ஞாயிறு, 31 மே, 2009

நீண்டதொருபயணத்தில்....


ஆண்டுகள் பலகடந்து
மீண்டுவந்த நினைவுகள்..
கூண்டுகள் தனைத்திறந்து
சீண்டுகின்ற உணர்வுகள்...

வேண்டுமடி நீ எனக்காய்
தூண்டுமடி மடிதனுக்காய்...
தாண்டிவந்த உறவுனக்காய்
வேண்டிநின்ற மனக்கணக்காய்...

மீண்டுமந்த நினைவலைகள் நாம்
தீண்டிநின்ற தினத்தடங்கள் கால்
தாண்டுகின்ற போதிலெல்லாம் காலம்
தாண்டிவந்து தொடர்ந்ததுவே...

"வேண்டும் உங்கள் உறவு!" என்று
தூண்டிவிட்ட திங்களாய் நீ!அன்று
மீண்டு நீ பிறந்ததுவாய் "வரம்
வேண்டிவந்தேன்!" என்றதுவும்...

"கூண்டில் இட்ட புழுவாழ்க்கை
தாண்டிவந்தேன்!" என்றதுவும் கடல்
தாண்டிவந்த நினைவுகளாய்
தூண்டில் இட்டே இழுத்ததுவே...

தாண்டிவிட்ட காலங்களைத்
தூண்டிவிட்டுப் பார்க்கின்றேன்!
தூண்டிவிட்ட ஒளியலையாய் மனம்
கூண்டிலிட்டுப் பார்க்கிறதே...

"மாண்டுவிட்ட காலங்கள்
மீண்டும் வாராதா!" என்று மரம்
தோண்டி நான் பெயரிணைத்த காடு
தாண்டிவிடும் போதினிலே...

வேண்டுமென்றே உன்னை நான்
சீண்டிவிட்டுப் பார்த்திருக்க சினம்
கூண்டுடைத்த பறவையதாய் உனைத்
தாண்டிவிடத் துடித்திருக்க...

தீண்டிவிடும் காதல் உணர்வுகளால்
தூண்டிலிட்டு உனைத்துவளவைக்க
நீண்டுவிட்ட காலங்களை மனம்
தூண்டிவிட்டுப்பார்த்ததடி..

மீண்டுமந்த வீடு..மீண்டுமதே நிலை..
வேண்டுமென்ற நீ இல்லை..
மீண்டுமந்தச் (ச)மையல் அறை...
வேண்டுகின்ற நீ இல்லை..

பூண்டுடைக்கும் உன்னழகு..உனை
வேண்டுமென்றே சுற்றவைக்கும்..
பூண்டு ரசம் செய்யழகு காதல்
தூண்டி நின்று பற்றவைக்கும்.....

வேண்டும்வகை சமையற்கலை
தூண்டும்வகை காதற்கலை...இன்னும்
வேண்டுமென்ற அடம்பிடிப்பைத்
தூண்டுகின்ற அழகுக்கலை..சுவிஸ்

தாண்டிவந்தும் மறக்கவில்லை...
தோண்டுகின்ற ஊற்றினைப்போல் மனம்
தாண்டிவிடவைத்ததடி...நினைவுகளைத்
தூண்டி விட்டுப்பார்த்ததடி...


"இனிமை!"

முற்றும் கசந்து
பற்றுத் துறந்து
சிற்றம் பலமே
கதியெனக் கிடந்து
வற்றும் வரையில்
வெற்றுடல் சுமந்து
சுற்றும் உலகினைச்
சுற்றும் உலகினில்

முற்றும் உணர்ந்தால்
முனிவனின் நிலையே!
முற்றும் கசந்தால்
இனிமையும் இ(ல்)லையே!
பற்றும் வேண்டும்!
பாசமும் வேண்டும்!இனிமை
பற்றிப் படர்ந்திட
நல்லிதயங்கள் வேண்டும்!

சுற்றம் வேண்டும்!
சுகங்களும் வேண்டும்!மன
முற்றம் நிறைந்திடும்
நிம்மதி வேண்டும்!
பற்றும் உலகினைப்
பற்றிட வேண்டும்!தினம்
சுற்றிப் படர்ந்திடும் நல்
சிந்தனை வேண்டும்!

சுற்றிப் பார்த்தால்
சோகங்கள் உண்டு!
வற்றிப்போன பல
காயங்கள் உண்டு!இதயம்
முற்றிப் பழுத்திட்ட
ஞானிகள்கூட சுகங்கள்
பற்றிப் பிடித்திட்டே
பற்றினை விட்டார்!உடல்

வற்றிடும் முன்பிதை
உணர்ந்திடல் நன்று!
கற்றிடும் கலைகளைக்
கற்றிடல் நன்று!நன்கு
முற்றிப் பழுத்தாலே
கனிகளில் இனிமை!அன்பில்
பற்றிப் படர்ந்தாலே
உலகினில் இனிமை!

கார்த்திகைத் தீபங்கள்.


இதயத்தின் உணர்வுகளில்
உதயத்தைக் காட்டுகின்ற
இதயதீபங்களின் ஏக்கங்கள்!புதிய
உதயகீதங்களின் தாக்கங்கள்!

இதயவீணையின் நரம்புகளை
இதயதாபமுடன் மீட்டுகையில்
உதயசூரியனின் உணர்வலைகள்!இனிய
உதயகாலங்களைக் காட்டியதே!

இதயம் தாண்டி வந்துபேசுகின்ற
இதயநாதங்களின் முரசொலிகள்
புதியபாதைகளின் பயணங்களை உலகில்
புதிய பாடமதாய் புகட்டியதே!

"உதயம்" "உதயம்" என்ற உணர்வலையுள்
இதயம் நம்பிக்கை நிறைத்துவிடத் தர்மம்
விதியைவென்றுவிடும் விடைகளுடன் புதுமை
விதியை நன்றுசொல்லி விடிகிறதே!

இதய தீபங்கள் வாழ்கவே!நல்
விதையின் விளைவுகள் கூறவே!
இதயராகங்கள் இசைக்கவே விடியல்
இதயகீதமாய்ப் புலர்ந்ததே!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7620&hl=

கொடுமை


விட்டுவிடப்போகுதுயிர்!உடல்தனைச்
சுட்டுவிடப்போகிறார் சுற்றத்தார்!"என்று
பட்டினத்தார் பட்டகதை நாமறிவோம்!பல
பட்டணத்தார் படும்பாடும் நாமறிவோம்!

"கெட்டும் பட்டணம்போ!" என்று புலம்
விட்டுவந்து படும்பாடும் எத்தனையோ!
கட்டவிழ்ந்த நெல்லிக்காய் மூட்டையதாய்
கட்டவிழ்ந்து கெட்டழிகதையும் எத்தனையோ!

எட்டடுக்குப் பல மாளிகைகள் அவை
கொட்டும் கதைகளும் எத்தனையோ...
பட்டுடுத்திப் பலர் பணம்காசு தினம்
கட்டும்வகைகளும் எத்தனையோ!தம்முள்

முட்டுவதும் மோதிவீழ்த்துவதும் இங்கு
பட்டும் திருந்தாநிலை தொடர்வதுவும் புலம்
விட்டுவந்த நிலை மறப்பதுவும் தரம்
கெட்டுவிடும் நிலை வளர்ப்பதுவும்....

ஒட்டுவதும் ஒட்டி உறிஞ்சுவதும் காய்
வெட்டுவதும் இங்கு சகஜமன்றோ...தேள்
கொட்டுவதாய் சினம்கொட்டுவதும் சிலர்
பட்டுவரும் பெரும்பாடம் அன்றோ..

குட்டுவதும் குட்டக் குனிவதுவும் தொலை(வு)
எட்டிநின்று வேடிக்கை பார்ப்பதுவும்!விலை
கொட்டிச்சுதந்திரம் வாங்கிடநினைப்பதுவும் இன்னும்
பட்டுத்திருந்திடாக் கொடுமையன்றோ!


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7328&hl=

"அருள் மலர் தைப்பாவாய்!"

ஆருயிர்த் தை மலரே!
பாருயர்த் திருமகளே!
நீருயர் வளங்களெல்லாம்
ஏருயர் நிலங்களெல்லாம்

சீருடன் சிறக்க வேண்டும்!
பாருடன் நிறைக்க வேண்டும்!மனம்
வேருடன் நிலைக்க வேண்டும்!தினம்
பாருடன் கலக்க வேண்டும்!

சீருயர் குணங்களெல்லாம்
பாருயர் மனங்களெல்லாம்
நேருயர் நிறைகள் சேர்க்க
பாருயர் குறைகள் தீர்க்க

வேருடன் நீரைப்போல மன
ஊருடன் இணைய வேண்டும்!அன்பு
நீருடன் நிறைய வேண்டும்!துன்பம்
வேருடன் களைய வேண்டும்!

ஆருயிர் அன்புவெள்ளம்
காரிருள் களை கதிர்போல்
பாரிருள் போக்க வேண்டும்!
சேருயிர் காக்க வேண்டும்!

போருடன் மமதை கொள்ளும் மனப்
போருடன் உயிர்கள் கொல்லும் பிணப்
போருடல் தின்னும் பேய்கள் சினப்
போருடல் மடிதல் வேண்டும்!

போரினில் மடிநல் மனங்கள் விழி
நீரினில் மிதக்கும் தினங்கள்
பாரினில் இனியும் வேண்டாம்!விழி
பாரினி! அருள் மலர்! தைப்பாவையே!


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8156&hl=

"புரிந்திடு!" "இல்லைப் பொறுத்திரு!"

"சிரிப்பதா அழுவதா!"என்று மன
விரிப்பது தொடர்கிறது!இன்று மன
அரிப்பது சிலர்தனில் பார்க்கையில்
"சிரிப்பதா அழுவதா!" என்றது மனது!

"நரிக்குணம் சிலரில்! குள்ள
நரிக்குணம் சிலரில்! வெள்ளை
விரிக்கின்ற விரிப்பில் குள்ள
நரிக்குணம் சிலரில்" என்றது மனது!

எரிப்பதும் எரிப்பதில் துவள்வதும்
வரிப்பதும் வரிப்பதில் வலிப்பதும்
திரிப்பதும் திரிப்பதில் திரிந்தலைதலும் பார்க்க
"சிரிப்பதா அழுவதா!" என்றது மனது!

"உரித்திட நினைத்தால்
உரிந்திடும் சாயம்! நிலை
புரிந்திடா மனத்தில் புரிந்திடவைத்தால்
புரிந்திடும் வேஷம்" என்றிட நினைத்தால்

சிரிப்புத்தான் வருகுது!மன
விரிப்புத்தான் தொடருது!சிலர்
கரிப்புத்தான் தெரியுது! நச்சு
அரிப்புத்தான் புரியுது!

"அரிந்திடும் வாளா! இல்லைத்
தெரிந்திடும் பேனாவா! இவரை
உரித்திட உதவும்!" என்பதன் பதிலாய்
சிரிப்புத்தான் வருகுது!

தெரிந்திடும் வேஷம்! பொறுத்திரு!
வரிந்திடும் காலம்! காத்திரு!
புரிந்திடும் மோசம்! பொறுத்திரு!
உரிந்திடும் கோலம்! பார்த்திரு!

எரிந்திடும் வயிறு எரியட்டும்!
புரிந்திடும் மனங்கள் புரியட்டும்!
அரிந்திடும் எழுத்துக்கு உயிருண்டு!
புரிந்திடும் மனத்துக்கு உயர்வுண்டு!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8247&hl=