செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

இதயம் எழுதும் மடல் (10)



உதயத்தைப்பார்த்து
இதயத்தைச் சேர்த்தெடுத்த இளந்தென்றலே!

இன்றும் மடல்வரைய
நேரம் கூடிவந்து தாலாட்டுகிறதே!
அன்றும் இன்றும் என்றும் ஒன்றுதான்!

காதல்!காதல்!காதல்!
கனவுகளில் கவிதைகளில்
கவிதை உன் நினைவுகளில்.....

காதல் மொழிபேசும் உணர்வலைகள்!
என்றும் உன்சொந்தமான
தாலாட்டுத் தென்றல்தான்!

தென்றலை நேசிக்கும்
பிரியமானவன் பிரியமாய்
மடல்களின் உரிமமாய் தவழ்ந்திருந்து.....

தவித்திருக்கும் உடல்தனுக்கு
பாலூட்டும் நேரம் இது! மதுரசப்
பாலூட்டும் நேரம் இது! "தேனூடும் இதழ்களில்...

தேன்தமிழூறும் அலைகளுக்கு இடைவெளியா!" என்றாய்!....
இடைவெளியா! இடைவளியா! காற்றின் இடைபுகுந்து
மடைதிறந்து மடல்திறந்து மனந்திறந்து பேசிவிட...

காற்றின் வெளிக்குத் தடையேது!
காற்றின் அவைகளுக்கும் தடையேது!
தவழ்ந்துவரும் தென்றலில் திங்கள்

இணைந்துவரும்போது....
தடைபோட யாருண்டு!
தடைதாண்டிவிட தடையேது!

விடைபுரியா மயங்கிடும் மனங்களுக்கு
நடைபயிலும் தென்றல்தான் விடை சொல்லிடுமே!
"அவள் அப்படித்தான் தொடர் என்னாச்சு!" என்று என்னவள்

நீ மனதோடு கேட்பது புரிகிறது!
வரிந்துகட்டி அவளை இழுத்துவர இஷ்டமில்லை!
அவள் எப்படியோ வருவாள்!

"எப்போது வருவாள்!"
என்ற கேள்விக்கு "அவள் வரும்போது
வருவாள்!" என்பதே பதிலாகும்!

"என்ன றஜனி ஸ்டைலா என்கிறாயா!"
எப்படியோ சொல்லிக்கொள்! அப்படியே அவள்
எப்படித்தான் வருவாளோ அப்படியே வரட்டும்!

"சரி! சரி! அதைவிடுங்கோ!
"நேசிக்கும் தென்றல்" சுடர்விழி என்னானாள்!" என்று கேட்கிறாயா!
யாசிக்கும் அவள் எனக்குமட்டும் சொந்தம் என்றாள்!

"உங்களை நேசிக்கும் என்னை
ஏன் வெட்டவெளிச்சம் போட்டுக்காட்டுகிறீர்கள்!" என்கிறாள்!
என்ன நினைத்தாளோ! சட்டென்று திரும்பி...

"சரி!சரி! காட்டுங்கள்! நீங்கள்தான்
கவிதைகளில் கதைகளில் பலர்
கதைகளைப் படம்பிடிப்பீர்கள்!

நல்ல மனங்களில் இடம்பிடிப்பீர்கள்!
தடைசொல்ல நான் யார்! தொடருங்கள்!" என்றாள்!
"நானும் உங்கள் வாசகிதானே!

உங்களை வாசித்து நேசிக்கும் வாசகிதானே!
வாசிக்கின்றேன்! வாசகர் முற்றமதில் பதியுங்கள்! பார்க்கின்றேன்"
என்கிறாள் இப்போது!

நிலாவவள் ஆதங்கம்
உன்தனுக்கு பொறாமைதான் தரும்!
நிலாவவள் ஓர்தங்கம்! அவள்

நீ பொறமைப்படும் ஒருத்தியல்ல!
வருத்தம் வேண்டாம்! கங்கை சடைவைத்தவனும்
திங்கள்தனைச் சூடிய விந்தைக்கதை புதிதல்லவே!

சந்தைக்கு வந்த கதைதானே!
வாடிய மனந்தனில் வருடுகின்ற தென்றல் நீ!
உனக்கு இது புரியாததா!

புரிந்ததானால்தானே....
நேசிக்கும் தென்றலானாய் நீ!
திங்களவள் முற்றமதில் இணைந்து...

தாலாட்டும் சுடரொளிக்கதிரொளி
மறைந்திருக்கும் செடிகொடிகளுக்கும்
ஒளிகொடுக்கும் நிலைதானே!

படம்பிடிக்கும் பலரின்
பொறாமைக்கு பதில் சொல்லும் நீ
பொறாமைப்படுவாயா!

இல்லையில்லை!
நீ என்றும் அந்நிலையில் இல்லையில்லை!
என்னவள் உன்னிடம் பொறாமைப்பேச்சுக்கே இடமில்லை!

உனக்கு நன்கு புரியும்!
பொறாமை மனங்களில் சுடரொளி தங்குவதில்லை!
சுடரொளி தன்னைக்கொடுத்து இனிமைதருவாள்!

தனிமைவிரட்டி இனிமை தருவாள்!
மடல்விரித்து மகிழும் இளந்தோகைமயிலவள்!
"வான்கோழி வான்மயில்தோகைப்போர்வைக்குள்

நுழைந்திட்டால் கானமயிலாகிடுமா!"
தோகைமயிலாகத்தோன்றும் பல வேடங்கள் போடும்
வான்கோழி மனிதமனமல்ல அவள்மனம்!

தேனோடு தேன்தமிழாய்
சுடர்பரப்பும் சுடரொளியாய் தென்றலாய்த்
தவழ்ந்திருக்கும் திங்களவள்!

பொங்கும் பூம்புனலாய் எங்கும்
அவள் சுடர்வீசிடுவாள்!
"என்ன! சுடரொளி பற்றிய புராணமாய் இன்றைய மடலா!"

என்று....
நீ விழிப்புருவ உயர்வு வேண்டாம்!
"சுடரொளி" என்னவோ தெரியவில்லை....

மனதோடு இடம்பிடித்த
உன்னோடு சண்டைபிடிக்கிறாளே!
அன்புச்சண்டை அது!

நீ அடம்பிடிக்காதை! அவள் அன்புப்பிரியை!
புரியாத பல புதிர்களைப் போட்டு எனைத்
திக்குமுக்காடச்செய்தவள் அவள்!

அவளை அன்போடு ஏற்றுக்கொள்வாய்!
பண்போடு மனிதப்பண்போடு ஏற்றுக்கொள்வாய்!
வெறும் "வாய்ப்பண்பாடு" பேசுபவர் மத்தியில்...

என்பாடு நீயறிவாய்!
என்னோடு இணைந்திருக்கும்
என்பாடு உனக்குப் புரியாததல்லவே!

கூட்டுக்குள் இதயக்கூட்டுக்குள்
இணைந்திருக்கும் உன்தனுக்குப்புரியாததா!
உயிரோடு ஒன்றாய் ஒரு போர்வைக்குள் உணர்வோடு....

உடல்தழுவி இதயவானில் சிறகடித்த நாட்கள்
நினைவுதர கனவுகள் உன்னோடு
உதயத்தை நாடிவிட மனதோடு....

என்னோடு என்னுயிரோடு கலந்து
உன்னோடு பேசிய நிறைவோடு......
இனிமை உணர்வோடு....

மீண்டும் மறுமடலில் தென்றலாய் வருடும்வரை...
நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3788&hl=

இதயம் எழுதும் மடல் (9)



இதயத்து உதயத்து நிலவே!


இனிமையுள்ள இதயம் ஒன்று
அன்றலரந்த மலராகி வனிதையுன்னை
வந்தடைந்த வரலாறு படைத்த விந்தை...

தனிமைதனை விலக்கி
தவிப்புக்கள் தனைநீக்கி இனிமை
உலகமதை உனைக்காண வைத்ததே!

மனிதநேயம் மதித்திட
மலர்ந்த நேயம்.. புனிதமுள்ள
மனதோடு இனிதமாக இணைந்து...

இசைவாக புனிதவேள்விக்குள்
தடம்பதித்த சுகங்கள்!
இடம்பிடித்த சுகராகங்கள்...

நடம்பயின்ற விந்தை
நயமான விந்தை!
சந்தத்தில் உன் சிந்தைகுளிர்வித்து...

"இந்த உலகில்
இப்படியும் சுகங்களா."...
என்ற புருவ உயர்வோடு.....

"எப்படியும் சந்தித்தே தீர்வது
இந்த சுகங்களை" என்று
சிந்தையில் நிறுத்திவைத்த சங்கற்பம்...

சாத்தியமானதடி!
சாத்திரங்கள் தொலைந்து சுக
சாத்திரம் ஒன்றெனக்கரைந்து...

நிறைந்திட்ட இதயம்
உதய இன்பவேள்விக்குள்
தடம்பதித்தது எப்படிச் சாத்தியமானதடி!

நீர்த்திவலைகள் வேர்த்திருந்து
சுகம் சேர்த்திருந்த விழிச்சந்தோச
நீர்த்திவலைகள்.... அகம்மலர்ந்த தாமரை

முகம் சிவந்து பார்த்தவிதம்....
யுகக்கணக்கணக்கில் பார்த்திடத்தோன்றுதடி!
இகத்தில் மட்டுமல்ல.. ஏழேழ்பிறப்பிலும் இணைந்திட்ட

சொந்தமாக எண்ணிட வைத்ததடி....
"வந்தோம் பார்த்தோம்
போனோம்" என்றா இருந்தோம்...

பார்வைகள் பரிமாறி
இதயக்கோர்வைகள் கவிதை பாடிவிட....
உதயகீதம் சந்தம் இசைத்து சுதிமீட்டிட....

வீணையாக நீயும்
மீட்டும் விரல்களாக நானும்.......
தேனுண்ணும் வண்டு தேன்நிறைந்த மலர்மீதமர்ந்து....

தென்றல் தழுவலுடன்
கூட்டும் சுகந்தமுடன் அசந்தநிலையில்
இசைந்திருந்த தேன்மலரே!..

உன்தேன்மொழி அதரங்கள்
வெளுத்துவிட...வான்கதிர்சுடரொளி
கண்ணதாஸன் கொடுத்திட்ட பாடலதாய்.......

மடிமீது தலைவைத்து
விடியும் வரை கதைபடித்து
விழிகள் சிவப்பாகி விடிந்தது தெரியாமல்......

கிழக்கு விழிபார்க்க
விழித்திட்ட கதிரவனின் சிவப்பு
உன்முகம் பரவ.....

கழித்திருந்த நாள்
மறந்திடமுடியாது..மறந்திடமுடியாதடி...
விழித்தபடி பார்த்திருந்தாய்!...

"என்னடி பார்க்கிறாய் கள்ளி.".
என்று கேட்டதற்கு.".ம்..ம்..புலவருக்கு
விடிந்தது தெரியாது சுதிநயமோ."..

"மதியோடு மதிசேர்ந்து கதிரொளியாய்
விதியெழுதும் கதைதனைப்பார்க்கிறேன்!கவியெழுதும்
காந்தவிழிக்கண்களைப்பார்த்த வண்ணம் இருக்கவேண்டும்"

என்றாய்.."போடி பைத்தியமே..
உன் கிருஸ்ணகாந்தவிழிமுன்னால்
இந்தக்கொள்ளிக்கண் எந்த மூலையடி!" என்றேன்...

கொல்லென்று சிரித்து
சில்லென்று என்விழியில் இதழ்பதித்து
நல்தவழும் தென்றலதாய் தலைகோதிவிட்டாயே..

"அலைமோதும் ஆசைகளைத்தூணடிவிடும்
உன்விழிகளது வடித்தகவிதைக்கு.....
ஆசைகொண்ட உன்னவனின் ஏழிசைகீதமடி இது."..என்று

மீட்டிநின்ற காலங்கள்..
என்றும் சேர்த்திருக்கும் கோலங்களாய்
திசைகாட்டியதன் திசைக்கு...என்னை இழுத்துவந்து...

உட்காரவைத்து
இதயம் மீட்டீய என்சுந்தரிக்கு
மடல் எழுதவைத்ததடி..

நேரம் இதயம் எழுதுவதை
மடலில் எழுதுதற்கு முடியாதநிலைதான்..
கிடைக்கும் நேரமெல்லாம் எழுதுகிறேனடி...

உடைக்கும் அணைதிறந்த வெள்ளமென
மனது எழுதுவதை மடல்
எழுதமுடியாதபடி நேரந்தான் பிரச்சனை...

இலட்சனைகள் மனது பதிக்கிறது..
உனது இதயம் எழுதும்மடல்
இன்னும் விரியுமடி..

நினைவுகளின் தழுவலோடு
சுகம்சேர்த்திருப்போம்...
கனவுகள் கவிதைபாடட்டும்...

கவிதையுன் கண்களில்
வேண்டும் வரம் ஒன்று..
என்றும் உனைத்தீண்டும் சுகம் என்றும்...

வேண்டும் வரமாக
வேண்டுமடி கள்ளி...மீண்டும்
மறுமடல்வரை இனிமைசேர்க்கட்டும் இம்மடல்...

மீண்டும் மறுமடலில் தென்றலாய் வருடும் வரை...

நன்றி
சுபம்..

அன்புடன்
ஆதித்ததாஸன்
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3615&hl=

இதயம் எழுதும் மடல் (8)



ஒன்றாய் இதயமதில் இணைந்திருக்கும் இதயமலரே!

நன்றாய் எதிர்பார்த்து எதிர்பார்த்து
"என் இதயமதின் மடலைக்காணவில்லையே!"
என்று ஏக்கமுடன் தாக்கங்கள் நிறைத்திருப்பாய்!

இதய
மன்றுதனில் எழுதுவதை
உதயமுன்றல்தனில் நீ எதிர்பார்ப்பது
நன்றுதான்! நன்றுதான்!

ஒன்றாய் உயிர்கலந்த
உன்னுறவு உனக்கும் எனக்கும்
நன்றாய்ப் பிணைந்ததுதான்!

அன்று
உன் காந்தவிழி பேசியது
இன்றும்
மனதோடு பேசுதடி!

என்றும்
இனிமையின் சுகராகமாய்
நன்று கதைபடித்து கவிதை கிறுக்க வைக்குதடி....

அன்று நனைந்து தோய்ந்து
இதயம்
பேசியதன் எதிரொலிகள்
இன்றுபோல் இருக்குதடி....

"பர்ர்த்தேன் ரசித்தேன் பக்கத்தில் அழைத்தேன்....
என்று
பாடியவன் பார்த்திருந்தால்
பல கோடிக்கவிதைகள் புனைந்திருப்பான்!

ஒன்றுமட்டும் உண்மையடி..!
உன்
காந்தவிழி பார்த்தபின்தான்
இவன்
ஏதோ கிறுக்கத்தொடங்கி...
என்
முதல் இரசிகை அதுநீதானே..

கிறுக்கனின் கிறுக்கலுக்குள்
உருக்கம் இருக்கென்றாய்...
இரக்கம் இருக்கென்றாய்...
"கருக்கிவிடும் எதிரிகளின் இதயமதை
உங்கள் கிறுக்கல்" என்றாய்..
"இரக்கமில்லா அரக்கத்தனங்களை

உருக்கி அழித்திடும் உங்கள் கிறுக்கல்"
என்றாய்...
பெருக்கிவிடும் நல்மனங்களை
உங்கள் வசமென்றாய்!

"இருக்கிறது!..இருக்கிறது! ..
உங்கள் கிறுக்கலுக்கு
சக்திஇருக்கிறது"
என்றாய்!
"என்னவோ என்மேல் உள்ள காதலினால்

கூறுகின்றாய்" என்றேன்!
"காதலினால் அல்ல
உங்கள்
ஏறுநடைதெரிந்துதான் கூறுகின்றேன்"
என்றாய்....
"உங்கள்
வீறுகொண்ட வீரம்தெரிந்துதான் கூறுகின்றேன்"
என்றாய்..
ஊறுகின்ற உன்னிதழ்கள் கூறுகின்ற அழகை
நான்
இரசித்துநிற்க..

நாணிநின்றாய்!
நாணிநின்றவாறு காதல்மொழி பேசிநின்றாய்..
ஏணியதாய்
உன்னாலே நான்கண்ட ஏற்றம்
கூற்றுவனும் நெருங்கவிடா
வாணியுந்தன் காதல் ஏற்றம்..

"காணிநிலம் வேண்டும்" என்றான்
கவிபாரதி..."கலை
வாணியுந்தன் காந்தவிழிபோதுமடி எந்தனுக்கு"
என்றேன்..
"நினைவுளதாடி!!..."

ஆணியடித்ததுபோல் அச்செழுத்துக்காரி நீ.!.
அச்சுக்குள் உன்
இதயம்
நாணிநீ சேர்த்தெடுத்த கவிதையது நினைவிருக்கா..
இன்றும் என்
இதயம்

ஏணியதாய் ஏற்றமுடன்
ஏற்றிவைத்த பலவிளக்குகள் விளக்கம் சொல்லும்..
வாணி நீ! கலைவாணி நீ!
கவிதைக்குள் நிலை வாணி நீ...
என் இதய

உதயமானவளே!
உன்
இதய அரவணைப்பில்
என்
இதயம் புலம்புவது
கவிதையல்ல..

உன்னிதயம் துடிப்பதுதான் கவிதையடி..
கண்ணே!...
"கதையும்கவிதையும் காசுதரவேண்டாம்!
உங்கள்
மனதுதனை ஆறு அதாய்
உதயசூரியனாய்
மகிழவைத்தால் போதும்" என்பாய்...

" உண்மைதானடி கண்ணே!
உன்
அன்பு அதுதான் மதுவெனக்கு...மயக்கமதைத்தந்து
மகிழவைக்கும்
உன்னன்பு
அதுவொன்றே என்றும் என்னுடன் கதைபேசும்...

உன்
பெண்மையின் நளினம் தருகின்ற
உண்மையின் இரகசியம்....அதுதானடி!
என்
மகிழ்வின் உச்சம்!" என்றேன்...
அப்படியே என்மேல் சாய்ந்தாயே!...
அன்றுதந்த

சுகம் ....
கோடிகொடுத்தாலும் கிடைக்காதே!...
இகத்தில்மட்டுமல்ல...
அகம்
தரும் சுகம் மறுபிறப்பிலும் இணையவேண்டி
இறைவனை வேண்டுகிறேனடி...

சுகங்களில்
சுகமான இராகமாய்
சுகவீணையாய் சுருதிமீட்டவேண்டுமடி கண்ணே!
சுகங்களோடு சுகநினைவுகளோடு
சுருதிமீட்டிய
இன்ப இதயவீணையே!...

மீண்டும்
மற்றுமொரு மடலோடு தென்றலாய்உனைத்தழுவும்வரை.....

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3347&hl=

இதயம்எழுதும்மடல் (7)


"கேள்வியதன் பதில்!"
---------------------
இதயத்து இனிய மனதுக்கு!

உதயத்தில் ஒருநாள்
உன் குரல் கேட்டு இதயத்தில்
மலர்வுகொண்டேன்!
இன்ப இதயத்தைக் கண்டுகொண்டேன்!

புலர்கின்ற பொழுதாகி
மலர்கின்ற மலராகி, கனிந்த கனியாகி
ஏனிந்த மாற்றம்!

இனம்புரியாத இன்ப மாற்றம்!
நானிந்த
நிலைமாற வானந்தான்,
வான் அலைதந்த கோலந்தான்,
கலை ஞானந்தான் காரணமா!

மலை தந்த மனத்தோடு,
கலை தந்த சுகத்தோடு,
கவித்தாய் தந்த அன்புப்பாலோடு,

பாடி வரும் இளந்தென்றலின் தெம்மாங்குத்
தேன் தமிழோடு,
ஓடி வரும் நதியலையாய் உள்ளம்
பாடிவர,
சூடிவரும் சுடரொளியாய் இதயம் நாடிவரும்
நிலை ஏனோ?..

கூடிவரும் மனங்களில்,
ஓடிவரும் கணங்களில், இளமை
தேடிவரும் நிலைதானோ?..

நாடிவரும் நிஜங்கள், சூடி
வரம் கேட்கையில்,
"தாவிவரும் வேட்கை, தளிர்க்கொடியின்
தழுவலதன் சேர்க்கை",
என்று கூடி இருமனங்கள் ஒன்றாய்
கூவிவரும் குரல்கள், கூறுவது என்ன!

மனங்கள் ஒன்றாய்
ஆறுவது, ஆறுதலாய் தேறுவது,
ஆறு அதாய், தேன் ஆறு
அதாய், ஊறுவதன் காரணந்தான் என்ன?..
காரணங்கள் யாதோ!

தோரணங்கள் அசைந்து, இசைந்து
மனம்மகிழ்ந்து,
காரணங்கள் மறந்து,
காவியங்கள் நினைந்து, ஓவியமாய்
நெஞ்சில் சாய்ந்து கொள்ளும்போது,

சேர்ந்து கொள்ளும்
கொஞ்சல், கெஞ்சுவது சொல்லும்,
காரணத்தைக் கேட்டால்,

"காதலதன் மஞ்சம் காதலர்கள் நெஞ்சம் கூறுவதுதானே
ஆருயிரின் தேடல் ஓருயிரின் பாடல் கூடிவரும் கூடல்"
இதுவன்றி ஏது!.......

இனிமை இதய இளந்தென்றலின் வருடலோடு
மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்
29-06-2005.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3151&hl=

இதயம் எழுதும் மடல் (6)


"ஆசைக்கனவுகள்!"
--------------------------

இனிய மலருக்கு தென்றலின் இனிய வருடலுடன்!

இயற்கை மடியில்
இறைவனின் வடிப்பில் எத்தனை
இனிமைகள்!

இயற்கை ஒன்றிய
உயரிய உணர்வுகள் புணர்கின்ற
இனிமைகள்!

இனிய தென்றலாய்
இதமாய் மனங்களில் எத்தனை
இனிமைகள்!

வானத்துச் சூரியன்
மோனத்திலிருக்கையில்,
கானத்து மேகங்கள்

மௌனித்திருக்கையில்,
கார்கால மயில்களின் சேர்காலக் கனவுகள்
கானத்துக் குயில்களின்

மோனத்தவங்களின் ஊர்கோல
நினைவுகள்,
வானத்துச் சூரியன்

வாசல் வருகையில்,
மௌனத்தவங்களின் மலரும் சுக
நினைவுகள்!

சுகங்களின் சுகங்கள்
சுகங்களின் சுகந்தங்கள்- அவை
இனங்களின்,

உயிர் இனங்களின்
சுகராக ஸ்பரிசங்கள்!
என்றும் மனங்களின் மத்தியில்,

மலர்கின்ற இதயத்தில்,
வளர்ந்திடும் எண்ணங்கள்,
முகங்களின் மலர்வுகள்,

மகிழ்கின்ற உதயத்தில்,
வளர்ந்திடும்
காதல் வண்ணங்கள்!

கனிந்துவர,
காதல் கனிந்துவர,
கார்கால சுகங்கள்,

ஊர்கோலக்கனவுகளாய்
கலந்துவர,
காதல் கவிதைகள்,

சேர்கோல சுகங்கள்,
கார்கால மயில்களாய்
இசைந்து இன்பம் கூட்டிவிட,

துன்பங்கள் தொலைந்து,
சங்கீத ஸ்வரங்களாய்
அசைந்துவரும் ஆசைக்கனவுகள்,

ஓசையின்றி இசைவாக இசைகிறதே!
இசைகினற இனிமைக் கனவுகள்
வரவுவைக்க வரும் இளந் தென்றல்
இதமாக வருடிவிட

மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை...

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்.
28-06-2005.