செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

இதயம் எழுதும் மடல் (15)

இதயத்தில் மணம் வீசும் அதிகாலை மலரே!

உன்
உதயத்துச்சூரியனின் இதயம் எழுதும் மடல்
இன்றும் மலர்கிறது!

மலர்ந்திருக்கும்
இனிய அதிகாலைப்பொழுது இது!
மலர்ந்திருக்கும் இதய நந்தவனத்தில் உதயமாகும்.......

புலர்ந்திருக்கும்
என் எண்ணமலர்கள் என் இனியவண்ணமலருக்கு......
புலர்ந்திருக்கும் புத்தம் புதுக்காலைப்பொழுதில்....

பூமாலைச்சரமாக
கோர்த்தெடுக்கும் நேரம் இது!
பாமாலையாய் நேர்த்தியாகத் தொடுத்துவிடும் நேரம் இது!

நேரம்!
அற்புதமான நேரம்! சிற்பச்சிலையழகை.......
நேர்த்தியாகச் சேர்த்தெடுத்து மடிமீது சேர்த்தெடுத்து.........

பாரங்களை இறக்கி
மனப்பாரங்களை தூரத்தே இறக்கிவைத்து........
நேரங்களை மறந்திருந்து சுதிராகம் மீட்டுகின்ற இன்பநேரம் இது!

தூரங்களை
மனக்கணக்கில் பதித்து சற்று சிந்தனைக்கு
வேலைகொடுத்து படுக்கையில் வந்து புரண்டபோது.......

இதயத்து மலர் நீ!
"என்னங்க! என்ன தூக்கம் வரவில்லையா!
இதயத்தில் என்ன பாரம்! என் உதயத்துச்சூரியனே!

உங்கள்
இதயத்தில் என்ன பாரம்!" என்று
என்கண்ணோரம் கண்வைத்து....

இதயத்து நாதம்
இதமாகத்தாளமிட நெஞ்சோடு சேர்த்துநின்று........
விழியாலே வினாத்தொடுத்தாய்!

மௌனமொழியாலே
ஏக்கங்கள் சுமந்துநின்று
"உங்கள் இதயபாரத்தை என்னிடம் இறக்கிவிடக்கூடாதா!"என்று

ஏங்கிநின்றாய்!
"தாங்கிநிற்க நானிருக்க
தயங்காமல் கூறுதற்கு என்ன தடை!" என்றாய்!

உன் மௌனவிழிப்பார்வைகள்
படம்பிடிக்க இடம்பிடிக்கும் வடம்பிடிக்கும்.....
உன் அன்புவடப்பிடிப்புக்குள் அடங்கிவிட நான் துடித்தேன்!

என் துடிப்பறிந்து
மார்போடு சேர்த்தெடுத்து என்னை
உன்மடிமீது தவழவிட்டு மயிலிறகாய்....

உன் மயிலிறகு விரல்களினால் வருடிவிட்டாய்!
"ம்....இப்போது கூறுங்கள்! என்ன மனத்தின் அழுத்தம்!
வருத்தம் தந்த மனத்தின் அழுத்தம் என்ன! கூறுங்கள்!" என்றாய்!

"தேன்மொழியாளே!
வான்நிலவாய் நீ குளிர்மைதர
எனக்கேது வருத்தமடி!

வான்வழி தவழ்ந்துவந்த சேதியொன்று
என்சிந்தையைக் கிளறியது!
என்வழிதனில் என்மனவழிதனில் புகுந்துகொண்டு....

ஏதேதோ உளறியது!
என்எதிர்வழி நின்று ஏதேதோ கதைபேசியது!
இனம்புரியவில்லை!இதயத்தில் கனம் தெரிகிறது!

எடுத்துச்சொல்லத்தெரியவில்லை!
எப்போதோ எங்கேயோ பார்த்தமுகம்!
பார்த்துப்பேசிய முகம்போல் தெரிகிறது!

இப்போது வந்து
என்னோடு பேசிவிடத்துடிக்கிறது போன்றதொரு உணர்வு!
என்னவென்று புரியவில்லை! ஏதென்று புரியவில்லை!

இதயமதில் அது
மீளாக்கனத்தோடு இருப்பது தெரிகிறது!
இதயத்துவேதனைக்குவடிகாலாய்.........

வருந்தியழைக்கிறது!
'மருந்து நீதான்!' என்கிறது!
'புரிந்தும் புரியாத புதிர்போல் சதிராடுகிறாய்!' என்று

என்மேல் எகிறிவிழுகிறது!
காரணம் புரியவில்லை!
என்னிதயம் கனக்கிறது! அதுமட்டும் எனக்குத்தெரிகிறது!

உன்னிதயம் துடிப்பது எனக்குப்புரிகிறது!
என்னிதயத்துக்கனமதை இறக்கிவைத்துவிட
உன்னிதயம் துடிக்கிறது எனக்குக்கேட்கிறதே!"

என்றபடி உன்மடியில் தவழ்கிறேன்!
எனைச்சேர்த்தெடுத்துக் குழந்தையைப்போல் முத்தமிட்டு......
இதமாக என்னை வருடுகிறாய்!

"குழந்தைமனம் உங்களுக்கும் இதயமதில் பாரமா!
கூடாது! இருக்கக்கூடாது!" என்று கட்டிஅணைக்கிறாய்! பலகதைபேசுகிறாய்!
தொட்டில்குழந்தைபோல் தாலாட்டுப்பாடுகிறாய்!

"அமைதியாகத்தூங்குங்கள்!
அதிகாலைவேளையிது! அமைதியாகத்தூங்குங்கள்" என்று
அழுத்திச்சொல்கிறாய்!

"ஓ! அதிகாலைவேளையாடி!
அப்படியா சங்கதி!சுதிராகம்பாடுகின்ற
இன்பவேளையன்றோ! இது மதுவுண்ணும் நேரமன்றோ!

இதழ்மதுவுண்ணும் நேரமன்றோ!
புதுமலராய் மலர்ந்திருக்கும் மலருன்னில்
இந்த மதுவுண்ணும் வண்டுக்கு வேளையிதுவன்றோ! இன்பவேளையன்றோ!

இப்போது உறக்கம் என்னடி உறக்கம்!
இதுகிறக்கமன்றோ! இன்பக்கிறக்கம்!
வாடிகண்ணே! வாடி! புதுராகம் பாடிடநீ வாடி!

வாடிவிடும் வேளையல்ல!
இதயம் வாடிவிடும் வேளையல்ல!
உதயகீதம் பாடிவிடும் வேளையிது! வாடி என்வீணையே!

நாதம் இசைத்துவிட விரல்கள் துடிக்கிறதே!
இன்னும் என்ன சோககீதம்! இன்னும்என்ன எனக்கு இதயபாரம்! வாடி!
நாடித்துடிப்பறிந்து இதயநாடித்துடிப்பறிந்து......

மருந்தை விருந்தாக்கும்
சித்தவைத்தியையடி நீ!
கோடுகாட்டிக்காட்டிய பின்னும்......

அந்தக் குறிப்பறியாத முட்டாளா இவன்!
மாடிவீடென்ன மண்குடிசையில்கூட....
மனந்தரும் சுகந்தமதை மனத்தோடு இணைத்துவிடும்.....

மயக்கம் தரும்முற்றத்து மல்லிகை நீ!
என்மனமுற்றத்து மல்லிகை நீ!
உனக்காக ஓர்கவிதை! எழுதிவிடத்துடிக்கிறது!

உன்வீணைநரம்புகளை மீட்டி
உனக்காக ஒர் இராகம் பாடிவிடத்துடிக்கிறது!
வாடி என்கப்பக்கிழங்கே!வாடி! வாடிகள்ளி" என்கிறேன்!

என்வீட்டுக்கடிகாரம்
சொல்லிவைத்து அடிப்பதுபோல்
மூன்றுமுறை அடிக்கிறது!

கண்விழித்துப்பார்க்கிறேன்!
கண்டது கனவடி! கடிகாரத்தை பார்க்கிறேன்!
நேரம் அதிகாலை மூன்றுமணி!

ம்..............ம்.........சுதிராகம் மீட்டிவிட
இதமான வேளைதான்! என்னசெய்வது!
எழுந்துவந்து விசைப்பலைகையை வீணையாக.....

உனை எண்ணி...
இன் இதயத்து உதய நிலவுக்கு....
இம்மடலைவரைகின்றேன்!

"அதுசரி! யார்அந்தச்சக்களத்தி!
உங்கள் நித்திரைக்கு எமனாய் வந்து
தொந்தரவு செய்த அந்தச்சக்களத்தி யார்" என்று எனைக்கேட்கிறாயா!

"போடி! அதற்குப்பதில் வாராது!
ஏனென்றால் எனக்கே அவள் யாரென்று தெரியவில்லை!
தெரிந்திருந்தால் இந்த அதிகாலை வேளையில்....

உனக்கு மடலா வரைந்துகொண்டிருப்பேன்!!!!!!!
அடி! போடி பைத்தியமே! நீ சிரிப்பதற்காக.......
நீ மனம் விட்டு இம்மடல்பார்த்துச்சிரிப்பதற்காக..........

இருபினும் "இந்த ஆம்பிளைங்களே
இப்படித்தான்" என்று உன் இதயம் பேசுவது எனக்குக் கேட்கிறதடி!.....
அதுதான் வைரமுத்துவே சொல்லிவிட்டாரே.."ஆண்களில் இராமன் கிடையாது"......என்று

"சரி! சரி! வைரமுத்துவைத் திட்டாதே1....
அவர் என்ன செய்வார்...பாவம்..சினிமாவுக்குப்பாட்டெழுதவந்தால்
உள்ளதையும் எழுதவேண்டிவந்துவிடுகிறதே....

உண்மையும் அதுதானே.....
வாழ்வியலின் யதார்த்தம் அதுதானே....
நகைச்சுவைக்காகக்கூறினேன்.....நீயும் கொஞ்சமாவுதல் சிரிப்பாயல்லவா...

வைரமுத்து கோவிக்கமாட்டார்!'
என்ற நம்பிக்கையில்தான்....
பார்க்கலாம்... அடுத்துவரும் மடல்களில்....

வைரமுத்துவின்
கவிதைவரிகளில் நான் இரசித்தவற்றை
நேரம் கிடைக்கிறபோது உன்கூட மடல்மூலம் பகிர்ந்துகொள்கிறேனே.....

அவருடைய "தண்ணீர்த்தேசம்" என்ற
கவிதைத்தொகுப்பை எடுத்துப்பார்! அதில்
எத்தனையோ விஞ்ஞானப்புள்ளிவிபரங்கள்...

மெஞ்ஞானத்தோடு சண்டைபிடிக்கவைக்கும்...
அற்புதமான கவிதைத்தொகுப்பு அது.....
"சரி! சரி! அதிகாலைவேளையில்.....

இன்னும் கொஞ்சநேரம் பாக்கி இருக்கிறது!
வாருங்கள் சற்று சங்கீதம் பாடுவோம்" என்று
மனத்தினால் நீ கூடுவது உணர்வலைகளில் புரிகிறது!

அதிகாலை வேளை! ஆனந்தக்கோலம்!
சுதிராகம் பாடும் இதயம் சுகமான நேரம்!
மதிகாலை வேளை மயக்கங்கள் நாடும்!
புதிராகும்! கூடும்! இதயம் புலர்காலை தேடும்!

இதமான இளந்தென்றல்தாலாட்ட தென்றலோடு
தென்றலாய் மறுமடலோடு உன்னை வருடும்வரை....

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4144&hl=

நன்றி
சுபம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக