செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

இதயம் எழுதும் மடல் (13)


இனிமைநிறை இதயத்தின் இன்பவருடலுடன்
இணைந்துவரும் இதயநிலவே!

இனிமைத் தைமகளும்
மலர்ந்து மணம் பரப்பும்
இன்பவேளையிது!....

துன்பங்கள் தொலைந்து
இனிமைத்தேடல்கள் இதயங்களின் உதயமாகும்
இன்பவேளையிது!......

புதிய உதயங்களின் சங்கீத இலயங்கள்...
சந்தம் இசைத்துவிடும் சங்கத்தமிழ்த் தையாள்
சுந்தரமாய் பொங்கிவர.....

"பொங்கலோ பொங்கல்" என்று
பொங்கிநின்ற உள்ளங்கள்...

பொங்கிநிற்கும் நம்பிக்கை
பூத்துக்குலுங்கிவிட....
சேர்த்துவைத்த ஆசைகளின் நாத்துக்கள் துளிர்விட....

பாஷைகளின் மௌனவிழிப்பாஷைகளின்
ஆசைகளின் உந்துதல்கள்......
உந்தித்தள்ளிவிட....

நந்தவனமயில்களின் நர்த்தனங்கள்
நந்தவனமலர்களின் முத்தத்தில்
சித்தங்கள்குளிர்ந்துவிடும்.....

புத்தம்புது சிந்தனைகள்
சந்தம்இசைத்துவர....
சந்தனத்தென்றல் சந்தோஷம் கூட்டிவிட.......

நந்தவனக்குயிலே! என்
சிந்தைவனக்குயிலே!
சந்தோஷக்கணைகளாக சங்கமிக்கும்...

சங்கத்தமிழ்க்காதலன்! உன்
சிந்தைகவர்கள்வன்....
இவன் இதயம் எழுதும்மடல்!

உனக்காக.. இவன் இதயம் எழுதும் கடல்!
இவன் வலம்வரும் உலகத்தில்
இவனோடு இணைந்துபயணிக்கும் சுந்தரியே!

உனக்காக....
மடல்கள் கடல்போல் விரிந்திருக்கும்! மனக்
கடலில் என்மனக்கடலில் மலர்ந்துவரும் மடல்கள்.....

உனக்காக..
வளர்ந்துவரும் மடல்கள் ஏராளம்!
எனக்கான உனக்காக விரிந்துவரும் மடல்கள் தாராளம்!

விசைப்பலகை
விரட்டாத வீணையாக மீட்டுகையில்
இசைந்துவரும் விரல்கள் சுருதிபிசகாது இசைத்துவிடும்!

இருப்பினும்....
நேரம் போதாத நிலைதான்!
தூரம்போய்நின்ற பயணங்கள் நிலைதான்!

தொடரகின்ற மடல்களின்
தடைகளின் விடையென்பதை....
நான்சொல்லியா நீ அறிவாய்!

தடைகள் தாண்டிவந்து...
விடைசொன்ன காதலின் மோதல்சகியே!
பாதைகள்.... பயணங்கள்.....

விடைதேடும் வேளைகள்.....
விடியல்களை வரவுவைக்கும் நேரங்கள்!
வருகின்ற விடியல்கள் பலர்வாழ்வுக்கு வரவுவைக்கும்....

துருவங்களை இணையவைத்து.....
பலர்வாழ்வுக்குப் பாலமிடும்!
வருகின்ற வசந்தங்கள்....

நல் மனங்களுக்குள் "சொந்தங்கள்
தரும்" என்ற நம்பிக்கை...
தினம்தினம் காத்திருப்புக்கள்!

காத்திருப்புக்கள் கனிந்துவந்து
கதவுகளைத்தட்டி சேர்த்திருப்புக்கு வழிசொன்னால்...
அதுதானே சொர்க்கம்!

நல் மனங்களைத் தாலாட்டி....
நல் மனங்களைக் குளிர்வித்து...
தொல்லைகளை நீக்குகையில் கிடைக்கின்ற இன்பம்.....


"அடுத்தவர் நலத்தை
நினைப்பவர்தமக்கு ஆயுள் முழுவதும்
சுபதினம்" என்பான் கவியரசன்!

சுபதினங்கள் கூடிவர...
சூழ்சோகங்கள் கலைந்துவிட...
நடந்துவரும் நாட்கள் நம் முயற்சியின் வேகங்கள்!

"முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார்!" என்பதெல்லாம்
மனதோடு பின்னிப்பிணைந்த அநுபவ ஞானங்கள்!

முயற்சியுடன் முனைவோம்!
முடிந்தவரை தொடர்வோம்!
"விடியும்" என்ற நம்பிக்கை எழுச்சியுடன் நடைபயில்வோம்!

வெற்றி நம்கையில்!
சுற்றிவரும் மனங்கள் வசம்
சுபதினங்கள்!......

எழுவோம்! ...
எழுவோம்!....
எழுகதிராய் படர்வோம்!.....

நல்மனங்களின் துயரங்கள்
துடைத்திடவே நடைபயில்வோம்!
கல்மனங்களையும் கரைத்திடவே
விடைகொடுத்திடுவோம்!தொடர்ந்திடுவோம்!

மீண்டும் மறுமடலில் உனைத்தென்றலாய் வருடும்வரை..

அன்புடன்
ஆதித்ததாஸன்
நன்றி!
சுபம்!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4078&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக