புதன், 3 ஜூன், 2009

"வாழிய!வாழிய! வாழியவே!"


கார்த்திகை மலரே! காவிய மலரே!
கார்த்திகை திங்கள் ஓவிய மலரே!
நேர்த்திகை நீ சேர்த்திடும் மலரே!
பார்த்திகை புகழ் நீ சேர்த்திடும் மலரே!

நேர்த்தியாய் உனை வார்த்திட்ட அழகு!
கீர்த்தியாய் உனைச் சேர்த்திட்ட அழகு!
கார்த்திகையாய் உனைக் காத்திட்ட அழகு!
கார்த்திகையே! உனைப் பார்த்திட்ட அழகு!

கார்த்திகைக்கே அணிசேர்த்திட்டாய் மலரே!
பார்த்திகைக்கும்படி செய்திட்டாய் மலரே!
கார்த்திகைக்கும் பேர் சிறப்புண்டு மலரே!
கார்த்திகைத்திங்களும் சிறப்புற்றாள் மலரே!

சேர்த்திருக்கும் செங்காந்தள் மலரே!
சேர்த்துவைக்கும் செங்கோட்டை மலரே!உனைச்
சேர்த்திருக்கும் கை ஓங்கிடும் தினமே!உனைச்
சேர்த்திருக்கும் புவி பாங்குடன் மலரே!

பார்த்திருக்கப் பார் வியந்திருக்க நீ
சேர்த்திருக்கப் புகழ் சேர்ந்திருக்க
கார்த்திகையே காலம் கனிந்ததடி!மலர்க்
கார்த்திகையே ஞாலம் சிறந்ததடி!

கார்த்திகை தீபங்கள் சூழ்ந்துவர
கார்த்திகைப் பெண்கள் சேர்ந்துவர
கார்த்திகேயன் அவன் அவதரித்த
கார்த்திகைத்திங்களில் நீ மலர்ந்தாய்!

கார்த்திகேயன் அவன் பாடம் சொன்னான்!
கார்த்திகையில் அவன் வியூகம் வைத்தான்!
கார்த்திகையில் காரிருள் அகற்றி மலர்க்
கார்த்திகையே உனைப்போற்றி நின்றான்!

பார்த்திருந்தேன்! உனைப்பார்த்திருந்தேன்!
வார்த்திருந்தேன்! கவி வார்த்திருந்தேன்!புவி
பார்த்திருக்க உனைப்பாட்டில் வைக்க உனைச்
சேர்த்திருந்தான் தனைப் பாராட்டிடுவேன்!

வேர்த்திருக்கும் உடல் சேர்த்திருக்கும் மனம்
சேர்த்திருக்கும் கடல் களம் அமைக்கும்!கடல்
சேர்த்திருக்கும் செங் கதிரொளியோன்! புவி
பார்த்திருக்கும் சங்கத் தமிழ்க்கொடியோன்!

"கார்த்திகேயன் அவன் வாழ்கவென்று!மலர்க்
கார்த்திகையே வெற்றிசூடும்" என்று பறை
சாற்றிடவே புகழ் சேர்த்திடவே!தமிழ்
போற்றிடவே புவி வாழ்த்துகவே!

கார்த்திகையே உனைப்பாட்டில் வைத்து
கார்த்திகை மலர் உனை ஏட்டில் வைத்து
கார்த்திகை மைந்தனைப் பாடுதற்கும்
கார்த்திகை மலர் நீ சந்தம் தந்தாயே!

நாற்றிசையும் புகழ் ஓங்குகவே!
நற்றமிழ் உன் புகழ் பாடுகவே!
ஏற்றிவைத்து ஈழம் போற்றிவைத்து பறை
சாற்றிநிற்கும் மலர் நீயல்லவோ!

வாழ்க நின்புகழ்! வளர்க நின்புகழ்!
வாழிய வாழிய வாழியவே!
சூழ்க தண்புனல்! வாழ்க செந்தமிழ்!
ஈழம் வாழிய! வாழிய! வாழியவே!

நன்றி
சுபம்

அன்புடன்
ஆதித்ததாஸன்

"ஆடைதட்டிப்பாரடி கண்ணே!"


"ஊருக்கடி கண்ணே! உனக்கல்ல!" என்று
பாருக்குள் பலர் படும்பாடு! கவிமன
ஊருக்குள் நீரோடை போலும் கணம்
பாருக்குள் ஊறிவரும் கவிமனந்தான்!

மேடைக்கு மேடைமுழக்கங்கள்! மனம்
வாடைக்கு மாறும் இழக்கங்கள்! தினம்
ஆடைக்குள் போர்வைக்குள் புழுக்கங்கள்!
கோடைக்குள் குளிர்தேடும் பழக்கங்கள்! என்றும்

சாடைக்கு மாடைக்கு வாழ்பவர்! மனக்
கூடைக்குள் கோடிக்கணக்குக்கள்! வினா
பாடைக்குப் போகின்ற வரையிலும் கவிமனக்
கூடைக்குள் கொட்டிக்கிடக்குமே!

ஆடைதட்டிப் பார்த்தால் கவிக்
கூடைதனைத் திறந்து பார்த்தால் விடை
மேடைதனில் நின்று முழங்கும்! வெறும்
மேடைக்குழப்பங்கள் விளங்கும்!

ஊரைத்திருத்திடும் மனங்கள் தம்
உள்ளந்திருந்திட நினைத்தால் நல்ல
பேரைத்துலங்கிடப் பெறலாம்!புகழ்
வெள்ளம் நிறைந்திடப் பெறலாம்!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"இரசிகையுன் இரசிகனிவன்!"

தொலைதூரப்பயணத்தில்
தொலைந்தவளுக்கு!
தொலைந்தவன் தொலைத்தவன்
புலம்பல் இது!

கலைந்துவிட்ட கனவுகள்
தொடர்கின்ற பயணமிது!உன்
மலைத்துவிட்ட கவிதைகளில்
நினைவுகளின் துடிப்பு இது!

நினைவுகளை நீங்காதுன்
தொடுத்துவிட்ட கவிதைக்குள்
கனவுகள் தூங்காதுன்
விழித்திருக்கும் விழிகள் இது!

கனவுகளை வளர்த்தவன்
கவிதையாகிப்போனவன்
நினைவுகளை மட்டும் நீ
வரவுதனில் வைத்துவிடு!

நினைவுகளின் சுகங்களில்
மிதந்து கவலைவிடு!உனை
நினைத்து உன்சுகம் அதுவென
மிதந்து எனை நிறைத்துவிடு!

கனவுகளை வரவு வைத்து
தினம் கவிதை படிக்கின்றேன்!
மனதினிலே தெளிவுபெறு!
கனம் கவலை ஏதுமில்லை!

எனைமறந்து
நான்பாடும் பாடல்
நினைவுளில் என்
தேன்மொழிபாடும் தென்றல்!

எனைமறந்து
நான் நெடுநாளாச்சு!
உனைநிறைத்து
தேன்கூடு போலாச்சு!

"எனைமறந்து விடு!"
என்றுசொல்லும் மொழியல்ல!
"உனைமறந்து விடு!"
என்றுசொல்லும் விழியல்ல! உன்

தினைப்புலத்தில் தேன்சேர்த்து
கவிதைகொடு! உன்
நினைப்புலத்தில் தேன்நினைவுகளை
விதைத்துவிடு!உன்

மனப்புலத்துக் கவிதைகளை
இரசிப்பதற்கு காத்திருக்கும்
வனப்புலத்துக் காதலன்!
இரசிகையுன் இரசிகனிவன்!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"இதுவரை நீ!எதுவரையோ!"



மதுவினில் மூழ்கிய அந்தநாள்!
மதுமலர் மகிழ்வினில் மகிழ்ந்தநாள்!
எதுவித கவலையும் இன்றிநாம்
புதுமலர்க் கவிதைகள் புனைந்தநாள்!

"எதுவரை நிலவுநீ சுகம்தருவாய்"! என்று
மதுவினில் மயங்கிமடிசார்ந்துகொண்டு
புதுமைகள் பொங்கிட வினவிநிற்க
பதுமை நீ பாங்குடன் இதழ்விரித்தாய்!

"புதுமைகள் எதுவரை தொடர்ந்திடுமோ
அதுவரை கவிதைகள் புனைந்திடுங்கள்!
பதுமையாய் மயங்கிநான் இரசித்திடுவேன்!
அதுவரை தொடர்ந்திடும் நம்சுகமே!" என்றாய்!

புதுமை உன்விழிகள் மொழிகள் பேச
மதுமை என்கவிக்கு வர்ணம் தீட்ட
புதுமை கள்கவிக்கு மகுடம் சூட்ட
"புதுமை" என்று உன் தேன்இதழ்கள் சேர்க்க

"புதுமையிது! புலர்ச்சியிது! புவியில்
புதுமலர்ச்சி இது! என் தேன்மொழி
மதுத்தென்றல் வருடல் இதுவன்றோ!" என்று
பதுமைமதி மகிழ்ந்திடவே பதிந்தமதி இது!

எதுவரை போகுமோ போகட்டும்!
புதுவித அநுபவங்கள் சேரட்டும்!
மதுமதி தமிழ்க்கடலுக்குள் மூழ்கட்டும்! தேன்
மதுவுண்ணும் வண்டுகள் மகிழட்டும்!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"காலதேவனின் வார்ப்பு!"

ஊமைக்குள் இருக்கும் உணர்வு மன
ஆமைக்குள் சுருக்கும் நினைவு! "உன்
ஊனக்கண் திறந்துபார்!"என்று என்
ஞானக்கண் உரைக்கும் உனக்கு!

ஊமைக்காயங்கள் நூறு!பாவையுன்
ஊமைக்குமுறல்கள் கீறும்!அது
"ஊனக்கிறுக்கல்கள்" என்று இந்த
ஞானக்கிறுக்கனுக்கு கூறும்!

ஆமைக்குள் ஆயிரம் கதைகள்! பொறு
ஆமைக்கும் உனக்குள்ளும் வதைகள்!மனம்
கூனிக்குறுகுகின்ற நிலைகள்! தினம்
கூனியுன் மனச்சூழ்ச்சிகளின் அலைகள்!

"ஊமையாய் இருப்பதிலும் சுகமா! என்று
ஊமையென் மனமறிந்த ஓர் இதயம்
கானமழை பொழிவதுபோல் கவிபொழியும்!
ஞானமழை எனக்குள்ளே! துளிர்த்தெழு(து)ம்!

ஊமையென் கதைகள் ஓர்நாள் இந்த
ஊமையுலகில் அரங்கேறும்! பல
ஈனப்பிறவிகளின் நிலைகள் கவி
ஞானக்கிறுக்கல்கள் வெளிக்கொணரும்!

ஊமைநீ ஓர்நாள் உணர்வாய்! என்
ஊமைமனம் கண்டு அதிசயிப்பாய்! என்
ஞானத்தவப்பலன் காண கால
ஞானத்தேவனவன் வரம்தருவான்!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=5631&hl=

"வருவாய் மலரே!"

'வருடம் ஒன்று
கடுகதியில்!இதயம்
மருவும் நன்று
நினைவலைகள்! இனி
மருவும் வருடம்
மகிழ்வில் இனிக்க
வருடம் நன்று
நடைபோடும்!"என்று

வருடும் இதயம்
திருவாய் மலர
திருவும் பெருகும்!
கலையும் நிறைவாள்!
மருவும் மலைபோல்
மலைமகளும் உறைவாள்!
வருடும் உதயன்
நிறைவொளியும் நிறைப்பான்!

கருமம் கூட்டும்
காருண்யம் நிறைக்கும்!
தருமம் காக்கும்!
பேருண்மை சிறக்கும்!மனித
மிருகம் தொலைந்து உலகில்
மனிதம் பிறக்கும்!
அருகும் அன்பும் பெருகும்
நிலை பிறக்கும்!

மருவும் நல்மனங்கள்
பெருகும் தினங்கள்
வருடும்! மயிலிறகாய்
வருடும்! நிலவில்
மருவும் மகிழ்வில்
மனங்கள் படைக்கும்!
வருவாய் மலரே!
புதுவரவாய் மணம்தரவே!

வாழ்க புதுமலரே!
வருவாய் நல்வரவே!
வாழ்க மலர்நிலா மனங்கள்!
வளங்கள் பலபெறவே!

நன்றி!
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

இனியாவது......

எத்தனைமுறை சொன்னேன்!
எப்படியெல்லாம் சொன்னேன்!
பித்தரைப்போல் நீயும் பிதற்றுகிறாய்!
செப்படிவித்தையெல்லாம் செய்கிறாய்!

சத்தமில்லாமல் சப்தங்கள்மூலம்
முப்படிமானமும் காட்டுகின்றாய்!
சுத்தமில்லாமல் சுருட்டும் விந்தைகளை
எப்படியுன் புத்தி கற்றுக்கொண்டதுவோ!

புத்தனைப்போல் அமைதிகாட்டி
எப்படிப் புத்தியைத்தீட்டுகிறாய்!
எத்தனை புத்தியைத்தீட்டியென்ன!சுயம்
எப்படியும் ஓர்நாள் தெரிந்துவிடும்!

"முத்தமிழ்" இதயம் சுத்தமில்லாதவர் மத்தியில்
எப்படி உதயம் பெற்றுவிடும்! இதனைச்
சத்தமாய்ச் சொல்வேன்!தெரிந்துகொள்! நீதான்
எப்படி உணர்வாயோ உணர்ந்துகொள்!

எத்தனைநாள்தான் உன்திருட்டு!இதற்கு
எப்படியும் காலம்தான் பதில்கணக்கு!சற்றும்
சித்தம் திருந்திட முயற்சிசெய்!இல்லை
எப்படியும் வருந்திடத் தொடர்ந்துகொள்!

எத்தனைசதிவலை பின்னிடினும் மதி
எப்படிஎப்படி சுற்றிடினும் விதியது
அத்தனைமுறை உன்னைச்சுற்றிவந்துன்
செப்படிவித்தைக்குப் பதில்கொடுக்கும்!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்