வெள்ளி, 2 அக்டோபர், 2009

இதயம் எழுதும் மடல் (19)


இதயத்து உணர்வுகள் ஏராளம்! என்
இதயத்துள் இடம்பிடித்த என்னவளே!மன
உதயத்துள் உள்ளவைகள் தாராளம்!தின
உதயத்துள் படம்பிடித்து வடம்பிடித்து

இதமாய் இழுத்தணைக்கும் மடல் உனக்காக...

சுற்றிவரக் காடுகள்!இதயம்
பற்றிப்படர்ந்த அந்தக்கிராமம்!
சுற்றிவரும் நீரோடைகள்!

சுழன்றுவரும் மனவுணர்வுள்
சுகந்தம் தரும் மலர்வனங்கள்....
சுழன்றுவரும் ஆசைகளால்....

சுகந்தச் சரம்தொடுக்க...
மகரந்தச்சுகம் கொடுக்க...
கரம்இணைக்கும் கோலங்கள்...

அழகுமயில் நீ!அன்றலர்ந்தமலராய்...
அழகுநடை பயின்று அந்தவீதியில்...
அழகுமலர்ப்பார்வைகளால் வடம்இழுத்தாய்...

இளமைமிகு இனிமைமலர்...இதழ்
இளநகைக்கோலங்களால் கோடுபோட செவ்
இளநீர்ச்சேலைக்குள் சோலையதாய்...

பழமையில் தோய்த்தெடுத்த
பார்வையில் நாணங்கள்....
இளமைதனைச் சீண்டிவிட...என்

பார்வையில் பதியம்வைத்த திங்களே...இதயக்
கோர்வைக்குள் சிக்கினாயே அன்று...கவிக்
கோர்வைக்குள் சுதியானாய் இன்று....

"பார்க்கவேண்டும்...கணம்தனும் பிரியாது
பார்வையோடு பதிக்கவேண்டும்" என்ற
தீர்வோடு மனம்படம்பிடிக்க....

"என்னடா இது வீண்வம்பு
வேண்டாமே!" என்று
கன்னத்தில் இதயம்......

இரண்டுபோட்டதுபோல் உணர்வோட...
பின்னலிட்ட கூந்தல்
திரண்டுவிடும் ஆசைகளால்...

"கன்னத்தில் முத்தமிடத்தயக்கம்
என்ன!" என்றுசொல்ல..கூட்டல்
பின்னமாய் சித்தம் குளிர்ந்துவிட.....

திருட்டுப்பார்வைக்குள் மின்னலாய்
உருவெடுத்தாயே நீ....
இருட்டுப்போர்வைக்குள் ஒளியாகிப்போனாயே நீ!

இரகசிய இனிமை நாடகத்துள்
இரகசிய இதயங்கள் சங்கமத்துள்
இரசனைகள் இடம்பிடித்த வண்ணம்...அடடா..

இரகசியமாய் முகவரிகூறி....
இரகசியச் சந்திப்புகள்...இனிமைச்சந்தங்கள்...
இரவுபகல் என்றில்லா இனிமைநிறைத்தித்திப்புக்கள்...

சிவந்த நிற மேனி மேலும்
சிவந்துவிடும் இதழ்ச்சத்தங்கள்...கன்னம்
சிவந்துவிட நாணங்கள் சுதிசேர்த்தகோலங்கள்...

"சிவ சிவா..என்னடா இது!" என்று
சிவமாய் சிவத்தோடு சிவமாய்...
சிவந்துநின்றாயே...இரண்டறக்கலந்தாயே அன்று...

"உடல் இணைந்திருக்கும் கணங்கள் இதழ்
மடல்வரைந்திருக்கும் சுகங்கள்...
கடல் கடந்துசென்றாலும் மறந்திடாதே!" என்றாய்!

"கடல் கடந்தால் என்ன...
உடல் பிரிந்தால் என்ன...உயிர்
உணர்வாய் இணைந்து வாழுமே!"என்றேன்!

இன்று நினைத்தாலும் இனிக்குதடி என்னவளே...
என்றும் தென்றலே! நீ பொங்கிவரும் கங்கையே!
ஒன்றி இணைந்துவிட்ட திங்களே!..இனிஎன்றும்
கன்றிவிடும் இனிமைக்கோலங்களே!...

கோலங்கள் தொடரும்..இனிமைக்
காலங்கள் வளரும்!கவிக்
கோலங்கள் மணம் நிறைக்கும்!
மீண்டும் மறுமடலில் இதமாய் உனைத்தீண்டும்வரை...

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக