்டவைக்க....

நாட்டியப்பேரழகே!
என் மனதை சாட்டையில்லாப் பம்பரம்போல்
ஆட்டிவைக்கும் சுந்தரியே!

சிந்தை குளிர்கிறதே!
சந்தக்கவிதைக்குள் மொந்தைக்கள் விருந்து
நம் முந்தை நினைவுகளை மீட்டிவிட....

சுருதி மீட்டிவிட.....
என்விரல்கள் உனை வீணையாக மீட்டிய.....
அன்றை நாள் நினைவு ஆட்டிப்படைக்குதடி!

சூடிக்கொடுத்த சுடர்நாச்சியாய் நீ!
கார்மேகக்கூந்தலை கச்சிதமாய் அள்ளிமுடித்து....
முல்லையும் மல்லிகையும் சேர்த்தெடுத்து கார்மேகக்கூந்தலுக்கு.....

காதல்வாசம் ஊட்டி....
கட்டுடல் மெட்டுடன் சார்ந்திருக்கும்...
பாவாடைத்தாவணியில்....

மெட்டியுடன் கொலுசு சேர்ந்து......
கவிதையுனக்கு மெட்டுப்போட்டுவிட....
கல்வாழை மூக்குத்தி கண்களுக்குள் மயக்கந்தர.....

கோவைப்பழ அழகில்..
கோதையுன் இதழ்கள் சிரித்திருக்க....
கிருஷ்ணகாந்தவிழிக்கண்கள் பலநூறு கவிபடைக்க.......

மடிமீது தவழ்ந்திருந்து....
வண்ண விருந்ளித்தாயே....
அன்றைய நாள்...... இன்று ஆட்டிப்படைக்குதடி...

உன்மனவுணர்வுக்குள்
ஊடுருவ விந்தை சிந்தைகொள்ளுதடி...
"நேரம்தான் போகிறதே அத்தான்" என்பாய்....

"அதிதூரம்தான் கடந்துவந்துவிட்டோம்..
இன்னும் என்ன வேண்டும்!" என்பாய்...
"நேரந்தான் போகிறதே தெரியலையே..

உன் அன்பின் ஆழம்தான்....
தடம்பதித்த இடமெல்லாம் சுழல்கிறதே...
இடம்பிடித்த உன்மனம் வடம்பிடித்து இழுக்கிறதே....

"இன்னும் இசைத்துவிடு!" என்கிறதே...
மடல் மூடித்திறந்துமூடும் விழிகள்
மயக்கம் கொள்ளவைக்கிறதே!"

கடல்மேவும் அலைகளதாய்.....
உன்இதயக்கடல் ஆழம் தெரியாத....
தெரியமுடியாது உன் புன்னகையலைகள் மயக்கிறதே!

கள்ளி! கள்ளி!
உன் சிந்தைகவர்ந்திழுக்க இன்னும் என்ன...
மின்னும் கன்னங்களோ....

சித்திரக்கோலம்போடும் நெற்றிபுரள் நீள்முடிகள்...
நீவிவிட்டு நீவிவிட்டு கைவிரல்கள் வலிக்காது.....
செவ்விதழ்கள் செய்கின்ற குறும்புகளை.....

நான் ரசிக்கின்ற சுகங்களை.....
நீ ருசிக்கின்ற பாங்குதனை....
நான் பார்க்கின்றேன்!

மேவிவரும் ஆசைகள்...
மேவிவரும் தென்றலாய்....
உன் மேவுதலில் உணர்கின்றேன்....

என்ன சொல்ல..என்ன சொல்ல..
மின்னும் நட்சத்திரங்களதாய்......
மெல்ல நீ புன்னகைக்கையில்.....

"என்னவேண்டும் என்றாலும்
எடுத்துக்கொள்ளுங்கள்" என்கின்ற
உன் நாணவிழிச்சிரிப்புக்கு அர்த்தங்கள் சொல்கிறதே...

எத்தனை முத்தங்கள் ...
எத்தனை முத்தங்கள்...
மொத்தமாய் ஆசுகவி அள்ளியெடுத்த கொடுத்த முத்தங்கள்...

பத்திரமாய் எனக்காகச்
சேர்த்துவைத்த தேன்துளிகள்...
சித்திரமாய் கணக்கெழுதாக் காவியத் தேன்துளிகள்...

எத்தனைநாள் கேட்டிருப்பாய்...
"எத்தனைமுத்தங்கள் என்று
நான் எண்ண நினைத்திருப்பேன்...அத்தான்!

உங்கள் முன்வந்தவுடன் நான்
அத்தனையும் மறந்துவிட்டு மகிழ்ந்து நாணித்திருப்பேன்"...என்று
எத்தனைநாள் கேட்டிருப்பாய்...

"போடி கள்ளி.!.போடி பைத்தியமே!...
வாடிவிடும் மனம்கூட வசந்தம் கண்டுவிடும்
உன் அசத்தல் நிலைகண்டால்...

நிசத்தில் சொல்வேனடி...
அசத்திவிடும் அழகு அதில்
நிசத்தில் உன் அன்பழகு!

இரண்டும் திரண்டு
இணைத்திருக்கும் நிசத்தில் நீ பேரழகு!
பேரழகாய் நீ பெருவிருந்து படைத்திருக்க...

மடைதிறந்த வெள்ளத்தில்
கவிதைஊற்றுக்கேது தடை....
விடைநிறைந்த பலபுதிர்களோடு......

நீ புதிர்போடும் பேரழகில்...
மடைதிறந்த புதிர்களதாய்...
காலைப்புதிர்களது சதிராடும்...

விடைமறந்து சதிர்களதாய்
சோலைப்புஷ்பங்கள் சுதிபாடும்....
மலர்மனங்கொண்டவளே...

காலைமலர்க்கதிரொளியாய்
தினம் மலர் நிறைவின்பங்கள்
வரவுவைக்கப்பிறந்தவளே!

கலர் கலர்க் கனவுகளில்...
மலர்உன் நினைவலைகள்
மனம் மகிழ் உறைவிடமாய் உணர்வலையாய் இனிப்பவளே....

அன்றைய நினைவுகளில் மனமது சதிராட
இன்றைய மடல்தன்னில் இன்பமனமது சுதிபாட
தென்றலாய் வருடல்களை மீட்டிய சுகவரவோடு
அன்றிலதாய் இதயம் மீட்டிய இனிமை நிறைவோடு

மீண்டும் தென்றலாய் உனைவருடும் இனியமடலோடு சந்திக்கும்வரை...

அன்புடன்
ஆதித்ததாஸன்
நன்றி
சுபம்!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4126&hl=

இதயம் எழுதும் மடல் (13)


இனிமைநிறை இதயத்தின் இன்பவருடலுடன்
இணைந்துவரும் இதயநிலவே!

இனிமைத் தைமகளும்
மலர்ந்து மணம் பரப்பும்
இன்பவேளையிது!....

துன்பங்கள் தொலைந்து
இனிமைத்தேடல்கள் இதயங்களின் உதயமாகும்
இன்பவேளையிது!......

புதிய உதயங்களின் சங்கீத இலயங்கள்...
சந்தம் இசைத்துவிடும் சங்கத்தமிழ்த் தையாள்
சுந்தரமாய் பொங்கிவர.....

"பொங்கலோ பொங்கல்" என்று
பொங்கிநின்ற உள்ளங்கள்...

பொங்கிநிற்கும் நம்பிக்கை
பூத்துக்குலுங்கிவிட....
சேர்த்துவைத்த ஆசைகளின் நாத்துக்கள் துளிர்விட....

பாஷைகளின் மௌனவிழிப்பாஷைகளின்
ஆசைகளின் உந்துதல்கள்......
உந்தித்தள்ளிவிட....

நந்தவனமயில்களின் நர்த்தனங்கள்
நந்தவனமலர்களின் முத்தத்தில்
சித்தங்கள்குளிர்ந்துவிடும்.....

புத்தம்புது சிந்தனைகள்
சந்தம்இசைத்துவர....
சந்தனத்தென்றல் சந்தோஷம் கூட்டிவிட.......

நந்தவனக்குயிலே! என்
சிந்தைவனக்குயிலே!
சந்தோஷக்கணைகளாக சங்கமிக்கும்...

சங்கத்தமிழ்க்காதலன்! உன்
சிந்தைகவர்கள்வன்....
இவன் இதயம் எழுதும்மடல்!

உனக்காக.. இவன் இதயம் எழுதும் கடல்!
இவன் வலம்வரும் உலகத்தில்
இவனோடு இணைந்துபயணிக்கும் சுந்தரியே!

உனக்காக....
மடல்கள் கடல்போல் விரிந்திருக்கும்! மனக்
கடலில் என்மனக்கடலில் மலர்ந்துவரும் மடல்கள்.....

உனக்காக..
வளர்ந்துவரும் மடல்கள் ஏராளம்!
எனக்கான உனக்காக விரிந்துவரும் மடல்கள் தாராளம்!

விசைப்பலகை
விரட்டாத வீணையாக மீட்டுகையில்
இசைந்துவரும் விரல்கள் சுருதிபிசகாது இசைத்துவிடும்!

இருப்பினும்....
நேரம் போதாத நிலைதான்!
தூரம்போய்நின்ற பயணங்கள் நிலைதான்!

தொடரகின்ற மடல்களின்
தடைகளின் விடையென்பதை....
நான்சொல்லியா நீ அறிவாய்!

தடைகள் தாண்டிவந்து...
விடைசொன்ன காதலின் மோதல்சகியே!
பாதைகள்.... பயணங்கள்.....

விடைதேடும் வேளைகள்.....
விடியல்களை வரவுவைக்கும் நேரங்கள்!
வருகின்ற விடியல்கள் பலர்வாழ்வுக்கு வரவுவைக்கும்....

துருவங்களை இணையவைத்து.....
பலர்வாழ்வுக்குப் பாலமிடும்!
வருகின்ற வசந்தங்கள்....

நல் மனங்களுக்குள் "சொந்தங்கள்
தரும்" என்ற நம்பிக்கை...
தினம்தினம் காத்திருப்புக்கள்!

காத்திருப்புக்கள் கனிந்துவந்து
கதவுகளைத்தட்டி சேர்த்திருப்புக்கு வழிசொன்னால்...
அதுதானே சொர்க்கம்!

நல் மனங்களைத் தாலாட்டி....
நல் மனங்களைக் குளிர்வித்து...
தொல்லைகளை நீக்குகையில் கிடைக்கின்ற இன்பம்.....


"அடுத்தவர் நலத்தை
நினைப்பவர்தமக்கு ஆயுள் முழுவதும்
சுபதினம்" என்பான் கவியரசன்!

சுபதினங்கள் கூடிவர...
சூழ்சோகங்கள் கலைந்துவிட...
நடந்துவரும் நாட்கள் நம் முயற்சியின் வேகங்கள்!

"முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார்!" என்பதெல்லாம்
மனதோடு பின்னிப்பிணைந்த அநுபவ ஞானங்கள்!

முயற்சியுடன் முனைவோம்!
முடிந்தவரை தொடர்வோம்!
"விடியும்" என்ற நம்பிக்கை எழுச்சியுடன் நடைபயில்வோம்!

வெற்றி நம்கையில்!
சுற்றிவரும் மனங்கள் வசம்
சுபதினங்கள்!......

எழுவோம்! ...
எழுவோம்!....
எழுகதிராய் படர்வோம்!.....

நல்மனங்களின் துயரங்கள்
துடைத்திடவே நடைபயில்வோம்!
கல்மனங்களையும் கரைத்திடவே
விடைகொடுத்திடுவோம்!தொடர்ந்திடுவோம்!

மீண்டும் மறுமடலில் உனைத்தென்றலாய் வருடும்வரை..

அன்புடன்
ஆதித்ததாஸன்
நன்றி!
சுபம்!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4078&hl=

இதயம் எழுதும் மடல் (12)

அதிசய இதயம் தவழ் என் இளந்தென்றலே!

அன்போடு
ஆரத்தழுவிய வண்ணம்...
அதிசயமாய் மலரும் சுகராகங்கள் பாடிட....

இன்போடு
இதமாய் இனியநல் புத்தாண்டு
அதிரசமாய் உள்ளமதை...

திருடிக்கொள்ளும் இனிமைசுகங்களோடு......
வருடிக்கொண்டு வருகிறது!
திருடிக்கொண்டு வருகிறது!

மருவும் மலரும்
மணம் தரும் நிறைவோடு.....
மருவும் மடல் இது! உனை மருவும் மடல் இது!

"அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது" என்றான் வள்ளுவன்....

துன்பம் பறக்க...
இன்பம் நிறைக்க... இனிய
அன்பும் சிறக்க ஆனந்தம் அள்ளித்தரும்.....

இனிய புத்தாண்டில்...
புதுமைகள் வரவு வைக்க...
வனிதையுன் சித்தம் குளிரவைக்க....

உன் இனிய
இதயமதின் இன்பமுத்தங்கள்!
தனிமை தவிர்த்து...உனைத்தாங்கும் இதயமதின்..

இனிய பலகவிகள்...
இதழ்கள் மடல்தழுவி...
கனிய வலம்வரும் காலம்மலர்கிறது!

மனித மனங்களை
அசைக்கும் புனித நினைவுகள்...
இனிய இதயமதில் வருடிக்கொள்கிறது!

எத்தனை ஆண்டுகள்...
எத்தனை ஆண்டுகள்...
எத்தனை சுகங்களில் எத்துணை ஆண்டுகள்...

மொத்தமாய் மொத்தமாய்.....
முத்தங்கள் முத்தங்கள்......
சத்தமாய் சங்கீதம்...சத்தம் இல்லாத சாரீரம்...

எத்தனை சுகங்களடி!
எத்தனை சுகங்களடி!
பத்தரை மாற்று உன்னால்...எத்தனை சுகங்களடி!

வித்தைகள் தருபவள் நீ!
வீணையின் வீணையடி!
இத்தரை மீதில் உன்னால் எத்தனை சுகங்களடி!

சட்டென்று கைபிடிப்பாய்!
பட்டென்று படம்பிடிப்பாய்!
மொட்டவிழ் இதழ்த்தேன் நிறைத்து....

கட்டவிழ் கவிவடிப்பாய்!
சிட்டென்று பறக்கவைப்பாய்!
சிங்காரத்தேர் இருத்தி....

மொட்டவிழ் வான்பரப்பினிலே...
கொட்டும் மழைசுகம் கொடுத்து நிற்பாய்!நீ
கொடுத்துவிடும் சுகங்கள் கொடுத்து விடும் நிஜங்கள்!

தொடுத்துவிடும் மாலைகளாய்....
எடுத்துவர புகழ்நிறைத்துவர அடுத்துவரும் தினங்கள்
கொடுத்து விடும் மனங்கள் தொடுத்துவிடும் மலர்மாலைகளாய்.......

தடுத்துவிட முடியாத
யாரும் தடுத்துவிடமுடியாத...
கொடுத்துவிடும் கலைகள்! நீ

தொடர்ந்துவரக்கலைகள்...
தொடுத்துவிடும் நிலைகள்! தேன்மொழிநீ
கொடுத்துவிடும் கடல் அலைகள்! தென்றல்தவழ்ந்து வர...மலைசுகங்கள்....

மலைக்குள்
மலைத்துவிடும்! மனம்
அலைக்குள் சிலிர்த்துவிடும்! மனவனம்...

சிலைக்குள்
சிவந்துவிடும்! செவ்வான
சிலைக்குள் நிலைத்துவிடும்!

என்மனவலைக்குள்
மலைக்கவைக்கும்....
உன்மன வலைக்குள் மூச்சாகி....

கூச்சமில்லா மூச்சுக்காற்றாகி...
அலைக்குள் அலையாகி......
ஆழ்ந்தெடுக்கும் முத்தாகி.......

மலைக்குள் மலைக்கவைக்கும்
பொதிகைத் தேன் மொழிச்சுரங்கமடி!
கலைக்கும் நினைவுகள் அலைக்கழிக்கவைக்கும் போதினில்...

கலைக்குள் கலைமகள்
நீ கவிதை சொல்லும் பேரழகு...
மலைக்கும் மகிழ்வினில் நான் எனைமறந்து போகிறேனே.....

நிலைக்கும் சுக நினைவுகள்
சுகராகங்களில் மிதக்கவைக்கும்...
எனக்குள் இருப்பவளே! என்னுயிர்க்காதலியே!

என் மனத்தை நிறைப்பவளே!
உன்னுயிராய் எனை நினைத்து....
தினத்தை வரவுவைக்க தினகரானாய் திகள் ஒளிர் கொடுக்க....

எனக்குள் நிலைப்பவளே!
தேன்கதலியாய் இனிப்பவளே......
இதுவன்றோ புதுமையடி! ஈருயிர்கள் சங்கமித்து....

மதுமலர்த்தேனுண்ட சுகங்களடி!
மாணிக்கக்கலசங்கள் ஜொலிப்பதுபோல்
மதுமலர் உன் உதயம்......

இதய ஒளிப்பதிவாய்
என்றும் இதயமதில் இனிமைதர....
மதுவன்றோ! மலர்ச்சோலைதனில் வண்டாகி.....

இதுவன்றோ இனிமையென்று
என்றும் உன்இதயமதில்....
புதுஉதயங்கள் நான்காண நான்வடிக்கின்ற கவிமலர்க்கு....

அதுவன்றோ...
கருப் பொருளாகி...
பலர் விருப்பாகும்......

புதுமலர் மலர்சுகத்தில்
மகிழ்கின்ற புது வருடமிதில்...
மதுமலர் மலர்க்கலசத்தில் தேன்மதுவுண்ட கிறக்கத்தில்....

மதுமலர் உந்தனுக்கு....
மகிழ்கிறுக்கன் இவன்கிறுக்கல்கள்...
புதுமலர் செந்தேன்மொழியுனக்கு சமர்ப்பிக்கும் புதுவருடல் இது...

வருகின்ற சுகங்களை வரவில் வைப்போம்!
தருகின்ற நிறைவினில் நிறைவுகொள்வோம்! இன்னும்
வருமென்ற மலர்வினில் மணம்பெறுவோம்!இன்னும்
வருகின்ற மடல்களில் மனம் நிறைப்போம்!

மீண்டும் மறுமடலில்.....
இளந் தென்றலாய் உனை வருடும்வரை...

அன்புடன்
ஆதித்ததாஸன்

நன்றி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3932&hl=
சுபம்....

இதயம் எழுதும் மடல் (11)


இதயத்தை இனிமையாக
வருடும் இளந்திங்களே!

நலமா! நலமறிய ஆவல்!
நலமுடன் நாடிவரும் இன்பங்கள் தாலாட்டிட
வலம் வரும் வான்மதியாய்
வான்தவழும் திங்களதாய்
நீ எங்கும்
எப்போதும் நிறைந்திருக்க
இனிமையோடு நிறைந்திருக்க
என்றும் இறையருள் துணையிருக்கும்!

அன்று என்மடல்பார்த்த சந்தோசம்
"என்றும் வேண்டும" என்றாய்!
"இருப்பினும் ஓர் குறை!
அது என்ன வான்கோழிக்கதை!
வான் கோழிக்குணம் எனக்கேதையா!
நான் உங்கள் தமிழோடு
தவழ்கின்ற தென்றலவள்!
எனக்கேது வான்கோழிக்கதை"

என்றாய் மனதோடு!
பைத்தியமே! பைத்தியமே!
அதனாற்றான்
வைத்தியமாய் பக்கத்தில்
உனக்கேது அக்குணம்
என்றுபோட்டேனே!
அசடு! அசடு!
உன்அழகிதயத்தில் குடியிருக்கும்.....

இவன் மன உதயம் புரியாததா உனக்கு!
பைத்தியம்! பைத்தியம்!
அடி! அன்புப்பைத்தியமே!
போடி மண்டு!
"வாடி என்பக்கத்தில்!" என்றதும்
ஓடிநீ வந்துதரும் வசந்தம்
என்தனுக்கு என்றும் புதுசுகந்தமே!
"தாடி" என்று கேட்குமுன்னே....

பலநூறு தருவாயே!
வாடி நீ வதங்கிட்டால்
வதங்தகிடாதோ என்மனம்!
போடி!பைத்தியமே!
சித்த வைத்தியம் என்னிடம்!
உன் அன்புப்பைத்தியம் தீர்க்கும்
சித்தவைத்தியன்
நான்என்பாய்!

தேனாகி தேன்மொழியாகி
நானாகி நீயிருக்கும்
மானே! நீ என்னை அறிவாயே!
உனக்கெழுதும்
மடல்கூறும் கதைகள் பல
உன்உடல் தழுவும்
தென்றல் என்பாயே!
அப்படியிருக்கையில் ஏனடி!

கள்ளி! உனக்கு ஏனடி வருத்தம்!
வருத்தம் விடு!
மருத்துவனாய் நான் இருக்க
வருத்தம் வேண்டாம்! வருத்தம் விடு!
கதையோடு கதை
உன் "நேசிக்கும் தென்றல்" பார்த்தாயா!
வதையோடு
இன்பவதையோடு ஒன்றாய் சேர்த்தெடுத்த....

சுடரொளியாள் படர்ந்திடும்
வளர்ந்திடும் அழகை
நீ இரசிக்காததா!
பழகும் தென்றல்
படரும்தென்றல்
பல மனங்களோடு இரசம் சேர்க்கிறதாம்!
"விரசம் கலந்தாலும்
விபரம்தெரிந்த ஆள் நீங்களென்பாய்!"

"நேசிக்கும் தென்றல்"
என்னடி சொல்கிறது பெண்ணே!
"மண்ணுக்குள் புதுமைப்பெண்ணாய்
அவள் வளர்வாள்"
என்ற நம்பிக்கை
நம்பிக் கை
கொடுக்கிறது!
நம்பிக் கை தருகிறது!

இன்றைய நாள்
நினைவிருக்கா!
அன்றைய
நாள் என்றுமே மறந்திடக்கூடுமா!
அன்று
பயணித்த அன்று
உன் கண்கள் பனித்த நாள்!
"பிரிவு" என்ற ஒன்று....

என்னையும் உன்னையும்
உடலளவில் கடல் பிரித்து
வான் வழிசுமந்து
மடலெழுதும் நிலை தந்த நாள்!
வான் மதியுனக்கு
கடலெழுதிய கடல்நீர்
உன்கண்ணிறைத்து
விழிமடல் எழுதிய நாள்!...

தழுவிவரும் தென்றல் உனை
பிரிவு மடல் தழுவிய நாள் இன்று!
பரிவு! அதனோடு பிரிவு!
இணைந்துவந்து
கடமைகள் அழைக்க
காத்திருப்புக்கு வழி
வகுத்த நாள் அன்று!
இன்று நினைத்தாலும்......

மனது கசக்கிப்பிழிகிறது!
வார்த்தைகளால்
மழுப்பி மனம் மறைத்து
"அடி!பைத்தியமே!
இன்னும் நான்கு வருடங்கள்!
காத்திரு!
பூத்திருக்கும் உன்விழிகளுக்கு
பரிசுகள் காத்திருக்கு" என்றேன்!

மனதுள் பொங்கிநின்ற துயரக்கண்ணீரை
மனதுக்குள் பொத்திவைத்து
உன்னை ஆற்றினேனே!
பக்குவமாய்
உன் பரிசுத்த இதயமதில் கண்டுணர்ந்து
"பக்குவமாய் மறைத்துவிட்டு
என்னை நீங்கள் தேற்றுவது
எனக்குப்புரிகிறது!

போய்வாருங்கள்!
என்றுசொல்ல மனதில்லை!
உங்கள் மனதோடு
நான் வருகிறேனே! தடையென்ன அதற்கு"
என்றாய்!
உன் உணர்வுகள் படம் பிடித்த
என்நிலைபுரிந்த உன்இதயமதின்
சக்தி உணர்ந்து வியந்தேன் அன்று!

இன்று நினைத்தாலும்
புத்திதான் பேதலிக்கிறது!
பைத்தியம் நான்தானடி! பைத்தியமே!
மத்தியில் மனங்களின்
மத்தியில் இடம்பிடித்த என்னால்
என் புத்தியைச்சரியாய்
வைத்திருக்க முடியாத
திண்டாட்டம்!

பக்தியோடு பல கதைகள்
பக்குவமாய் நீ சேர்த்திருந்தாய்!
சக்தியோடு சக்தியாக
சிக்குகின்ற புதிர்களுக்குப்பதில்தெரியா
புத்தியுடன் நான் இருந்தேன்!
கச்சிதமாய் புரிந்து காற்றலையோடு
சக்தியதை நீ கொடுக்க
சக்தியுள் புத்தியுள் சக்திமிக்க...

சாதனைக்கு வழிசெய்த
சக்தியுன்னால் சக்திபெற்ற சக்தியானேன்!
இன்று நினைத்தாலும்
உன்சக்திதந்த தென்பு புத்தெழிலாய்
வென்றுவிட வைக்கிறது!
'தொட்டதெல்லாம் ஜெயம்" என்ற
சக்தியாக மிளிர்கிறதே!
உடலால் பிரிந்திருந்தாலும்....

சக்தியுள்ள உணர்வாலே
சந்தித்தித்து சந்தம் இசைக்கின்ற
விந்தை யார்க்குவரும்!
நமைத்தவிர யார்க்கு அது
கிடைத்துவிடும்!
நினைவோடு நினைவுகளாய்
நினைவுகளால் மடல்வரைந்து
கனவுகளின் சங்கமத்தில்...

சங்கமிக்கும் நினைவுத்தென்றலே!

மீண்டும் மற்றுமொரு மடலில்
இளந்தென்றலாய் திங்கள் உனை வருடும்வரை.....

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3839&hl=

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

இதயம் எழுதும் மடல் (10)



உதயத்தைப்பார்த்து
இதயத்தைச் சேர்த்தெடுத்த இளந்தென்றலே!

இன்றும் மடல்வரைய
நேரம் கூடிவந்து தாலாட்டுகிறதே!
அன்றும் இன்றும் என்றும் ஒன்றுதான்!

காதல்!காதல்!காதல்!
கனவுகளில் கவிதைகளில்
கவிதை உன் நினைவுகளில்.....

காதல் மொழிபேசும் உணர்வலைகள்!
என்றும் உன்சொந்தமான
தாலாட்டுத் தென்றல்தான்!

தென்றலை நேசிக்கும்
பிரியமானவன் பிரியமாய்
மடல்களின் உரிமமாய் தவழ்ந்திருந்து.....

தவித்திருக்கும் உடல்தனுக்கு
பாலூட்டும் நேரம் இது! மதுரசப்
பாலூட்டும் நேரம் இது! "தேனூடும் இதழ்களில்...

தேன்தமிழூறும் அலைகளுக்கு இடைவெளியா!" என்றாய்!....
இடைவெளியா! இடைவளியா! காற்றின் இடைபுகுந்து
மடைதிறந்து மடல்திறந்து மனந்திறந்து பேசிவிட...

காற்றின் வெளிக்குத் தடையேது!
காற்றின் அவைகளுக்கும் தடையேது!
தவழ்ந்துவரும் தென்றலில் திங்கள்

இணைந்துவரும்போது....
தடைபோட யாருண்டு!
தடைதாண்டிவிட தடையேது!

விடைபுரியா மயங்கிடும் மனங்களுக்கு
நடைபயிலும் தென்றல்தான் விடை சொல்லிடுமே!
"அவள் அப்படித்தான் தொடர் என்னாச்சு!" என்று என்னவள்

நீ மனதோடு கேட்பது புரிகிறது!
வரிந்துகட்டி அவளை இழுத்துவர இஷ்டமில்லை!
அவள் எப்படியோ வருவாள்!

"எப்போது வருவாள்!"
என்ற கேள்விக்கு "அவள் வரும்போது
வருவாள்!" என்பதே பதிலாகும்!

"என்ன றஜனி ஸ்டைலா என்கிறாயா!"
எப்படியோ சொல்லிக்கொள்! அப்படியே அவள்
எப்படித்தான் வருவாளோ அப்படியே வரட்டும்!

"சரி! சரி! அதைவிடுங்கோ!
"நேசிக்கும் தென்றல்" சுடர்விழி என்னானாள்!" என்று கேட்கிறாயா!
யாசிக்கும் அவள் எனக்குமட்டும் சொந்தம் என்றாள்!

"உங்களை நேசிக்கும் என்னை
ஏன் வெட்டவெளிச்சம் போட்டுக்காட்டுகிறீர்கள்!" என்கிறாள்!
என்ன நினைத்தாளோ! சட்டென்று திரும்பி...

"சரி!சரி! காட்டுங்கள்! நீங்கள்தான்
கவிதைகளில் கதைகளில் பலர்
கதைகளைப் படம்பிடிப்பீர்கள்!

நல்ல மனங்களில் இடம்பிடிப்பீர்கள்!
தடைசொல்ல நான் யார்! தொடருங்கள்!" என்றாள்!
"நானும் உங்கள் வாசகிதானே!

உங்களை வாசித்து நேசிக்கும் வாசகிதானே!
வாசிக்கின்றேன்! வாசகர் முற்றமதில் பதியுங்கள்! பார்க்கின்றேன்"
என்கிறாள் இப்போது!

நிலாவவள் ஆதங்கம்
உன்தனுக்கு பொறாமைதான் தரும்!
நிலாவவள் ஓர்தங்கம்! அவள்

நீ பொறமைப்படும் ஒருத்தியல்ல!
வருத்தம் வேண்டாம்! கங்கை சடைவைத்தவனும்
திங்கள்தனைச் சூடிய விந்தைக்கதை புதிதல்லவே!

சந்தைக்கு வந்த கதைதானே!
வாடிய மனந்தனில் வருடுகின்ற தென்றல் நீ!
உனக்கு இது புரியாததா!

புரிந்ததானால்தானே....
நேசிக்கும் தென்றலானாய் நீ!
திங்களவள் முற்றமதில் இணைந்து...

தாலாட்டும் சுடரொளிக்கதிரொளி
மறைந்திருக்கும் செடிகொடிகளுக்கும்
ஒளிகொடுக்கும் நிலைதானே!

படம்பிடிக்கும் பலரின்
பொறாமைக்கு பதில் சொல்லும் நீ
பொறாமைப்படுவாயா!

இல்லையில்லை!
நீ என்றும் அந்நிலையில் இல்லையில்லை!
என்னவள் உன்னிடம் பொறாமைப்பேச்சுக்கே இடமில்லை!

உனக்கு நன்கு புரியும்!
பொறாமை மனங்களில் சுடரொளி தங்குவதில்லை!
சுடரொளி தன்னைக்கொடுத்து இனிமைதருவாள்!

தனிமைவிரட்டி இனிமை தருவாள்!
மடல்விரித்து மகிழும் இளந்தோகைமயிலவள்!
"வான்கோழி வான்மயில்தோகைப்போர்வைக்குள்

நுழைந்திட்டால் கானமயிலாகிடுமா!"
தோகைமயிலாகத்தோன்றும் பல வேடங்கள் போடும்
வான்கோழி மனிதமனமல்ல அவள்மனம்!

தேனோடு தேன்தமிழாய்
சுடர்பரப்பும் சுடரொளியாய் தென்றலாய்த்
தவழ்ந்திருக்கும் திங்களவள்!

பொங்கும் பூம்புனலாய் எங்கும்
அவள் சுடர்வீசிடுவாள்!
"என்ன! சுடரொளி பற்றிய புராணமாய் இன்றைய மடலா!"

என்று....
நீ விழிப்புருவ உயர்வு வேண்டாம்!
"சுடரொளி" என்னவோ தெரியவில்லை....

மனதோடு இடம்பிடித்த
உன்னோடு சண்டைபிடிக்கிறாளே!
அன்புச்சண்டை அது!

நீ அடம்பிடிக்காதை! அவள் அன்புப்பிரியை!
புரியாத பல புதிர்களைப் போட்டு எனைத்
திக்குமுக்காடச்செய்தவள் அவள்!

அவளை அன்போடு ஏற்றுக்கொள்வாய்!
பண்போடு மனிதப்பண்போடு ஏற்றுக்கொள்வாய்!
வெறும் "வாய்ப்பண்பாடு" பேசுபவர் மத்தியில்...

என்பாடு நீயறிவாய்!
என்னோடு இணைந்திருக்கும்
என்பாடு உனக்குப் புரியாததல்லவே!

கூட்டுக்குள் இதயக்கூட்டுக்குள்
இணைந்திருக்கும் உன்தனுக்குப்புரியாததா!
உயிரோடு ஒன்றாய் ஒரு போர்வைக்குள் உணர்வோடு....

உடல்தழுவி இதயவானில் சிறகடித்த நாட்கள்
நினைவுதர கனவுகள் உன்னோடு
உதயத்தை நாடிவிட மனதோடு....

என்னோடு என்னுயிரோடு கலந்து
உன்னோடு பேசிய நிறைவோடு......
இனிமை உணர்வோடு....

மீண்டும் மறுமடலில் தென்றலாய் வருடும்வரை...
நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3788&hl=

இதயம் எழுதும் மடல் (9)



இதயத்து உதயத்து நிலவே!


இனிமையுள்ள இதயம் ஒன்று
அன்றலரந்த மலராகி வனிதையுன்னை
வந்தடைந்த வரலாறு படைத்த விந்தை...

தனிமைதனை விலக்கி
தவிப்புக்கள் தனைநீக்கி இனிமை
உலகமதை உனைக்காண வைத்ததே!

மனிதநேயம் மதித்திட
மலர்ந்த நேயம்.. புனிதமுள்ள
மனதோடு இனிதமாக இணைந்து...

இசைவாக புனிதவேள்விக்குள்
தடம்பதித்த சுகங்கள்!
இடம்பிடித்த சுகராகங்கள்...

நடம்பயின்ற விந்தை
நயமான விந்தை!
சந்தத்தில் உன் சிந்தைகுளிர்வித்து...

"இந்த உலகில்
இப்படியும் சுகங்களா."...
என்ற புருவ உயர்வோடு.....

"எப்படியும் சந்தித்தே தீர்வது
இந்த சுகங்களை" என்று
சிந்தையில் நிறுத்திவைத்த சங்கற்பம்...

சாத்தியமானதடி!
சாத்திரங்கள் தொலைந்து சுக
சாத்திரம் ஒன்றெனக்கரைந்து...

நிறைந்திட்ட இதயம்
உதய இன்பவேள்விக்குள்
தடம்பதித்தது எப்படிச் சாத்தியமானதடி!

நீர்த்திவலைகள் வேர்த்திருந்து
சுகம் சேர்த்திருந்த விழிச்சந்தோச
நீர்த்திவலைகள்.... அகம்மலர்ந்த தாமரை

முகம் சிவந்து பார்த்தவிதம்....
யுகக்கணக்கணக்கில் பார்த்திடத்தோன்றுதடி!
இகத்தில் மட்டுமல்ல.. ஏழேழ்பிறப்பிலும் இணைந்திட்ட

சொந்தமாக எண்ணிட வைத்ததடி....
"வந்தோம் பார்த்தோம்
போனோம்" என்றா இருந்தோம்...

பார்வைகள் பரிமாறி
இதயக்கோர்வைகள் கவிதை பாடிவிட....
உதயகீதம் சந்தம் இசைத்து சுதிமீட்டிட....

வீணையாக நீயும்
மீட்டும் விரல்களாக நானும்.......
தேனுண்ணும் வண்டு தேன்நிறைந்த மலர்மீதமர்ந்து....

தென்றல் தழுவலுடன்
கூட்டும் சுகந்தமுடன் அசந்தநிலையில்
இசைந்திருந்த தேன்மலரே!..

உன்தேன்மொழி அதரங்கள்
வெளுத்துவிட...வான்கதிர்சுடரொளி
கண்ணதாஸன் கொடுத்திட்ட பாடலதாய்.......

மடிமீது தலைவைத்து
விடியும் வரை கதைபடித்து
விழிகள் சிவப்பாகி விடிந்தது தெரியாமல்......

கிழக்கு விழிபார்க்க
விழித்திட்ட கதிரவனின் சிவப்பு
உன்முகம் பரவ.....

கழித்திருந்த நாள்
மறந்திடமுடியாது..மறந்திடமுடியாதடி...
விழித்தபடி பார்த்திருந்தாய்!...

"என்னடி பார்க்கிறாய் கள்ளி.".
என்று கேட்டதற்கு.".ம்..ம்..புலவருக்கு
விடிந்தது தெரியாது சுதிநயமோ."..

"மதியோடு மதிசேர்ந்து கதிரொளியாய்
விதியெழுதும் கதைதனைப்பார்க்கிறேன்!கவியெழுதும்
காந்தவிழிக்கண்களைப்பார்த்த வண்ணம் இருக்கவேண்டும்"

என்றாய்.."போடி பைத்தியமே..
உன் கிருஸ்ணகாந்தவிழிமுன்னால்
இந்தக்கொள்ளிக்கண் எந்த மூலையடி!" என்றேன்...

கொல்லென்று சிரித்து
சில்லென்று என்விழியில் இதழ்பதித்து
நல்தவழும் தென்றலதாய் தலைகோதிவிட்டாயே..

"அலைமோதும் ஆசைகளைத்தூணடிவிடும்
உன்விழிகளது வடித்தகவிதைக்கு.....
ஆசைகொண்ட உன்னவனின் ஏழிசைகீதமடி இது."..என்று

மீட்டிநின்ற காலங்கள்..
என்றும் சேர்த்திருக்கும் கோலங்களாய்
திசைகாட்டியதன் திசைக்கு...என்னை இழுத்துவந்து...

உட்காரவைத்து
இதயம் மீட்டீய என்சுந்தரிக்கு
மடல் எழுதவைத்ததடி..

நேரம் இதயம் எழுதுவதை
மடலில் எழுதுதற்கு முடியாதநிலைதான்..
கிடைக்கும் நேரமெல்லாம் எழுதுகிறேனடி...

உடைக்கும் அணைதிறந்த வெள்ளமென
மனது எழுதுவதை மடல்
எழுதமுடியாதபடி நேரந்தான் பிரச்சனை...

இலட்சனைகள் மனது பதிக்கிறது..
உனது இதயம் எழுதும்மடல்
இன்னும் விரியுமடி..

நினைவுகளின் தழுவலோடு
சுகம்சேர்த்திருப்போம்...
கனவுகள் கவிதைபாடட்டும்...

கவிதையுன் கண்களில்
வேண்டும் வரம் ஒன்று..
என்றும் உனைத்தீண்டும் சுகம் என்றும்...

வேண்டும் வரமாக
வேண்டுமடி கள்ளி...மீண்டும்
மறுமடல்வரை இனிமைசேர்க்கட்டும் இம்மடல்...

மீண்டும் மறுமடலில் தென்றலாய் வருடும் வரை...

நன்றி
சுபம்..

அன்புடன்
ஆதித்ததாஸன்
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3615&hl=

இதயம் எழுதும் மடல் (8)



ஒன்றாய் இதயமதில் இணைந்திருக்கும் இதயமலரே!

நன்றாய் எதிர்பார்த்து எதிர்பார்த்து
"என் இதயமதின் மடலைக்காணவில்லையே!"
என்று ஏக்கமுடன் தாக்கங்கள் நிறைத்திருப்பாய்!

இதய
மன்றுதனில் எழுதுவதை
உதயமுன்றல்தனில் நீ எதிர்பார்ப்பது
நன்றுதான்! நன்றுதான்!

ஒன்றாய் உயிர்கலந்த
உன்னுறவு உனக்கும் எனக்கும்
நன்றாய்ப் பிணைந்ததுதான்!

அன்று
உன் காந்தவிழி பேசியது
இன்றும்
மனதோடு பேசுதடி!

என்றும்
இனிமையின் சுகராகமாய்
நன்று கதைபடித்து கவிதை கிறுக்க வைக்குதடி....

அன்று நனைந்து தோய்ந்து
இதயம்
பேசியதன் எதிரொலிகள்
இன்றுபோல் இருக்குதடி....

"பர்ர்த்தேன் ரசித்தேன் பக்கத்தில் அழைத்தேன்....
என்று
பாடியவன் பார்த்திருந்தால்
பல கோடிக்கவிதைகள் புனைந்திருப்பான்!

ஒன்றுமட்டும் உண்மையடி..!
உன்
காந்தவிழி பார்த்தபின்தான்
இவன்
ஏதோ கிறுக்கத்தொடங்கி...
என்
முதல் இரசிகை அதுநீதானே..

கிறுக்கனின் கிறுக்கலுக்குள்
உருக்கம் இருக்கென்றாய்...
இரக்கம் இருக்கென்றாய்...
"கருக்கிவிடும் எதிரிகளின் இதயமதை
உங்கள் கிறுக்கல்" என்றாய்..
"இரக்கமில்லா அரக்கத்தனங்களை

உருக்கி அழித்திடும் உங்கள் கிறுக்கல்"
என்றாய்...
பெருக்கிவிடும் நல்மனங்களை
உங்கள் வசமென்றாய்!

"இருக்கிறது!..இருக்கிறது! ..
உங்கள் கிறுக்கலுக்கு
சக்திஇருக்கிறது"
என்றாய்!
"என்னவோ என்மேல் உள்ள காதலினால்

கூறுகின்றாய்" என்றேன்!
"காதலினால் அல்ல
உங்கள்
ஏறுநடைதெரிந்துதான் கூறுகின்றேன்"
என்றாய்....
"உங்கள்
வீறுகொண்ட வீரம்தெரிந்துதான் கூறுகின்றேன்"
என்றாய்..
ஊறுகின்ற உன்னிதழ்கள் கூறுகின்ற அழகை
நான்
இரசித்துநிற்க..

நாணிநின்றாய்!
நாணிநின்றவாறு காதல்மொழி பேசிநின்றாய்..
ஏணியதாய்
உன்னாலே நான்கண்ட ஏற்றம்
கூற்றுவனும் நெருங்கவிடா
வாணியுந்தன் காதல் ஏற்றம்..

"காணிநிலம் வேண்டும்" என்றான்
கவிபாரதி..."கலை
வாணியுந்தன் காந்தவிழிபோதுமடி எந்தனுக்கு"
என்றேன்..
"நினைவுளதாடி!!..."

ஆணியடித்ததுபோல் அச்செழுத்துக்காரி நீ.!.
அச்சுக்குள் உன்
இதயம்
நாணிநீ சேர்த்தெடுத்த கவிதையது நினைவிருக்கா..
இன்றும் என்
இதயம்

ஏணியதாய் ஏற்றமுடன்
ஏற்றிவைத்த பலவிளக்குகள் விளக்கம் சொல்லும்..
வாணி நீ! கலைவாணி நீ!
கவிதைக்குள் நிலை வாணி நீ...
என் இதய

உதயமானவளே!
உன்
இதய அரவணைப்பில்
என்
இதயம் புலம்புவது
கவிதையல்ல..

உன்னிதயம் துடிப்பதுதான் கவிதையடி..
கண்ணே!...
"கதையும்கவிதையும் காசுதரவேண்டாம்!
உங்கள்
மனதுதனை ஆறு அதாய்
உதயசூரியனாய்
மகிழவைத்தால் போதும்" என்பாய்...

" உண்மைதானடி கண்ணே!
உன்
அன்பு அதுதான் மதுவெனக்கு...மயக்கமதைத்தந்து
மகிழவைக்கும்
உன்னன்பு
அதுவொன்றே என்றும் என்னுடன் கதைபேசும்...

உன்
பெண்மையின் நளினம் தருகின்ற
உண்மையின் இரகசியம்....அதுதானடி!
என்
மகிழ்வின் உச்சம்!" என்றேன்...
அப்படியே என்மேல் சாய்ந்தாயே!...
அன்றுதந்த

சுகம் ....
கோடிகொடுத்தாலும் கிடைக்காதே!...
இகத்தில்மட்டுமல்ல...
அகம்
தரும் சுகம் மறுபிறப்பிலும் இணையவேண்டி
இறைவனை வேண்டுகிறேனடி...

சுகங்களில்
சுகமான இராகமாய்
சுகவீணையாய் சுருதிமீட்டவேண்டுமடி கண்ணே!
சுகங்களோடு சுகநினைவுகளோடு
சுருதிமீட்டிய
இன்ப இதயவீணையே!...

மீண்டும்
மற்றுமொரு மடலோடு தென்றலாய்உனைத்தழுவும்வரை.....

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3347&hl=

இதயம்எழுதும்மடல் (7)


"கேள்வியதன் பதில்!"
---------------------
இதயத்து இனிய மனதுக்கு!

உதயத்தில் ஒருநாள்
உன் குரல் கேட்டு இதயத்தில்
மலர்வுகொண்டேன்!
இன்ப இதயத்தைக் கண்டுகொண்டேன்!

புலர்கின்ற பொழுதாகி
மலர்கின்ற மலராகி, கனிந்த கனியாகி
ஏனிந்த மாற்றம்!

இனம்புரியாத இன்ப மாற்றம்!
நானிந்த
நிலைமாற வானந்தான்,
வான் அலைதந்த கோலந்தான்,
கலை ஞானந்தான் காரணமா!

மலை தந்த மனத்தோடு,
கலை தந்த சுகத்தோடு,
கவித்தாய் தந்த அன்புப்பாலோடு,

பாடி வரும் இளந்தென்றலின் தெம்மாங்குத்
தேன் தமிழோடு,
ஓடி வரும் நதியலையாய் உள்ளம்
பாடிவர,
சூடிவரும் சுடரொளியாய் இதயம் நாடிவரும்
நிலை ஏனோ?..

கூடிவரும் மனங்களில்,
ஓடிவரும் கணங்களில், இளமை
தேடிவரும் நிலைதானோ?..

நாடிவரும் நிஜங்கள், சூடி
வரம் கேட்கையில்,
"தாவிவரும் வேட்கை, தளிர்க்கொடியின்
தழுவலதன் சேர்க்கை",
என்று கூடி இருமனங்கள் ஒன்றாய்
கூவிவரும் குரல்கள், கூறுவது என்ன!

மனங்கள் ஒன்றாய்
ஆறுவது, ஆறுதலாய் தேறுவது,
ஆறு அதாய், தேன் ஆறு
அதாய், ஊறுவதன் காரணந்தான் என்ன?..
காரணங்கள் யாதோ!

தோரணங்கள் அசைந்து, இசைந்து
மனம்மகிழ்ந்து,
காரணங்கள் மறந்து,
காவியங்கள் நினைந்து, ஓவியமாய்
நெஞ்சில் சாய்ந்து கொள்ளும்போது,

சேர்ந்து கொள்ளும்
கொஞ்சல், கெஞ்சுவது சொல்லும்,
காரணத்தைக் கேட்டால்,

"காதலதன் மஞ்சம் காதலர்கள் நெஞ்சம் கூறுவதுதானே
ஆருயிரின் தேடல் ஓருயிரின் பாடல் கூடிவரும் கூடல்"
இதுவன்றி ஏது!.......

இனிமை இதய இளந்தென்றலின் வருடலோடு
மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்
29-06-2005.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3151&hl=

இதயம் எழுதும் மடல் (6)


"ஆசைக்கனவுகள்!"
--------------------------

இனிய மலருக்கு தென்றலின் இனிய வருடலுடன்!

இயற்கை மடியில்
இறைவனின் வடிப்பில் எத்தனை
இனிமைகள்!

இயற்கை ஒன்றிய
உயரிய உணர்வுகள் புணர்கின்ற
இனிமைகள்!

இனிய தென்றலாய்
இதமாய் மனங்களில் எத்தனை
இனிமைகள்!

வானத்துச் சூரியன்
மோனத்திலிருக்கையில்,
கானத்து மேகங்கள்

மௌனித்திருக்கையில்,
கார்கால மயில்களின் சேர்காலக் கனவுகள்
கானத்துக் குயில்களின்

மோனத்தவங்களின் ஊர்கோல
நினைவுகள்,
வானத்துச் சூரியன்

வாசல் வருகையில்,
மௌனத்தவங்களின் மலரும் சுக
நினைவுகள்!

சுகங்களின் சுகங்கள்
சுகங்களின் சுகந்தங்கள்- அவை
இனங்களின்,

உயிர் இனங்களின்
சுகராக ஸ்பரிசங்கள்!
என்றும் மனங்களின் மத்தியில்,

மலர்கின்ற இதயத்தில்,
வளர்ந்திடும் எண்ணங்கள்,
முகங்களின் மலர்வுகள்,

மகிழ்கின்ற உதயத்தில்,
வளர்ந்திடும்
காதல் வண்ணங்கள்!

கனிந்துவர,
காதல் கனிந்துவர,
கார்கால சுகங்கள்,

ஊர்கோலக்கனவுகளாய்
கலந்துவர,
காதல் கவிதைகள்,

சேர்கோல சுகங்கள்,
கார்கால மயில்களாய்
இசைந்து இன்பம் கூட்டிவிட,

துன்பங்கள் தொலைந்து,
சங்கீத ஸ்வரங்களாய்
அசைந்துவரும் ஆசைக்கனவுகள்,

ஓசையின்றி இசைவாக இசைகிறதே!
இசைகினற இனிமைக் கனவுகள்
வரவுவைக்க வரும் இளந் தென்றல்
இதமாக வருடிவிட

மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை...

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்.
28-06-2005.

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

"இதயம் எழுதும் மடல்"! (5)

16-8-2005
----------
"இதயம் எழுதும் மடல்"! (5)

"வசந்தத்தில் ஓர் நாள்!"
-------------------
அன்புக்குள் சுகம் காணும் சுகராகமே!

அது என்னவோ,
உன் மனது பாடும் சுகந்த ரதம்,
எனது மனதில்
புது வசந்த ராகம் இசைத்து,
இதமாக பதமான புதுமைத் தென்றலைநிறைத்து,
பாடி வர,
எனையறியாமல் உனது மனதோடு பின்னிப்பிணைத்து,
இணைத்து இனிமைதர,
எனது கணப்பொழுதுகளையும் குவித்து,
கவி புனைய யுகப் பொழுதுகளும்,
கரைந்த கணப்பொழுதாய் மறைகிறதே!


"ஏன்" என்ற கேள்வி எழுந்தாலும்,
பதில் சரமாக புதிரதன் பதிலாய் சுதிராகம் இசைக்கிறதே!
ஏன்! உன் உயிருக்குள் காதல் பயிர்வளர்த்து,
தன்னிலை மறந்த
தேன்மலரேந்தும் மதுவாக,
தேனை அள்ளிச் சொரிந்து,
வாரி வழங்கிடத் துடிக்கிற உள்ளமாகி,
வெள்ளமாக இன்பவெள்ளமாக,
மனம் துள்ளித் துடித்து இதழ்வடிக்கிறதே!


வடிக்கின்ற தேனை,
அள்ளிக் குடித்துவிடத் துடிக்கின்ற தேன்இதழ்கள்,
இதமாக
பதமாகித் தழுவி வருடிக் கணப்பொழுதினையும்
வீணாக்காமல்,
வீணையாய் சுருதி மீட்டுகின்ற விந்தை
என்னடி பெண்ணே!
அத்தனையும் கொட்டிக்கொடுத்து அதிசயிக்க
அரவணைத்து விடுகிறாயே!


தான் எனும் நிலைமறந்து,
தேனாகி உன்னை உயிரோடு கலந்து,
கலவிக்குள் குலவி,
கவிதைத்தேன் கொடுத்து,
இன்பத் திணறலைத் தருகிறாயே!
துருவித் துருவிப் பார்க்கிறேன்!
திகைப்புத்தான் பதிலாகி வருகிறது!


அது என்ன!
மாது உன் மனதிற்குள் அத்தனை மதுமலர்ச்சி!!
புதுமலராகும் மலர்வனமாகும்,
சுகந்த நறுமணமாகும் உன் உணர்வுகள்,
சுதிராகம் மீட்டுகின்ற விந்தை!
மீட்டிவிடும் விரல்கள் மீட்டிவிட,
"மீட்டு! மீட்டு!" என்று,
இன்னும் மீட்டிவிடத்துடிக்கும் வண்ணம் செய்கிறாயே!
கூட்டிவிடும் சுகமாகிறாயே!
கன்னம் கன்றிவிடும் நாணம் கொண்டுவிட
இன்னும் கவிதையுடன் கதைகள் உண்டே!

மீண்டும் மறுமடலில் சந்திக்கும்வரை!
அன்புடன்
ஆதித்ததாஸன்
16-8-௨௦௦௫


"இதயம் எழுதும் மடல்" (4)


30-06-2005
"இதயம் எழுதும் மடல்" (4)

"நித்திரைமேகங்களின் சித்திரக் கோலங்கள்!"
--------------------------------------------------------------

உயிருக்குள் உணர்வோடு இணைந்திருக்கும் தென்றலே!

இது என்ன மர்மம்!
மதுமலர் உன் மனமலர்வில் இணைந்து,
மதி காலைப்பொழுதிற்குள் தனைமறந்து,
தன்நிலை மறந்து,
சுதி இராகமதை இணைத்து,
சுகந்தம் உன் உணர்வுக்குள்
சதிராடும் போதில்,
ஒரு சந்திப்பு!
இரு உணர்வுகள்
ஒன்றுக்குள்
புதிர்போடும், பதில் பிணைப்பு!
அதிகாலைப் புதிர்த்தித்திப்பு!

உன்மதுவிதழ் திறந்து,
மெதுவாக ஓர் தென்றலின்
இதமானமென்வருடல்!
மின்காந்தம்
உயிர்பாய்ந்து உயிர்கலந்த
அன்பான வருடல்!
முழுநிலா முற்றமதில் முழுவதுமாய்,
உன்நிலை மறந்த ஓர் தழுவல்!
தழுவலின் தென்றல்!

என்நிலை மறந்து
"என்னடி என்செல்வமே!" என்கின்றேன்!
'என்நிலை என் உயிர் மூச்சு சொல்நிலை
சொல்வது தெரியலையா!" என்கிறாய்!
"தெரிகிறதடி! தெரிகிறதடி!
புரிதல்இல்லாத உணர்வுகளா இப்படிப் பேசுகிறது!
விரிதல், மன விரிதல்,
வானத்தில் வானம்பாடிகளாய்,
புரிதல் புணர்தல்,
பூம்புனலாய் இன்பம் பெருகி ஒன்றாய்
தெரிதல்!
அது தானே உணர்தல்!
இதுதானே காதல்!
"புரியலையா" என்றால் என்னடி இதன் அர்த்தம்"
என்றேன்!

"புரிந்திருந்தும் ஏன்மௌனம்?
நான் படும்பாடு தெரிந்திருந்தும்,
விரிந்திடும் ஆசைகள் தெரிந்திருந்தும்,
ஏன்மௌனம் அத்தான்!
வருந்திடும் நிலைகள்,
வருத்திடும் நிலைகள்,
உங்களை
வருத்திடும் கவலைகள், தெரிந்திடலாமோ?
நான் தெரிந்திடலாகாதோ?
புரிந்திருந்தும்,
எனை நன்றாய்ப் புரிந்திருந்தும்
பின் ஏன் மௌனம்?"
என்றாய்!

மௌன விழிப்பார்வைக்குள் அர்த்தம்,
அது ஆயிரம்
மலர்களின் மௌன மலர்யுத்தம்!
பித்தத்தில் சித்தத்தைக் குளிரவைக்க,
மௌனமாய் இதழ்இசைத்து,
" ம்..உன் அன்புக்குள்,
அரவணைப்புக்குள்
மௌனமாய்
மோதும் பார்வைக்குள்,
மோதும் ஆசைகள் கோடியடி! மனம்
மௌனமாய் ஊறும்,
இன்ப உயிர் ஓசைகள் ஓடிவந்து,
நாடிநரம்புகளை, இனிமையாய் மீட்டுதடி!

தனிமையாய்
தவித்திருந்த நிலைமாறி,
இனிமையாய் இன்பம் கூட்டுதடி!
வனிதை உன் வரவில்,
இதயம்
இனிமையாய் துன்பம் போக்குதடி!
நீக்கமற உனக்குள்ளே,
இனிமையாய்
மீட்டுகின்ற வீணையாய்,
ஏக்கமுடன் நீ இணைகையில்,
இனிமையாய்
கூட்டுகின்ற வனிதையாய்,
என்னோடு நீ இருக்கையில்,

எனக்கேது கவலையடி!
கவலைகள் தொலைந்ததடி! கவிதையாய்
எனக்காக உனைத்தந்து
உயிர்கலந்து இருக்கையில், இனி
எனக்கேது கவலையடி!"
என்றேன்!
தென்றலாய் உனை வருடி,
எனக்காக,
எனக்குள்ளே இருக்கின்ற உனை மருவி,
இதழ் பருகி,
எனக்கேது
தடையென்ற உரிமையினால்,
உன்னிதழ்த் தேன் பருகி,

இசைத்தேன்!
இனிமையாய் நீ இசைந்து
என்மார்போடு தவழ்ந்தாய்!
"இதைத்தான்
வனிதைநான் நினைத்தேன்!
என் இதழ்த்தேன் தனைத்தான்
அத்தான், நான் தரத்தான் துடித்தேன்!
தயக்கம் என்ன! என்னிதழ்மது
அத்தான்!
அது என்றும் உங்களுக்கே அத்தான்!"
என்று இதமாக இதழ்பதித்தாய்!
முத்தான
உன் உயிர் கலந்த
முத்தங்கள் பித்தாக்க,
முழுநிலவு குளிர்சேர்க்க,

"இத்தனை நாள் எங்கிருந்தாய்!
என்நிலவே! இத்தனை நாள் எங்கிருந்தாய்!
அத்தனை சுகங்களையும்,
சுகந்தமாய் நிறைக்கின்ற
என்முத்தழகே!,
இத்தனை நாள் நீ எங்கிருந்தாயடி!
சத்தமில்லாத சங்கீத ஸ்வரங்களாய்,
அத்தனை சுகங்களோடு,
பொங்கிவரும் கடலோடு,
சங்கமிக்கும் முத்தாக,
இத்தனை நாள் நீ எங்கிருந்தாயடி!
என்செல்வமே!" என்றேன்!

"அத்தனையும்
உங்களுக்கு ஆசையாய்ப் படைப்பதற்கே,
இறைவன்
இத்தனைநாள் மறைத்திருந்தான்!
மொத்தமாய் உங்களுக்கே!
அத்தான்!
அத்தனையும் எடுத்து,
சுகம் உங்களுக்குள் சேர்த்திடுங்கள்!" என்றாய்!
இத்தனைநாள்
காத்திருந்த சுகந்தமிவள் சேர்த்துவைத்த
முத்துக்கள் இவை!
அத்தனையும்
கோர்த்து அன்பு மேனிக்குச் சூட்டிடுங்கள்!
உங்கள்

சொத்து இவை" என்றாய்!
ஒன்றாய்
உயிர்கலந்த
மூச்சுக் கலவி
முத்து அதன் வாய் திறக்க,
மௌனம்
சம்மதமாய் இதழ்விரிக்க,
கொத்துக் கொத்து அதாய்,
தேக்கி வைத்த முத்தங்கள்,
காதல்
பித்துக்குள் புகுந்துகொள்ள,
இதமாக இழுத்தணைத்து,
அழுத்தங்கள்
முத்து அதன் வாய் திறக்க,
முத்தான முத்தங்கள், முத்து முத்தாய்த்

தடம்பதிக்க,
பித்தாகிப்போனோம் நாம்!
முத்தாகி, வெயர்வை முத்துக்கள்
உடல் கொதிக்க,
தென்றல்
தெம்மாங்கு பாடியதன் கொதிப்படக்கி,
உடல் தழுவ,
இடம்பிடித்த இன்பங்கள்,
பொங்கி வழிந்திருக்கும் சுகந்தங்கள்,
மடல்விரித்த,
உன்மௌன விழி படித்த பாடங்கள்,
கடல்நிறைக்கும்!
மடல் விரிக்கும், இணைந்த காதற்பாடங்கள்!
கடல் மை கொண்டு வரைந்தாலும்,
இடம் போதாத தாள்வானம்!
அது நீள் நித்திரைமேகமதன் சித்திரக் கோலங்கள்!

மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை!

நன்றி
சுபம்
--------- அன்புடன்
ஆதித்ததாஸன்.
30-06-2005
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3083&hl=

"இதயம் எழுதும் மடல்" (3),


25-06-2005 -------
"இதயம் எழுதும் மடல்" (3)
"தனிமைக்குள் இனிமை"
----------------------------------
இனிமையுள்ள இதயமே!

இனியென்ன கவலை உனக்கு!
கனியமனம் கனிந்து வந்து கவிதைமழை பொழியும்போது,
தனிமையுள்ள நிலையில்கூட தழுவிவரும் இளந்தென்றல்,
தருகின்ற சுகந்தம் நிறைந்து வழியும்போது,
வனந்தனில் தனித்திருந்தாலும் இனித்திருக்கும் இனிய சுகந்தம்,
நிறைத்திருக்கும் இனிமை வசந்தம்!
மனந்தனில் மகிழ்வு மலர்ந்துவிடும் தனிமை வசந்தம்!

தனித்திருக்கும் மனதில்,
துணையன்பு இணைந்திருக்கும் நிலையில்,
பனித்துளியில் மனந்தான் இலயித்திருக்க,
கனிந்திருக்கும் கணங்கள்,
இனிமை இணைந்திருக்கும் சுகங்கள்,
நினைத்திருக்க நினைத்திருக்க,
இனித்திருக்கும் இன்பம்,
என்றும் தனிமை உணர்த்திவிடும் வசந்தம்!
வாழ்வில் வரவில் வைத்திருக்க,
தனித்திருக்கும்,
தனித்திருந்து இரசித்துவிடும்
நினைவுத்தென்றல் தழுவிடும் வசந்தம்!

மனந்தனில் மனதோடு மருவிநின்று
மௌனமொழி தினம் தினம் பேசிவிட,
இனம்புரியாத இனிமை,
கனந்தரும் இதயம்கூட கரைந்து,
கனம்தொலைந்து,
மனம் மகிழ்கின்ற தனிமை தருகின்ற இனிமை,
என்றுமே வாட்டம் ஓட்டிவிடும்,
நன்று காட்டிவிடும்
மனம் ஒன்றாய் கூட்டிவரும் இனிமை,
வென்றுமே, இளமை வென்றுமே,
ஒன்றாய்ப் பாட்டிசைக்கும் தனிமை,
என்றுமே இயற்கை அளித்துவிடும்இனிமை!
உனக்குள் உணர்வில் உயிரில் ஒன்றாய்க் கலந்திருக்கும் தனிமை!

நன்றி
சுபம்!
மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை!
அன்புடன்
ஆதித்ததாஸன்.
25-06-2005..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3066&hl=

இதயம் எழுதும் மடல் (2)


22-06-2
---------------------
"கனாக்காலக் கார்காலக் கவிதை!"
-----------------------------------------------

கண்களுக்குள் மனக்கண்களுக்குள் சதிராடும் சுதிராகமே!

மதிராகம் மனதோடு மனம்போல தினம்பாட,
கனமான இதயமதை இதமாக
மயிலிறகால் மருவி வருடிவிட,
தினம் தினம் கணம் கணம் கனவுக்கதவுகள்,
உன்வரவை எதிர்பார்த்து
ஏக்கத்துடன் காத்திருந்து வரவுவைக்க,
இரவுகள் இனிமையாய் உறவுக்குப் பாய்விரிக்க,

கண்களுக்குள்
கனிமொழி உன்கனவு கவிதை காணும்!
கலவிக்குள் குலவிக்கொள்ள,
மனப்புண்களுக்கு இதமாக
உன்கனவு ஒத்தடம் கொடுக்கும்!
மெத்தனவே இளமை
மெதுவாக விழித்துக் கொள்ளும்!
விழித்துக்கொள்ளும் விழிகள்
வழிமொழியும் தென்றல்,
மெதுவாக மலரணையாய் சுகமான சுகம்சேர்க்கும்!

கண்களால் கவிதைபாடி
கவிதையாய் சரமாகி,
ஈரமான இரகசியம்
இரகசியமாய் சரசத்தின்
சாரீரம்,
சாமரம் வீசுகின்ற தென்றலோடு
உயிர் ஒன்றிவிடும் சாகஸம்!
என்றுமே காதல் உயில்
உயிருக்குள் கார்மேக மழைபொழிய,
காதல் பயிரோடு பயிர்,
பத்திரமாய் சித்திரமாய்
உயிரோடு உயிர் ஒன்று கூடிவர,
ஓடிவரும் கவிதையின் கவிதை,
அது கனாக்காலக் கார்காலக் கவிதையடி!

மீண்டும் மறுமடலில் சந்திக்கும்வரை

நன்றி
சுபம்
-------
அன்புடன்
ஆதித்ததாஸன்!
22-06-2005

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3056&hl=

"இதயம் எழுதும் மடல்" ( 1), "கவிதை சொல்


1-07-2005. ----------------------
"கவிதை சொல்லும் கனவு!"
-------------------------------------------
கவிதையின் கவிதைக் கண்மணி சுகந்தமே!

காவியத்தில் இல்லாத
கனிமை! இதய உதய
ஓவியத்தில் இல்லத்தில்
அன்பின் ஒளிர்மை!

தாவிவரும் தேன்தமிழாய்,
தழுவிவரும் இளந்தளிராய்,
மேவிவரும் வான்நிலவாய்,
வருடிவிடும் இளங்குளிர்மை!

நீவிவிடும் தலைமுடியை நீ
கோதிவிட்டுக் கண்விழியால்,
மேவிவரும் உன்பார்வை,
கோர்த்திருக்கப் பலகேள்விக்கணைகள்,

து}விவிடும் துளிப்பனியாய்
தழுவியெனைத் தொடுத்திருக்க,
தாவிவரும் தளிர்க்கூந்தல்,
தவழ்ந்து சுகம்சேர்த்திருக்க, இதழ்

மேவிவரும் தேன்துளிகள்
இணைந்து அகம் துடித்திருக்க,
"காதல் சுகங்காணும் கவிதைக்கருதேடி,
மனக்கண்கள், அதன்

தேடல், யுகம் மறக்கும் நிலை தானோ?
கூடல் சுகம் காண,
காதல் கலவி சுகம் சேர்க்க,
கண்கள் சொல்லும் கவிகூட,

பாடல் சுகம் காணும் நேரம் இதுதானோ?..
போதும் இனித்தேடும்
தேடல் சுகம் காண்போம்!
வாடல்தனைப் போக்கி இதயத்தேடல்

கூடிவர, நாடிவரும் சுகம்
நாடிநமை அழைக்கிறதே! நாம்
நாடிவரும் சுகங்களை,
நாடிவிட என்ன தடை! விடை

தேடிவர, நாம் வெகுநேரமதை
வீணாய்க் கழித்திடாமல்,
கூடிவரும் சுகநேரமிது! இன்பம்
தேடிவரும் சுபநேரமிது!

பாடிவர தெம்மாங்கு இதமாகப் பாடிவர,
மீட்டும் இன்ப வீணையிது!
நாடிநரம்புகளின் துடிப்பறியும்
படிப்பாளர் நீங்கள்! இந்தப்

பாடிவரும் பைங்கிளியின்
துடிப்பறிய முடியலையா! சுகந்தமிதை
சூடிவிடத் தோணலையா? விரகதாபம்
தீர்த்துவிடத் தோணலையா!

கூடிவிடத் தென்றல் தவழ்ந்து
சுதிகூட்டிறதே! விரல் மீட்டிவிட
நாடிநிற்கும் வீணையிது! மீட்டுங்கள்!
சுகராகம் கூட்டுங்கள்!

ஒன்றாய், உயிரோடு
உயிரொன்றாய் இணைந்தபின்,
ஒன்றுசேர இன்னும் என்ன தடை?"
என்றபடி மடிசாய்ந்தாய்!

"நன்றாய் சொன்னாயடி!..
ஒன்றாய் உயிர்கலந்த, உண்மையன்பு
என்றாகிவிட்ட பின்பு,
தயக்கமென்பதேது! உன்விழிகலந்த அன்பு

வென்றாகிவிட்ட பின்பும்
தயக்கமென்பதேது! தழுவி உன்னை
தென்றலாய் அணைப்பதற்கு,
தயக்கம் என்பதேது..நெஞ்சம் என்ற

மன்றமதில், உனை அணைத்து சுகம் கொடுப்பதற்கு,
தயக்கம் என்ன உண்டு!
அன்றலர்ந்த மலர்உன்னை,
தென்றல் இவன் வருடி, சுகம் கொடுத்து,

ஒன்றக்குலவி விட,
இன்று என்ன தயக்கமடி! நன்றடி! நன்று!
உண்டுவிட, தேனை ஊற்றி நீ கொடுத்துவிட,
அன்றலர் மலர் உன்

செண்டு முகம் வருடி,
உண்டு இன்பம் பருகிவிட, அன்புமழை பொழிந்து,
"உண்டு, இகம் இந்த இன்பம்,
உயிர்கலந்து கொண்ட இன்பம்", என்று

கண்டுவிடும் மனங்கள் இவை!
இதழ்க் கவிதை சொல்லிவிடும் மிகுதி இதை!
கண்டு விடும் சுகந்தங்கள்
காத்திருக்கும் இன்பசுகந்தங்கள்,

உண்டு! இன்னும் உண்டு பல!" என்று,
உன் விழிமருவி, உன் இதழ்த்தேன்
உண்டு, கன்னம் சிவந்துவிட கன்றிவிட,
இதழ்முத்தங்கள் ஒன்றிவிட,

கண்டு வரும் கவிதைசுகம் உண்டு,
இன்னும் உண்ண உண்ண,
நன்று! நன்று! ஒன்றாய்
வென்று விடும் இளமை சுகம்,

நன்று! இன்று, நாம் ஒன்றாய்
தென்றல் வளம் சேர்க்கும்
இன்று, நன்று அடி பெண்ணே! நாம்
ஓன்று சேரும், இன்று

நன்று! என்றும் இன்றுபோல் நாம்
ஓன்றாய் சேரும், சுகம்
என்றுமே நன்றடி!" என்று உனைத்தழுவி,
உயிர்கலந்த மூச்சில்

நன்றாய் முத்தங்கள்,
உடல்மொத்தமாய்ப் பதித்தேன்! முத்தங்கள்,
நன்றாய் சித்தங்கள் குளிர,
மொத்தமாய் அத்தனையும் பரிமாறி,

"என்றுமே இதுவேண்டும்"
என்று நீ இதழ்முணுமுணுக்க,
"வருமடி! காலம் கனிந்து இன்னும்
வருமடி! என்றும் உன்

திருமடி சாய்ந்து
சேர்ந்து கொண்டு கதைபடிக்க,
வருமடி! காலம் கனிந்து இன்பம்
தருமடி!" என்று

திருமடி சாய்ந்தேன்! தென்றல்
சுகந்தமாய் சுகந்தம் நீ,
"கருமணியாக காத்திருப்பேன்!
கண்மணியாகப் பார்த்திருப்பேன்!

பெருநிதியாக நினைத்திருப்பேன்!
உங்கள் அன்பை,
வருநதியாகச் சேர்த்திருப்பேன்!
பொங்கும் சுகங்களாய்,

அருமதியாகக் குளிர்
சேர்த்திருப்பேன்" என்றாய்!
அருமருந்தான உன்
விருந்து வாயமுதம் சிந்திய,

பெருவிருந்தான உன்இதழ்
விரித்த சுகம்சேர்க்க,
அருவிருந்தாக உனை
அரவணைத்து, அதரம்பதித்து,

வருவிருந்துக்கு வரவுவைத்து
வருடிவிட, மருவிவிட,
"அருமலர்ந்த அந்தப் பொழுது புலர்ந்ததே" என்று
அருமலர் உன்அதரம் அசைந்து இசைத்துவிட,

அருபுலர்ந்த அந்த
அதிகாலைப் புலர்பொழுது,
அருமருந்தான அந்த
விருந்து தந்த சுகத்தோடு,

இகம்மறந்தோம் நாம்!


நன்றி
சுபம்
---------
மறுமடலில் சந்திக்கும் வரை
அன்புடன்
ஆதித்ததாஸன்.
1-7-2005

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3041&hl=