ஞாயிறு, 7 ஜூன், 2009

'உனக்காக!"

திரும்பிப்பார்த்தால் அருவெருப்பு!
அரும்பும்பொழுதே தெரிவதுண்டு!
இரும்பு இதயம் எதுவென்று!-எனவே
கரும்பின் கதைதான் அருமருந்து!

துரும்பாய் இழைத்து துவண்டுவிடும்!
கரும்பாய் நினைத்துக் கசந்துவிடும்!
இரும்பாய் இதயம் இருந்துவிட்டால்-நீ
திரும்பாய்! திரும்பிப்பார்த்திட விரும்பாய்!

திரும்பும் திசைகளில் உன்னிதயம்
விரும்பும் மனங்களில் அசைந்துவரும்!-இதயம்
அரும்பும் இசைகளாய் பின்னிவர
விரும்பும் தினங்களும் இசைந்துவரும்..

திரும்பிட நினைத்தால் நல்வழிதிரும்பு
விரும்பிட மனத்தால் நல்மனந்திரும்பு!-நீ
இரும்பிடம் பேசும் கொள்கை விடு!
திரும்பிடும் நேசம் கொள்கை எடு!

வரும்பிணி விலகும்! வாழ்வது துலங்கும்!
அரும்பணி தொடரும்! ஆழ்கடல் முத்தாய்-உனை
வரும்பணி மிளிரும்! வானமும் வாழ்த்தும்!
தரும்பிணி விலக தருமும் தளைக்கும்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3348&hl=

"எனக்குள் நீ!"

அருணன் உந்தன் பெயரதுவாய்
எந்தன் பெயர்தான் இணைந்தபோது
'தருணம் இதுதான்' என்று நான்தான்
உன்தன் பெயருள் ஒளிர்ந்து நின்றேன்!
அருணன் நீ தான் வயப்பட்டாய்;! வாழ்வில்
வரவு அதுவாய் இணைத்திட்டாய்!
'தருணம் இதுதான்' என்றிட்டாய்!
காருண் யன் அதுவாய் இணைந்திட்டான்!

இருளும் அதுவாய் அகன்றது!
அருளும் வந்து இணைந்தது!
பொருளும் இதுவாய் புரிந்தது!
புகழும் வந்து நிறைந்தது!
மருளும் மனம்தான் அகன்றது!
புலரும் பொழுதாய் மலர்ந்தது!
சுருளும் தனம்தான் வரிந்தது!
சுகமும் முழுதாய் இணைந்தது!

வருடும் தென்றல் இணைந்தது!
வாழ்க்கை வசந்தம் ஆனது!
திருடும் மனங்கள் அகன்றது!
திகழும் திங்கள் தவழ்ந்தது!
குருடும் முன்றல் மறைந்தது!
சீழ்க்கை சிரங்கும் அழிந்தது!
வருடும் தினங்கள் வளர்ந்தது!
மகிழும் மலரும் மலர்ந்தது!

பருகும் தேனாய் நீ வந்தாய்!
பழகும் தமிழே! நீ நிறைந்தாய்!
உருகும் பாகாய் உன்னன்பில்
அழகும் சுகமும் நீ தந்தாய்!
அருகும் வானாய் நீ ஒளிர்ந்தாய்!
அழகே! உயிரே! என்வசமானாய்!
பருகும் பாலாய் என்னன்பாய்!
அருணனே! ஆதித்தா!நீயும் வந்தாயே!

நன்றி
சுகம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3138&hl=

என் நினைவுகளில் நீ (148)


இதயத்தில் உதயமதைத்
தழுவிவரும் இளந்தென்றலே!
உதயத்தைத் தரிசிக்கும்
உயிர்களின் உரிமைத் தழுவலிது!
இதயத்தை இணைத்துவைத்து
இருவரின் துடிப்புதனை
உதயத்தில் வரவுவைத்த
உயிர்களின் இன்பத்தேடலிது!

கதைகளில் கவிதைகளில்
காவியத்தில் ஓவியத்தில்;
விதைகளின் விடியல்தனில்
ஓவியத்தின் காவியமாய்
சிதைகளில் சிதைந்திடாத
சிற்பங்களில் சொற்பதமாய்
சதைகளில் சந்திக்கா
சரித்திர விற்பன்னன் செதுக்கியது!

புதையலில் புதையல் இது!
புதுமைக்குள் புதுமையிது!
கதைகளில் தழுவல்தனை
காதலின் நினைவுகளை,
விதைகளில் தாங்கிவரும்
சாதனைத் தழுவல் இது!
விதைகளில் விடியல் வேதனை
விடியலின் விடியல் இது!

புதைகுழிகளில் புகுந்திடா
புகழ் உச்சியின் உயரம் இது!
வதைகுழிகளில் வதங்கிடா
வளம் பெற்ற வடிவம் இது!
கதைகளும் பல
காதல்கதைகளும் மலர்ந்த இடம்!
உதைகளும் உணர்வுகளின்
நினைவுதைகளும் இணைந்த இடம்!

நன்றி
சுபம்
அன்புடன்
ஆதித்ததாஸன்.

"புத்திதரும் பாடங்கள்!"


புத்திகெட்டுப் போதையிலே
சத்தியத்தை தொலைத்துவிட்டு
முக்திபெற்ற ஞானிகள்போல்
சத்தியத்தைப் பேசுவார்கள்!
சக்திகெட்டுப் பாதையிலே
சாகடிக்கும் மனங்களோடு
புத்தியுற்ற மானிடர்போல்
சத்தியெடுப்பார்கள்!

கத்திகொண்டு காமுகராய்
காட்டுமந்தைக் கூட்டமதாய்
புத்திகெட்ட பாதைகளைக்
காட்டுவார்கள்!- இதய
சுத்தியில்லா மனங்களவர்
கூட்டுகின்ற கூட்டங்களில்
புத்திகெட்ட மந்தைகள்போல்
காட்டுவார்கள்!

தத்திவரும் தங்கங்கள்
தரங்கெட்ட நிலைமாற
புத்திசொல்லும் வித்தைகளைக்
கற்றவர்கள்! இவர்கள்
புத்திதனில் பொங்கிவரும்
சிங்கங்கள் புரிந்துகொள்ள
புத்திவரும் பாடங்களைப்
புகட்டுங்கள்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"தேன்மொழி"


நான் நானாக எனக்குள் என்னைத்தேடுகிறேன்!
'ஏன்! ஏன்!' என்ற கேள்வி வேள்வித்தீக்குள்
என்னை எனக்குள் தொலைக்கிறேன்!
தேன் தேனாக தேன்தமிழுக்குள்
என்னைத்தேடுகின்றேன்!
நான் நானாக இல்லை! தென்றலவள்
என்னைக்கூடுகின்றாள்!

மான்விழிப்பார்வைக்குள் மயக்கம்
தென்னை இளங்கீற்றுக்குள் கிறக்கம்!
தேன்மொழிப்போர்வைக்குள் முயக்கம்!
என்னை அரங்கேற்றத்தில் மயக்கம்!
தேன்மொழிமங்கைக்குள் தயக்கம்!
தென்னை இளநீருக்குள் கிறக்கம்!
வான்வழிநிலவுக்குள் மயக்கம்!
தன்னை வளம்குறைத்தாள் என்ற தாக்கம்!

"ஏன்" என்று தேன்மொழியைக்கேட்டேன்
"என்னை என்ன செய்யச்செய்யச்சொல்கிறீர்கள்"என்றாள்!
"நான்ஒன்று சொல்லட்டுமா" கண்ணே!
உன்னை வென்றுவிட முடியாத ஆற்றாமைதான்"எனறேன்!
"தான்"என்ற வான்வழிமங்கை
"தன்னை" தொலைத்துவிட்டால் வெல்லலாம்" என்றேன்!
தேன்மொழி கடைக்கண்ணால் பார்த்தாள்!
"உன்னை தொலைத்துவிட்டாயே என்னுள்"என்றது அவள் பார்வை!

'ஏன்' என்று புரியவில்லையடி"என்றேன்!
"உன்னை நீ இழந்து என்னை நீ பெற்றாயே"என்றாள்!
" நான் என்றுமே நானாகஇல்லையடி கண்ணே!"என்றேன்!
"என்னை நீ கலந்தபின் நீயென்பதேது"என்றாள்!
"தேன்மொழி! நீ என்னை விட்டுவிடாதையடி" என்றேன்!
உன்னை நான்கலந்தபின்பு பிரிவில்லைக் கண்ணா!"
என்றாள்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்!

"நேரம் நல்ல நேரம்!"


நினைவோடு நேசிக்கும்
யாசிக்கும் தென்றலே!
நினைவோடு நினைவு, கனவோடு கனவு,
கவிதை பாடும் உன்
நினைவோடு உயிராகும்,
உயிருக்குள் உயிராகும் தென்றலாய்,
மனையோடு மருவி,
அருவியாய் அருந்தமிழ்த் தேனாய்,

தினையாக, தினைமாவிளக்கோடு,
திருமால் தழுவிடும்
துணையாக, துணையோடு
துணையாக, இணைதழுவிடும்
மனையாக, மனதோடு மலராக,
மருவி மகிழ் மலர்ந்திட,
பிணையாக, கரும்பிணையாக,
வரும் துணையாகத் தழுவிட,

உனையாளும், விழித்துணையாக,
வழிகாட்டும் திசையாக,
எனையாளும் மொழித்துணையாகி,
மழைத் துளியாக,
உனைப்பாடும், உனைத்தழுவிடும்
தளிர் வசந்தமாய், நான்
எனைத்தேடும், உனக்குள் எனைத்தேடும்,
நேரம் நல்ல நேரம் இது!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்!

"பதில் சொல்லடி செந்தமிழ்ப் பெண்ணே!"


மீசைக்குள் ஆசை
ஓசையின்றி வேர்விட,
பாஷைக்குள் பரிபாஷைக்குள்,
ரோசத்தின் மீசைக்குள்,
நேசம் வீசும் தென்றல்காற்றில் தேரோட,
ஆசைக்குள் ஆசை அதிசயமாய் பேசும்!

முரட்டு மீசைக்குள்,
வரட்டுக்கௌரவம் விட்டோடிவிட,
புரட்டுப் பொய்யர்கள் வேதாந்தம்,
கட்டோடு கலைந்துவிட,
இருட்டுக்கு ஒளியாய், ஒளிக்கதிராய்
உலகுக்கு ஒளியான,
முரட்டு மீசைக்காரன், முண்டாசுக் கவிஞனவன்,
பாரதிதான், உன் காதலனோ!

ஏது! ஏது! முரட்டுப் பிடிவாதம்,
முடிசூடும் விந்தையோ!
சூது வாது தெரியாத அடிவானம்,
ஆழ்கடலோடு சங்கமிக்கும் விந்தையோ!
மாது உன் மயக்கம் தீர்க்கும் மன்னவன்,
அந்தத் தென்னவன்தானோ!
யாது பெயர்! ஏது ஊர்! உன் உளம்கவர்ந்த
மன்னவன் யாரோ!

சூதுவாது அறியாத சுகந்தமலர்,
உன் சுகத்தைக் கொள்ளையடித்துப்,
பாதிபாதி சரிபாதி, சுகந்தமதை சுமந்து,
சுகத்தை அள்ளிக் கொடுத்து,
மாதுஏது நீ மயங்கிக் கிடக்க,
மதுரசம் உண்டு களித்துப் பள்ளி கொண்ட,
சோதிசேதி அறியாத பேதையே!
உனைப் பாடாய்ப் படுத்துபவன் யாரடி!

நாதியற்றுத் தமிழ் தவித்தபோது,
வேதியந்தனைத் தூக்கியெறிந்து,
நீதியற்ற நிலைமாற்றி, சாதியற்ற நிலை ஆக்கப்,
பாதியாகத்தன்னை அர்ப்பணித்த,
போதிமரப் புத்தன் போல, ஆதிஞானமதைப் பெற்ற, கவி
பாரதித் தமிழ்க் காதலனோ!
சேதிசொலச் சித்தம் குளிரப்,
பதில் சொல்லடி செந்தமிழ்ப் பெண்ணே!

நன்றி
சுபம்
அன்புடன்
ஆதித்ததாஸன்

"முகத்திரை விலகட்டும்!"


அகத்திற்குள் ஆயிரம்! எகத்தாளம் பேசும்
அகத்திற்குள் ஆயிரம்! சுகத்தாளம் வீசும்
அகத்திற்குள் ஆயிரம்! புறத்தாளம் கூசும் இதய
அகத்திற்குள் ஆயிரம்! முகத்தாழம் பேசும்!

"அகத்தின் அழகது முகத்தினில் தெரியும்!"
ஆன்றோர் வாக்கது அதில் உள்ள உண்மை
அகத்தில் நல் மனம் அறிந்திடும் உண்மை!
சான்றோர் அழகதாய் முகத்தினில் வெண்மை!

நிறத்தினில் அல்ல! குளிர் முகத்தினில்
நிலவதன் வெண்மை! தளிர் மனங்களின்
புறத்தினின் தண்மை! வெளிர் மனங்களின்
புலர்பொழுததன் தன்மை! எழிலதன் மென்மை!

முகத்திரை விலக்கி அகத்திரை பார்த்தால்
இகத்தினில் இல்லை ஏமாற்றம்! உன்
மனத்தினில் இல்லைத் தடுமாற்றம்! உன்
மனத்திரை விலக்கு! உன் மனத்தினைத்துலக்கு!

இகத்தினில் இல்லை இனித்துயரம்! மன
முகத்தினை நீயும் ஒருநிலையாக்கு!
புறத்தினில் இல்லை உன் எதிரி! உன்
அறத்தினில் நீயும் மேல் நிலைச்சுருதி!

சுகத்தினை நீயும் சுயநலத்தினில் நினைத்தால்
இகத்தினில் உனக்கு உயர்வில்லை! மனச்
சுகத்தினில் நீயும் பொதுநலத்தினை நினைத்தால்
ஜெகத்தினில் உனக்கு அழிவில்லை!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"தேன்மொழித்தேவதை!"

இரவினில் தாமரை
உறவினில் தேன்மழை...
இரவுகள் தேடியுன் உன்
உறவினில் நான் மழை..

மரபுகள் தாண்டியே
மங்கையுன் தாபங்கள்
இரவுகள் ஏங்கியே
இனிமையின் கீதங்கள்..

உறவினில் இரவினில்
இனிமையில் காலங்கள்
உறவுகள் கூறிடும்
இரவினின் கூடல்கள்..

இரதமாய் உன்மனம்
விரசங்கள் சேர்த்திட
விரதங்கள் முடித்திட
இரதத்தில் ஏறிட..

விரசத்தின் உச்சியை உன்
கலசங்கள் சொல்லிட தேன்
இரசத்தின் இன்பத்தை
உன்னவன் உள்வாங்கிட..

தேன்மொழி மங்கையின்
செந்தாமரை சிவந்திட
மான்விழி பேசிடும்
மருவிடும் மலரிதழ்

வான்வழி மேகம்போல்
தேன்மழை உன் பூவிதழ்களில்..
தேன்மொழி தாகங்கள்
தேன்மழை தீர்த்திட..

வான்மழை மேகமாய் ...
நான்பாடும் ராகங்கள்..உன்
தேன்பாடும் தேன்குரல்
தேன்மழை கீதங்கள்..

நன்றி
சுபம்
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3517&hl=

"கவலைவிடு கிளியே!"


தனிமையைப் போக்க எண்ணி தன்
தனிமையைப் போக்க எண்ணி
இனிமையாய் இணைந்திருந்த உனை
இனிமைத்துணையுடன் இணைந்திருந்த உனை

தனிமைச்சிறைக்குள் தவிக்கவைத்த தரங்கெட்டவர்க்கு
இனிமைச்சுகமறியா புவிமாந்தர் அவர்தமக்கு உன்
கனிமைமனமறியாக் காதகர் அவர்தமக்கு உன்
தனிமைக்கொடுமை எங்கே தெரியப்போகிறது!

'இனிமைக்காலங்கள் நான் இணைந்திருந்த
இனிமைக்காலங்கள் இனியெங்கே வரப்போகிறது! என்
தனிமைத்தவிப்பெங்கே தீர்படப்போகிறது!" என்றவுன்
இனிமை ஏக்கங்கள் தீரும் காலம்வரும்!

தனிமைக்கொடுமைகள் தீரும் காலம்வரும்!
இனிமைக்கனவுகள் அரங்கேறும் காலம்வரும்!
தனிமைச்சிறையுடைத்து உன்னடிமைவிலங்கொடித்து
இனிமைக்கிளியே!உன்னிணைந்தஜோடி உனைமீட்டுவிடும்!

இனிமையுள்ள கிளியே! "தனிமையுனக்கினியில்லை!
இனிமையில்லா அரக்கர் மத்தியில் நீயில்லை!
இனிமைத்துணை நான் உன்னுடன் இருக்கையிலே
இனிமைத்துணைக்கோலம் நமைமறக்கும் சுகராகம்தரும்!"

"இனியென்ன கவலை உனக்கு"என்று உன்ஜோடி
இனிமைநிறைக்கின்ற கிள்ளைமொழிபேசி
தனிமை விரட்டிச்சுகராகம் மீட்டி உன்னுள்
இனிமைச்சுகம் நிறைக்கும் காலம்வருகிறது கலங்காதே!

நன்றி
சுபம்

அன்புடன்
ஆதித்ததாஸன்

"நினைவுகள் போதுமடி!"


முத்திரை பதித்த அந்தத் தீபாவளி!
சித்திரை நிலவு நீ சந்தம் இசைத்து
முத்திரை பதித்த அந்தத் தீபாவளி!
நித்திரை மறந்து நிலவு நீ சுகித்திருந்து

முத்திரை பதித்த அந்தத் தீபாவளி!
இத்தரை மீதில் மீண்டும் கிடைக்கமுடியாத
சித்திரமாய் என்மடிமீது வீணையதாய்
நித்திரை விழித்திருந்து மீட்டிய சுகராகமதாய்

சித்திரைநிலவே! அத்தீபாவளி நினைவிருக்கா!
அத்தனை மனங்களும் பொறாமைகொள்ள
எத்தனை இன்பங்கள்! எத்தனை இன்பங்கள்!
பத்தரைமாற்றான சித்திரையே நினைவிருக்கா!

வித்தைகள் பயின்று வார்த்தைகள் மறந்து
எத்தனை சுகங்களடி! புற்றரை அமர்ந்து
"இத்தனை சுகங்களுண்டா!" என்று நீவிழிமலர்ந்து
வித்தைகள் பயின்ற வினாடியாய் மணிமறந்து

முத்திரை பதித்த அந்தத் தீபாவளி
இத்தரை மீதில் இனிவருமா! சொல்லடிகிளியே!
"பத்தரைக்குப் போகவேண்டும்" என்றாய்!
பத்தரை தாண்டி மறுபத்தரை வந்ததும் மறந்தோம்!

"எத்தனை மணி இப்போ சொல்லுங்கள்!
அத்தனைபேரும் பார்த்திருப்பார்கள் வீட்டில்!
மொத்தமாய்ச் சேர்ந்து வசைபடிக்கப்போகிறார்கள்!
எத்தனை மணி இப்போ சொல்லுங்கள்' என்றாய்!

"சித்திரையே! நீ போகவேண்டுமாடி கண்ணே!
எத்தனை மணியாகட்டும் போகட்டும் விடடி!" என்று
முத்திரை பதித்த முத்தங்கள் நினைவிருக்கா!
அத்தனையும் மறந்து இந்தத் தீபாவளியா!

எத்தனை தீபாவளி வந்து போகட்டும்!
அத்தனையும் தந்திட முடியாத அத்திருநாள்
இத்தரைமீதில் எமக்கு எதற்கடி நிலவே!நாம்
முத்திரை பதித்த அந்த நினைவே போதுமடி!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

விதிபெரிதா! மதிபெரிதா!" உருவகக்க(வி)தை

வாழ நினைத்தோம்!
வாழ்ந்துபார்க்க நினைத்தோம்!
சூழ நின்ற கயவர்கள்
சூழ்ச்சிசெய்து சிறைவைத்தார்!
மாழ நினைத்தோம்!
மாண்டுவிட முடியவில்லை! விதி
சூழ ஒன்றுபட்டு
சூழ்ச்சிகள் வென்றுவிட வைத்ததுவே!

விதி பெரிதா கண்ணே!
நம் மதி பெரிதா! நம்
மதிநுட்பம் போதாது
என்பதுதான் மெய்யா!
சதி செய்து சாகடிக்க
நினைப்பவர் கைகளில்
கதிஒன்றும் புரியாது
கலிகாலம்தான் பதிலா!

நாளைவரும்!
நம்பிக்கை தரும் கண்ணா! நம்
வேளைவரும்!
நம்பிக்கையுடன் நாம் இருப்போம்!
கோழையல்ல நாம்!
கொண்ட கொள்கை மாறாத
"நாளை விடியும்" என்ற
நம்பிக்கையுண்டு கண்னா!

நதியாகி என்மதிக்கு
புலப்படும் புத்தி இது!
சதிகாரர் அவர்மதிக்கு
சவக்குழி தோண்டும் இது!
புதிராக நாம் சண்டை
பிடித்திடுவோம் அவர் மதிக்கு
புதிராகும்! "என்ன இது!
இவர்களுக்குள் சச்சரவா!

கோழைகளாய்த் தங்களுக்குள்
சச்சரவுச்சண்டைகளா!
வேளையிது! இனிஇவர்கள்
இணைந்திடவே மாட்டார்கள்!
நாளையல்ல! வருகின்ற
காலத்திலும் இணைந்திடார்கள்!
கோழைகளைத் துரத்திடுவோம்!"
என்று நினைத்திடுவார்!

சதியைச்சதியாலே
சாகடிக்கவேண்டும் கண்ணே! அவர்
மதிதன்னை நம்மதி
நோகடிக்கவேண்டும் கண்ணே!
புதிதல்ல இதுவொன்றும்!
"ஊனுக்கு ஊன்" என்ற
மதிநுட்பம் வாய்ந்தவர்கள்
தந்துசென்ற பாடம் கண்ணே!

வேளையிது! ஆரம்பி நாடகத்தை!
அதோவருகிறார்கள்!
நாளையல்ல! இன்றே
விடியல் பிறக்கும் கண்ணே!
மூளையில்லா மூளியர்கள்
முகத்தில் கரிபூச நல்ல
வேளையிது கண்ணே!
ஆரம்பி நம் நாடகத்தை!

நாடகத்தின் ஆரம்பம்!
நல்லதொரு ஆரம்பம்!
மேடைகட்டி ஆடவில்லை!
சிறைக்கூடமதில் ஆரம்பம்!
ஊடறுத்து வந்த புத்தியதன்
வித்திதனில் மதி
ஏடெடுத்துப்படிக்காத
அநுபவத்தின் ஆரம்பம்!

நாடகத்தை பெண்கிளிதான்
தொடக்கியது கச்சிதமாய்!
"வேடம் எல்லாம் தெரிகிறது
மோசக்காரா! என்னை
வேடமிட்டு நடித்து
ஏமாற்றிவிட்டாய்! உன் பொய்
வேடம்எல்லாம் கலைந்து
எனக்கு உண்மை தெரிந்தது!

காடதினில் வாழ்ந்தாலும்
இனியுன்னுடனே நான்வாழேன்!
ஓடதனில் பிச்சையெடுத்தாலும்
உன்னுடன் நான்வாழேன்!
ஓடு! ஓடு! எனைவிட்டு
இனிஓடிவிடு! என்முன்னே நில்லாதே!
ஓடு! ஓடு! எனைவிட்டோடு!" என்ற
அந்தப் பெண்கிளியை

"போடி! போடி! குடிகேடி
உனைப்போய் நான் நம்பி வந்து
நாடிவந்து பட்டதுன்பம் போதுமடி!
இனியுன்னோடு
வாடிவாடி வதங்கியது போதமடி
வாய்காரி! நாதியின்றி உனை
நாடி வந்ததுதான் பாவமடி! போதுமடி
உனைநம்பியது போதுமடி!"

என்றுசொல்லி சண்டைக்கு
வலிந்தழைக்க ஆண்கிளிதான்,
"நன்று! நன்று! இனிநீங்கள்
நாறடித்த நிலைபோதும்! இனி
என்றுமே ஒன்றுபடமாட்டீர்கள்
என்பதுமெய்! நம்வேலை
நன்றாயே முடிந்ததுவே!'
என்றுசொல்லிச் சதிகாரர்

நன்றாய் எகத்தாளமிட்டுச்
சிரித்தபடி சிறை தனைத்திறக்க,
ஒன்றாய்ப் பறந்தனவே!
ஒருமித்து இணைந்தபடி! "நாம்
வென்றோம் கண்மணியே!
காலம் கனிந்து வந்ததுவே!"
என்றதுமே பெண்கிளியும்
"இல்லை இல்லைக்கண்ணாளா!

நன்றாய் வியூகம் வகுத்து
நீ சொன்ன புத்தி
நன்றாய் வேலைசெய்ததுவே!
விதியே கதியென்று
ஒன்றாய் முடங்கிக்
கிடந்திருந்தால் வென்றிருப்போமா!
வென்றோம் உன்மதிநுட்பம்
ஜெயித்ததுவே கண்ணாளா!"

என்று சொல்லிப்பெண்கிளியும்
களிப்புடனே கன்னமதில்
நன்று நல்முத்தங்கள்
பதித்திடவே, ஆண்கிளியும்
"நன்றாய் நீ நடித்தாயடி கள்ளி!
உன் நடிப்புக்கு
என்றும் என்முத்தங்கள்
உன்சொந்தமடி" என்றதுவே!


"விதியே கதியென்று ஒடுங்கிக்கிடந்திட்டால்
மதிக்கங்கு வேலை எங்குண்டு!" என்ற பாடம்
மதிகெட்ட மாந்தர்க்குப் புரிவதில்லை என்றும்
விதிசொல்லித் திரிகின்ற வீணர்க்கு இதுபாடமன்றோ!..

நன்றி
சுபம்.

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3567&hl=

"சமநீதி"

நீதியின் சின்னம் படும்பாடு!நியாய
வாதிகள் தம்மில் படும்பாடு!
பாதியில் இன்னும் பெரும்பாடு!பக்க
வாதிகள் தம்முள் சுடும்காடு!

சாதிகள் தம்முள் சாதிக்கும் உயர்
நீதிகள் எம்முள் போதிக்கும்
நீதியின் இன்னும் இழுபாடு! அதன்
நாதியின் தன்மை குழுமாடு!

நீதிகள் செத்து மடிகிறது!கொடும்
பாவிகள் பித்து எழுகிறது!
நாதிகள் அற்ற தன்மையினால் சிலர்
மேவிடும் சித்துப் பலிக்கிறது!

ஓதிடும் மனங்களில் உண்மைகள் ஓங்கி
ஒலித்திடவேண்டும்! நன்மைகள்
வாதிடும் மனங்களில் உண்மைகள் என்றும்
பலித்திடவேண்டும் திண்மைகள்!

நீதிகள் வேதம் மெய்த்திடவே சாம
பேதங்கள் தண்டம் ஓங்கிடவே
பாவிகள் பாவங்கள் தொலைந்திடவே நீதி
பேதங்கள் தண்டம் பெற்றிடவேண்டும்!

நீதிகள் தம்மை மறப்பவரை புத்தி
ஜீவிகளாக நினைப்பவரை
நாதியில்லா நிலையாக்கிடவே நியாய
சாவிகள் சகிதம் சாத்த வேண்டும்!

நீதிகளாகும் நிலைவேண்டும்! சம
நீதிகள் உலகம் பெறவேண்டும்!
பாவிகள் ஆணவம் மடிந்திடவே நீதி
காவிடும் என்ற நிலைவேண்டும்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3713&hl=

"பாட்டுக்கோட்டை"

"பாட்டுக்கொரு கோட்டை அவன்
பட்டுக்கோட்டை!" அவன் பாடல்கள்
காட்டும் கோட்டை! அவன் தேடல்கள்
கூட்டும் இனிய உதயக் கோட்டை!

காட்டுமனங்களையும் பாட்டில்வைப்பான்!
மாட்டும் மனங்களையும் ஏட்டில் வைப்பான்!
கூட்டும்! சுவை கூட்டும்!அவன் பாட்டின் சுவை
காட்டும்! சுகம் காட்டும்! அவன் பாட்டின் கோட்டை!

பாட்டைப் பாடியே அவன் பாட்டைப் பாடியே
நாட்டைப்பிடித்தவர் ஏராளம்! ஏட்டைத்தொடாதவரும்
பாட்டைப்புரிந்து கொள்ளும் பாட்டுக்கள் அவன் பாட்டு!
சாட்டைபிடித்துச் சாத்தும் அவன் பாட்டு! மிருக

வேட்டையாடும் அவன் பாட்டு! கோடு போட்டுச்
சாட்டையோடு நீதி காட்டும்! மனச்சாட்சியோடு
வேட்டையாடும்! சாதிப்பாகுபாட்டை அது ஓட்டும்!
ஓட்டைபோடும் மனங்களோடும் அவன்பாட்டு நன்றாய்

சாட்டைகொண்டு அதுதாக்கும்! ஒன்றாய் நின்று
நாட்டைக்கட்டியது ஆள வழிகாட்டி நின்று ஒளிகூட்டும்!
பாட்டைக்கொண்டு பலர் வேட்கை தீர்த்த அவன் பட்ட
பாட்டையார் அறிவாரோ! பட்டினிச்சாவினில் நாளும்

ஒட்டியுலர்ந்தான் அறிந்தாரோ! அவன்பாடல்
பட்டிதொட்டியெங்கும் நட்டவிருட்ஷமதாய்
ஒட்டியுறவாடியதே! கட்டியங்கூறியதே! ஆனால்
ஒட்டியுலரந்தான்! அவன் ஒட்டியுலரந்த கதையறிந்தாரோ!

திட்டம்போட்டுத் திருடும் கூட்டத்தை அவன்
வட்டம்போட்டுக் காட்டினான்! சட்டம்திருத்தா
வட்டத்தை அவன்பாட்டு வட்டம்திருத்தியதே!
திட்டத்தைக்காட்டியதே! உயர் திட்டத்தைக்காட்டியதே!

சட்டத்தைப் படிக்காத மனங்களைப் படித்த
சட்டவாதியவன்! சட்டாம் பிள்ளை அவன்!
பட்டத்தைப் பெறாத பள்ளிப்படிப்பறியாப் பட்டதாரி அவன்!
திட்டத்தைப் போட்டு தீர்க்கதரிசனத்தைக் கோடுகாட்டியவன்!

"பட்டுக்கோட்டையே! பாட்டுக்கோட்டையே!
இறக்கவில்லையடா நீ! இறந்தவன் நானடா!
பட்டுக்கோட்டை! இனி என்னாய் இருப்பவன் நீயடா!
இறந்தவன் நான்தானடா!" என்றானே கவிகண்ணதாஸன்!

பாட்டுக்கோட்டையே! பட்டுக்கோட்டையே!
நாட்டுப்பற்றாளனே! நீ காட்டியவழியில்தான்
நாட்டில் நல்லவர் வாழ்கிறார்கள்!கிழக்கு
காட்டும் உண்மையிதே!கிழக்கே! நீ வாழியவே!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"பாரதிக்கு ஓர் மடல்!"

"பாரதியே மன்னித்துவிடு!"
என்று ஒர் மடல்
வான்தவழும் காற்றில்
தவழவிட்டேன் அன்று!
"பாரதி நான்களைத்துவிட்டேன்
ஐயா! மற்றோர்பிறவி
நான்வருகின்றேன்
சந்திப்போம்" என்றேன்!

பாரதி! உன்செவிதனுக்கு
வீழ்ந்ததனால்
ஏன்எனை நீ உயிர்
பிழைக்கவைத்தாயோ!
சாரதியாய் மனதொன்றை
இணைத்துவிட்டு
தேன்தமிழில் தவழ்தென்றலதாய்
வருடவைத்தாய்!

பாரதி! வருடங்கள் ஐந்தாகி
பலநூறு அநுபவங்கள்
நான் பெற்றேன்! சந்தம் இசைத்து
செந்தமிழில் சுகம்கண்டேன்!
பாரதியுன் எண்ணங்கள்
வண்ணங்களாகி என்சிந்தைக்குள்
தேன்தமிழாய் இனித்திருக்க
பனித்திருக்கும் இனிமை சுகம்கண்டேன்!

பாரதி! நீ பா ரதி!
பார்த்தசாரதி அவன் காதலி நீ!
வான்சுடர் நீ! தேன்தமிழ் நீ!
நான் விரும்பும் தேன்சுவை நீ!
பாரதில் பார்புகழ் பாரதிநீ!
தேரதில் பவனிவரும் தேன்கனி நீ!
வான்சுடர் உள்ளவரை நீயிருப்பாய்!
எங்கும் நீ நிறைந்திருப்பாய்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3830&hl=

"நம்பெருமை"

"பாசம்" பார்முழுதும் படர்ந்திருக்க
"பாசம்" தன்னின் படர் நிலைதெரியாது
"பாசம் நமக்குமட்டும் சொந்தம்! தேசப்
"பாசம்" என்றுமே நம் சொந்தம்!" என்று .

தேசம் விட்டு பிற தேசம் வரும்வரை
"பாசம்" பற்றிய கருத்தை நானும் கொண்டதுண்டு!
தேசம் விட்டு பிற தேசம் வந்த பின்பு
"பாசம்" பற்றிய கருத்தில் மாற்றம் கண்டதுண்டு!

நேசம்கொண்ட மனங்கள் தம்மை நிற
பேதம்தாண்டிப் பார்த்திருந்தேன் இன்று!
வாசம்மிக்க பாசம் கொண்ட மனித
நேசம்கொண்ட மனங்கள் பார்த்தேன் இன்று!

"நேசம்" கொண்ட "மனித நேயம்" தன்னை பல
தேசம் தன்னில் பார்த்தேன் இன்று! நம்மில்
நாசம்கொண்ட நம்மவர்கள் சிலர் நம்
தேசம்தாண்டி வந்து செய் சேட்டைகளால்...

தேசம்விட்டுத் தேசம் தாண்டிவந்து
நாசம் செய்யும் சில கூட்டங்களால்...
நேசம்பற்றிச் சந்தேகம் மேலைத்
தேசங்களைப் பாதித்திருந்ததனால்...

நேசம்கொண்ட மேலை இனங்கள்கூட
நாசக்காரர்போல நமைப் பார்த்ததுண்டு!
பாசம்கொண்ட மேலை மனங்கள் சில
நேசக்கணைகளாலே நமைத் துளைத்ததுண்டு!

"தேசம்விட்டு தேசம் வந்து உங்கள்
நாசக் கேட்டை நாம் பார்த்தபின்பு
பாசம்வைக்கப் பயமாயிருக்கு!" என்று மேலைத்
தேசர் நம்மைக் கேட்பதுண்டு! அவர்தம்

பாசம் கொண்ட மக்கள் தம்மை
நாசம் செய்யும் நம் சிலர் செய்கையாலே
பாசம்வைக்கப் பயம்தான் கொண்ட மேலை
நேசம்கொண்ட மனங்கள் கூற்று அது!

வேசம்எல்லாம் கலைந்த பின்பு மனித
நேசம் எல்லாம் தொலைத்தபின்பு பிற
தேசம்மீது குறைகள்சொல்ல மேலைத்
தேசப்பாசம்மீது கறைகள் சொல்ல....

பாசம்கொண்ட மனங்கள்போல நடிக்கும்
வேசம்கொண்ட சிலர் தமக்குள் தம்தம்
தேசம்மீது பற்று என்று பிதற்றும்
கோசம்செய்யும் நிலைதான் ஏதோ!!

பாசம் இருக்கும் மனங்கள்கூட
பாசம்தனுக்காய்ப் தினமும் பார்த்திருக்க
நாசம் கொண்ட மனங்கள்தம்மில் நாம்
பாசம் கொண்டு அலைநிலைதான் ஏனோ!

பாசம் சக்தி இழந்திடாதா! அவர்
வேசம் புத்தி அறிந்திடாதா!
நாசம் செய்யும் மனக்களைகள் நீக்கி
நேசம் பாசம்தனை நாம் வளர்ப்பதற்கு....

தேசம்விட்டுத் தேசம் வந்த
தேசத்திலும் நாம் பாசம்வைத்து
பாசம் காட்டிப்பழகும் போதும் நம்
தேசப்பற்றும் கூடும்! கூடும்!

"பாசம்" நிறபேதம் தாண்டி நம் இதயம்
பாசப்பார்வை பார்க்கும் பார்வைக்குள்ளே
நேசம்காட்டி நாமும் பார்த்தால் போதும்!மேலைத்
தேசம்கூட நம் பாசப் பெருமைகூறும்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3849&hl=

"குருட்டுக்கண்களைத் திறந்துபார்!"

திருட்டுக்கள் பல
ரகம்!
இருட்டுக்குள்
நடக்கின்ற
திருட்டுக்கள் பல
ரகம்!
மருட்டும் விழிக்குள்
திருட்டுக்கள் பல
ரகம்!
சுருட்டும் கவிதைத்
திருட்டுக்கள் பல
ரகம்!
இருட்டுக்குள் மட்டுமல்ல...

குருட்டு மனங்கள்
பட்டப்பகலுக்குள்
உருட்டு விழிகள்
திருட்டுவழிகள்
ஓர்
பொருட்டும்
பயமின்றித்
திருட்டுநிலைகள்
சுருட்டும்
கதைகள் சூழும்
நிலைகள்
அது
தொடர்கதைகள்!

குருட்டு
உலகம்தான்!
குருட்டு
மனங்கள்தான்!
திருட்டும்
புரட்டும்
தெரிந்து
மனங்கள்தாம்!
திருட்டும்
புரட்டும்
அறிந்து கொண்டு
சுருட்டும்
உலகைத் திருத்தவேண்டும்!

வெருட்டும்
வழிகள் கண்டு
திருட்டுக்கும்பல்
சுருட்டும்
நிலைகள் கண்டு
அதை
அழிக்கும் பொருட்டு
குருட்டு விழிகள்
விழிக்க
வேண்டும்!
அந்தத்
திருட்டுக் கும்பலை
அழிக்க வேண்டும்!

உன்
குருட்டுக்கண்களைத்
திறந்துபார்!
சுருட்டும்
மனங்களை
அறிந்துபார்!
சில
மருட்டும்
விழிக்குள்ளும் கலைத்
திருட்டு
இருக்கு!
உன்
குருட்டுக்கண்களைத் திறந்துபார்!

அன்புடன்
ஆதித்ததாஸன்