சனி, 30 மே, 2009

சித்திரையே


சித்திரையில் மலர்ந்த சித்திரையே!
முத்திரையில் நிறைந்த முத்தமிழே!
நித்திரைகள் தொலைக்க வைத்து
முத்திரைகள் பதிக்க வைத்தாய்!

எத்திசையில் திரும்பிடினும்
அத்திசையில் நிறைந்துவர
ஒத்திசைவாய் விரும்பிடுவாய்!
முத்திசைவாய் நிறைந்திடுவாய்!

சித்திகளை நிறைத்து இதய
சுத்தியுடன் நிறைந்து உதய
வித்திகளை வளர்த்தாய்! புதிய
உத்திகளை மலர்வித்தாய்!

சித்திரமே! சித்திரையே!இனிய
பத்திரமே! பைந்தமிழே!புதுமை
முத்திரைகள் தொடர்ந்திடவே இதய
சித்திரையே! நீ படர்ந்திடுவாய்!

சேதி சொல்

ஆதி வந்த மனித இனம்
பாதிவழி தாண்டுகையில்
மீதி மந்த மிருக மனம்
நீதிவழி தாண்டியதே!

சேதி சொன்ன கவிமனதின்
பாதி உயிர் பிழிந்தெடுத்து
சாதி சனம் பிரித்தெடுத்து
நாதி இன்மை யாக்கியதே!

போதி மரப் புத்தனும்
நீதி சொன்ன தத்துவங்கள்
வீதி தன்னில் விழி பிதுங்கி
நாதி யற்று நிற்கிறதே!

"ஏதிவனும் புலம்புகிறான்
பாதிவிழி அலம்புகிறான்" என்று
மாதிவளும் விழிபிதுங்குகையில்
மீதிவழி யாதோ! மீண்டிடுவான்தானோ!

ஆதிவந்த மனிதமனம்
நீதி கண்ட நெறிமுறைகள்
நாதியுடன் நிமிர்ந்திடுமா!நல்ல
சேதி வந்து செவி சேர்ந்திடுமா!

போதி மரப்புத்தன் திரும்பிடுவானோ!
நாதி யற்ற மனங்கள் நலம்பெற்றிடுமோ!
சேதிசொல் தாயே! தரணித் தாயே!
நீதியற்ற நிலைமாற்றி நிம்மதிசேர்ப்பாயே!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9058&hl=

பாவுக்குள் நிறைந்தவள்!

பூவெழுதும் கவிதைக்குள்
பூவையிவள் கதைகள்!
நாவொழுகும் தமிழுக்குள்
பாவையிவள் இன்ப வதைகள்!

கோவெழுதும் கவிதைக்குள்
கோவையிதழ் அடக்கம்!
பாவெழுதும் கவியே!இப்
பாவையிவள் உம் மடக்கம்!

'பாவெழுத வேண்டும்!உமைப்போல்
பாவை நான் எழுதவேண்டும்!" என்று
பாவெழுதும் பாவலனே!உமைப்
பாவைநான் வேண்டிநின்றேன்!

"நாவெழுதும் நாயகியே
பாவையுன் வசமடி!நீ
பாவெழுத நான் ஏனடி!
கோவையே! நீ கவி தையடி!"

"பூவெழுதும் கவிரசிக்க
பாவையுந்தன் இதழ்படிக்க
பாவெழுதும் பாவலனே
பாவையுன்னுள் அடக்கம்!" என்றீர்!

"நாவொழுகப் பேசுகின்ற
நாவலனே!நீர் பேசும்
பாவழகுப் பைந்தமிழில்
பாவையிவள் தஞ்சம்!'என்றேன்!

"பூவழகுப் பெண்மயிலே!
பூவையுந்தன் முழுவழகும்
பாவெழுதப் பாவெழுதப்
பாவையே! படரலையே!"

"மூவழகுத் தேவதையும்
பாவையுன்னுள் தஞ்சம்!" என்று
நாவழகுத் தமிழாலே நீர்
பாவைப்போல் படம்பிடித்தீர்!

கோவழகுச் சுந்தரனே!இதழ்ப்
பாவையிவள் இதயவிரிப்பினிலே
கோவழகுச் சிரிப்பினையே வெற்றிக்
கோவையாக்கிக் கொண்டாளே!

பூவெழுதும் கவிதைக்குள்
பூவையிவள் கதைதானே!
பாவெழுதும் பாவலனுள்
பாவையிவள் நிறைந்தாளே!

பூவெழுதும் புதுமையிதோ!
பாவெழுதும் பதுமையிதோ!
பாவெழுதும் பாவலனே!
பாவெழுதும் பாவைதனையறிவீரே!

நாவெழுதும் நாயகனே!
பாவை நாயகிநிலைதான்!
கோவெழுதும் கவிதைக்குள்
பூவையிவள் படர்தொடர்கதைதான்!

பாவெழுதும் பாவலனே!
பாவையுமக்காகத்தான்!இப்
பூவெழுதும் பாவைக்குப்
பாவைப் பதிலாக்கீரோ!

பாவையிவள் பார்த்திருப்பாள்!
கோவையிவள் சேர்த்திருப்பாள்!
பூவையிதழ் சேர்த்திருக்க நீர்
பாவைப் பதிலாக்கீரோ!

கலையான கண்மணியே!

கவிதையே! கவிதாவே!
காவியமாய் ஆனவளே!
செவியோடு இதழ்மருவி
பாவிதழால் பகர்வாயே!

கவியாவும் நீயாக புவி
கவிபாடும் கவிஞனிவன்
கவிக்காற்றோடு பேசுகின்ற
கவியிதனை அறிவாயோ!

நேற்றுவரை நினைவுகளை
நேர்த்தியுடன் மீட்டியவன்
காற்றுலகில் கனவுலகில் உன்
கீர்த்திதனைப் பாடுகின்றான்!இவன்

ஊற்றிவரும் உணர்வுகளைப்
பார்த்திருப்பாய்! சேர்த்திருப்பாய்!நீ
போற்றுகின்ற பாட்டாவாய்!
சேர்த்துவைக்கும் கூட்டாவாய்!

கார்த்திகை மாதத்துப்
பனிபோலும் பாவையே!
நேர்த்தியுடன் நிறைந்துவிடு!
இனியாவும் புலர்பொழுதே!

சீர்தனங்கள் புன்சிரிப்பாய்
ஊர்தினமும் மெச்சிடவே
பார்புகழ வைத்திடுவாய்!
பார்திகழும் பார்வையே!நீ!

ஏர்பிடிக்கும் உழவன்போல்
கவிவடிக்கும் கவிமனதில்
நீர்நிறைத்து மகிழாயோ!
கவிமதி நிறைத்து அருளாயோ!

கவிதையே! கவி தாயினியே!
கலைவாணியே! கவி ராணியே!
கவிதையாய்க் கை தவழ்வாய்!
கலையாகி வா கண்மணியே!


ஏனிந்த சோகம்.


அழகிய உன் காந்த
விழிக் கண்களில்,
பழகிய காலங்கள்,
இழகிய மனதோடு நீ,
பழகிய காலங்கள்,
நீந்துகின்ற விண்மீனாய்,
அழகிய உன் சாந்தவிழிகளில்,
சேர்ந்திருக்கும் சோகமென்ன!

இழகிய இதயத்தில்,
இனிமைகள் தழுவிடும் உதயத்தில்,
பழகிய இதயம், தனிமையைத்
தழுவிடும் இதயம்-தன்
உளவியல் பாடத்தைக்
கற்பித்த காட்சிதானோ!
களவியல் வேடத்தைக்
கலைத்திட்ட சாட்சிதானோ!

"இழகிய மனங்கள் என்றுமே
சோகத்தைத் தழுவும்" என்று
பழகிய தினங்கள், ஒன்றாய்
மோகத்தைத் தழுவிய கணங்கள்-உந்தன்
அழகிய மனத்தில், நன்றாய்
விதைத்திட்ட கோலந்தானோ!
பழகிய மனத்தில், ஒன்றாய்ப்
பழகிய மனத்தில், வந்த பிரிவினால் சோகந்தானோ!

அழகியுன் சீர்குலைத்த,
அந்தகன் யாரோ பெண்ணே!
பழகியுன் வேர் அறுத்த,
மந்தகன் யாரோ பெண்ணே!-உன்
இழகிய மனத்தைக் கண்டு,
இரக்கத்தின் நிலையைக் கண்டு,
அழகிய வனப்பைச் சிதைத்த,
அரக்கன்தான் யாரோ பெண்ணே!

பழகிய நிலைகள், உன்னைக்
கொல்வது புரிகிறது!
இழகிய நிலைகள், தன்னைத்
துரத்திட, தொல்லைகூட்டிட,-உன்
அழகிய கண்களில், நீர்த்திவலைகள்
சொல்வது தெரிகிறது!
பழகிய பண்பில்லாக் கயவனை மறந்திட்டு,
உலகியல் தன்மையை நீ உணர்ந்திடு!

இழகிய மனத்தினில், இதயத்தைக்
கசக்கிடும் நிலைகளைக் களைந்திட்டு,
அழகிய உலகத்தில், உதயத்தைக்
கண்டிடும் நிலைகளைத் தேர்ந்தெடுத்து,
அழகிய மனங்களை, உதவிடும்
மனங்களை, அறிந்து உன் உதவி,
இழகிய மனங்களைச் சேர்ந்திட, தினங்களை
வரவிட, உன் இதயத்தைத் திடப்படுத்து!

அழகிய உலகமிது! அழகில்லா
மனங்களால், சிதைபடும் உலகமிது!
இழகிய மனங்கொண்டு அரக்கரைப்
பார்க்காதே! உன் இரக்கத்தை,
இழகிய மனங்களோடு இனிமையாய்ப்
பகிர்ந்து விடு! அழகிய உலகம்-உன்
அழகிய கண்களில் தெரியும்!
அழகோடு அழகாய் உலகத்தை நீ அழகாக்கிவிடு
!


இன்றே எழுந்துவிடு




நன்றும் தீதும் பிறர்தர வாரா!
என்று ஆன்றோர் வாக்கு ஒன்று!
என்றும் எதிலும் நிதானம்,
நன்றாய் ஒன்றாய் திடமதில் தெளிந்து, இதய
மன்றில் மாது சிந்தையை நிறைத்து,
உண்மையை வளர்த்து, தண்மையாய் இணைந்து,
ஒன்றில் ஒன்றாய் நன்றாய் நடைபோட,
என்றும் இல்லையே துன்பம்!

ஒன்று உண்மை! உனை நீ உணர்ந்து,
நன்று மனங்களை எடை போடப்பழகு!
என்றும் பெண்மை தனை நீ மதிப்பாய்!
உனை மிதிக்க நினைக்கும் மனமும் திருந்தும்!
என்றும் திருந்தும்! உனை மறைத்தும்
உனை நீ ஏய்க்க நினைத்தால்,
என்றும் வருந்தும் நிலைதான் தொடரும்!
உனை நீ மாய்க்கும் நிலைதான் வளரும்!

என்றும் இதை நீ மறவாதே!
என்று பெண்ணே! உனக்குள் உனை நீ,
நன்று அதை நீ என்றும் எடை போடு!
தென்றல் சுகங்கள் உனக்குண்டு!
அன்றும் இன்றும் பெண்மைக்கே
சோதனை உண்டு! நானறிவேன்!
வென்று வரவே வாழ்க்கையது!
இன்றே உணர்வாய் நன்றாய் நீ!

தொன்று தொட்டு வரும்கதைதான்!
என்றும் முட்டும் கண்ணீர்தான்!
என்று உனை நீ வருத்தாதே!
நன்று சிந்தி! நன்று சிந்தி! கண்ணீர்
என்றும் சிந்தும் நிலைவராது!
சந்தம் இசைக்கும் சொந்தம் இணைக்கும்!
என்றும் வாழ்வில் வசந்தம் நிறைக்கும்!
சென்றதை இன்றே மறந்துவிடு!

நன்று சொன்னான் பாரதிதான்!
என்றும் அவனை நினைத்தாலே
என்றும் துணிச்சல் சாரதியாய் இதய
மன்றல் நன்றாய் துணிந்துவிடும்!
என்றும் கவலை உனக்கில்லை! உதயம்
என்றும் நன்றாய் உனக்குள்ளே!
நன்றும் தீதும் சரிபார்த்து
நன்றாய் இன்றே எழுந்துவிடு!