புதன், 9 செப்டம்பர், 2009

இதயம் எழுதும் மடல்! (16)



இதயத்தில் இணைந்து
இதயத்தில் காதல்
உதயத்தை நிறைத்தவளே!

இன்று காதலர் தினமடி!
இன்றுபோல் இருக்கிறது!
அன்று ஓரு நாள்.....

நன்று என் மடியில் தவழ்ந்திருந்தாய்!
"இன்று காதலர்தினம்! இன்று
ஒன்றாய் நாம் இரவுபகல்

நன்றாய் பிணைந்திருப்போம்"!
என்றாய் நீ! கன்றாய் இளம்
கன்றுகளாய் இணைந்திருந்தோம்!

வென்றுவிடும் இனம்புரியா இளமைவேகம்!
கன்றிவிடும் கன்னங்கள் பழமை நாணம்!
ஒன்றிவிட்ட நிலையில் உணர்வுகளின் தாகம்!

"என்ன இது!" என்றாய்!
"என்னடி!" என்றேன்!
"என்னவென்று சொன்னால்தான்...."

"என்னது! சொல்லடி! என்றேன்!
கன்னம் சிவந்துகொள்ளும் கவிதைக்
கண்களால் எனை அளந்தாய்!

மின்னலிட்ட கண்மொழிக்குள்
கன்னமிட்டு கண்ணடித்தேன்!
பின்னலிட்ட கூந்தலுக்குள்.....

பின்னலிட்ட என்கைகள்
உன்வதனம் சேர்த்தெடுக்க.....
மின்னலிடும் முத்ததங்களால்

கொட்டிக்கொடுத்திருக்க...
ஒட்டிக்கொண்டென்னைக் கட்டிக்கொண்டாயே!
மொட்டவிழும் புன்னகைக்குள் கட்டிப்போட்டாயே!

தொட்டுவிடும் சுகங்கள் மலை
முட்டிவிடும் மேகம்போல் தேன்
கொட்டிவிடத் துடிக்கின்ற இதழ்களாய் படர்ந்திருக்க...

"விட்டுவிடு!" என்று சொல்ல மனம்வருமா..."இன்னும்
கட்டிவிடு! நன்றாய் கொட்டிக்கொடு!" என்று
விட்டுக்கொடுக்கும் தயாளமனத்தினளாய் நீ...

"இன்றுதான் புதிதாய் காதல் பிறந்ததுவோ.."
என்று நீ செல்லமாய் சிணுங்கலுடன் நிறைந்திருக்க
"இன்று அல்லக் கண்ணே! என்றும் புதுமையடி!

நன்று வரும் நாளெல்லாம்
சுபதினமே! சுகதினமே!
இன்று மட்டும் அல்ல காதலர்தினமே!

நன்றுமலர் தினங்களெல்லாம்
என்றும் காதலர்தினமே! காதலர்க்கு
என்றும் சுபதினமே....."

என்றவென் வாய்மொழியில் தேன்மொழி நீ
தென்றல் கவி தந்தாய்! தேன்தமிழாய்
நின்றிருந்தாய்! தேனிதழ்கள் நிறைத்திருந்தாய்!

வருடம் ஒன்று நெருங்கிவிட
வருடும் இதயம் எழுதும் மடல் இன்று
மருவும் உதய உணர்வுகளால்

மாலைசூடி வரவேற்கிறது!
காலை மாலைக் கனவுகளில் இதயச்
சோலை எங்கும் காதல்மணம்....

கவிதைபாடிக் களிக்கிறது.....
கதைகளாகிக் கனிகிறது!
காதல் விதைகளாகி இனிக்கிறது!

நேரம் நல்ல நேரம்தான்....
தூரம் இல்லா தூறல்தான்...இதயம்
பாலம் போடும் வேளைதான்...

காலைக்காற்று இதமாகக்
கவிதைபாடச் சொல்கிறது...
கவிதையுன்னை மாலையாக

இதயம் சூடிக்கொள்கிறது....புதிய
உதயகீதம் பாடிவர பதியம்
போடச்சொல்கிறது! பகிர்ந்துகொள்ளத்துடிக்கிறது!....

எதிலும் எதுவும் நீயாகி இதய
மதிலின் சுவர்கள் வீணையாகி
பதிலாய் சுகமாய் நாதமாகி

புதுமை நதியில் தவழ்கிறது....காதல்
இதழ்கள் தேனில் நனைகிறது!
இனிமைத்தினமாய் இணைகிறது....

உணர்வால் உடலால் இதயப்
புணர்வால் மடலால் பயணப்
படகில் பகிர்ந்து கொள்கிறது!.....

தினப்பதிவாகி காதலர்
தினப்புதிராகி காதல்
வனத்தில் கவியாய் கவிதையாய் நீயடி!

இதயவனத்துக்குயிலே...என்றும்
இனிமை நிறைக்கும் மயிலே...
இதழ்கள் விழிமடல் முத்தங்கள்....

அன்றைய நினைவுகளில்
இன்றைய விழிமடல்கள்...
என்றுமே உணர்வுகளால்
ஒன்றிய கவிமடல்கள்...

நின்று பார்க்கும் காலமல்ல...
வென்று பார்க்கும் காலம்!நீ
இன்று பார்க்கும் கவிக்கோலம் உனை
நன்று சேர்க்கும் மனக்கோலம்!

நன்றடி கண்ணே! மடலோடு
ஒன்றடி பெண்ணே!வருடம்
ஒன்றாகப்போகிறது மடல் வரைந்து...மீண்டும்
தென்றலாய் மறுமடலோடு.....

நன்றி!
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=5870&hl=