செவ்வாய், 22 செப்டம்பர், 2009

இதயம் எழுதும் மடல்! (18)



மீண்டும் ஓர் அதிகாலை!உனைத்
தீண்டும் இன்பக்கதிரொளி!மனத்
தூண்டல் சேர் சுதிராகம்! உனைத்
தீண்டிவிட வருகிறது!

வந்தது புதுவருடம்!நேரில்
வந்து நின்றாய் நீ எழிலரசி!
தந்தது முத்தங்களா! இல்லை..இல்லை....

சந்தம் இசைத்துவிடும்
சுந்தரத்தேன் இதழ்கள்
விந்தை நிறைத்துவிட்ட முல்லைத்தேன் வடிப்புகள்!

தந்திகள் மீட்டிவிட சுரம்
சிந்திய சுகங்கள் இதயம்
பந்தியை விரித்து பரிமாறிய விந்தைகள்.....

மொந்தைக்கள் தோற்றதடி!காதல்
சிந்தைக்குள் ஏற்றமதாய் வேகம்
சிந்தைகிளறி விட்டதடி!

நடந்தது நடப்பது நடக்கப்போவது
கடந்து நாம் மிதந்தோம்!காதல்
வடந்தனில் கட்டுண்டோம்!

நினைக்கையில் இனிப்பு!
மனத்தில் நிறைப்பு!கவிதை
கணத்தினில் விரிப்பு!

" வருவேன்! வருவேன்! வருவேன்!
தருவேன்! தருவேன்! பருகத்
தருவேன்! தருவேன்! "என்றாய்!

தேன்மொழியே! நீ வந்தாய்!
தேன்தமிழாய் கவிதந்தாய்!
நான் மகிழ்ந்தேன்!அகம் மலர்ந்தேன்!

இதயத்து நாற்காலி போட்டாய்!"கவிமேதை"
இதயத்து மேத்தாவை இனிமையுடன் இணைத்தாய்!
"உதயத்துக்கவிக்கு விருது கிடைத்தது!

இதயத்தை மென்மலராய் வருடுகிறதே!" என்றாய்!
உதயத்தை நமக்குக் காட்டியகவியல்லவா!நம்
இதயத்தை இணைத்து வைத்த விந்தையாளரல்லவா!

இதயங்களில் நாற்காலி போட்டகவிஞன்!நல்
இதயங்களை வருடிய மன்னவன்!இனிமை
இதயங்களின் நற்கவிமகனல்லவா அவன்!

"எழுது
எழுது
எனக்கொரு கடிதம்
எழுது!
என்னை
நேசிக்கிறாய்
என்றல்ல....
நீ
வேறு எவரையும்
நேசிக்கவில்லை
என்றாவது
எழுது!"

என்று இனிமைக்கவி தந்தவன்!
தென்றல் தனிமை நீக்கம் செய்தவன்!
ஒன்றாய் இணைந்திருக்கச் செய்தவன்!

இன்று நினைக்கையிலும் இதயம்
தென்றல் தவழ்வருடல் உதயம்
இன்றாய்த் தெரிகிறதே!

உன்னையும் என்னையும்........
உன்னைப்போல் என்னைப்போல் பலகாதற்
கண்களைத்திறந்தவன் அவன்!

"காத்திருக்கும் வரை
நம்பெயர்
காற்றென்றே இருக்கட்டும்!
புறப்பட்டு விட்டால்
புயலென்று புரிய வைப்போம்!"

என்று எழுதியவன்.....
என்றும் நம்மனங்களில் புதிய வீச்சுக்கள் தந்தவன்!
தென்றலாய் புயலாய் நம்மைப்புறப்படவைத்தவன்!

"கல்யாண மேடையை
அலங்கரிப்பதற்காகக்
கனவுகள் கண்ட
கன்னிப்பூக்கள்
சவப்பெட்டியின் மேனியில்
எரிந்து விழுந்தன!
ஒரு மகா காவியத்திற்கு
உன்னை நாயகியாக்கினேன்!
நீ
ஒரு கவிதைக்குக்கூட
உருவம் கொடுக்காமல்
போய்விட்டாயே!" என்று

கண்ணீர்ப்பூக்களின் கண்ணீர் நிலைதனை
கண்ணீர்ப்பூக்களில் கவிதையாய்க் கொடுத்தவன்!நிஜக்
கண்ணீர்க் கவிதைகளை மண்ணில் விதைத்தவன்!

"உன்னையன்றி ஒரு
பெண்ணை
நெஞ்ச விரல்களையும்
நீட்டித்தொடேன்!
என்று
அஞ்சனவண்ணன்
அறிவிப்புச் செய்தது
கம்பன் நமக்குக்
காட்டும் இல்லறம்!...

வைர அட்டிகையும்
வரதட்சணை பாக்கிகளும்
உன்னுடைய
தந்தை வந்து
உடனே தராவிட்டால்...
தோகையே
உன்னைத்
தொடமாட்டேன்! என்று
இளைஞர்கள் சொல்வது
இன்றைய இல்லறம்!" என்று

அன்றும் இன்றும் தொட்டுக்காட்டி
என்றும் இளையமனங்களைச் சுட்டிக்காட்டி
நன்கு விழிப்புணர்வைத்தூண்டியவன் அவன்!

"காதல் என்றாலும் "சமூகச்
சீர்கேடு" என்றாலும் "உலகப்போராட்டம்
பண்பாடு" என்றாலும் அவன் கவிகள் கோடுகாட்டுமே!

"ஆகாயத்துக்கு அடுத்தவீடு"
ஆஹா! நம் கவிஞனுக்கு "சாகித்திய அக்கடமி" விருது!
கண்ணீர்ப்பூக்களே தகுதிதான் அதற்கு! ஆனாலும்

காத்திருக்க வைத்துக் கவிஞனைப்
பார்த்திருக்க வைத்து விழி
பூத்திருந்த வாசகமனங்களில் தேன்

வார்த்து விட்ட சேதி அது! "நீ
சேர்த்துவிட்டாய் நல்ல நீதியடி!" என்று
நீதிதேவதையை போற்றிவைக்கும் நேரமிது!

'இந்த
பூமி உருண்டையைப்
புரட்டிப்போடக்கூடிய
நெம்புகோல் கவிதையை
உங்களில்
யார் பாடப்போகிறீர்கள்!"

என்று கேட்ட கவிஞனுக்கு...
என்றும் விருதுகளாய் வாசகநெஞ்சங்கள்
குன்றாய்க் குவிக்குமே!...'வாழ்த்துக்கள் வாழ்த்துவோமே!"...

அன்று வந்தாய்! வந்து தந்தாய்!
ஒன்றாய் ஓராயிரம் விடயங்கள் பேசினோம்!
இல்லை...இல்லை.. நீ பேசி என்னைப்பேசவைத்தாய்!

பொங்கலோடு வந்தாய்! நீயே
பொங்கலாய் நின்றாய்! உன்னை
பொங்கவைத்து பொங்கிவைத்து

பகிர்ந்துகொண்ட சுகங்கள்! புதுவருடம்
புரிந்து தந்த சுகராகங்கள்! இன்றும்
நினைவுகளாய் தித்திக்க...தித்திக்க...

நேர்வகிடுச் சுந்தரியே! உன்
சீர்சிறப்பைச் சொல்வதென்றால்.....
பார்வியக்கும்! பூர்வஜென்மம் செய்த

புண்ணியமாய் வந்தடைந்தாய்!
எண்ணியவான் கலந்து சென்றாய்!உன்
எண்ணமெலாம் நிறைந்தவனைக் கலந்து சென்றாய்!

வருஷமெல்லாம் வசந்தமாய் வரு
வருஷமெல்லாம் நினைக்க வைக்கும்
நறுமணமாய் நிலைக்குமடி! உனக்காய்...

இதயமெலாம் நிறைந்து எழுதும்
இதயமடல் இன்றும் நினைவுகளை மீட்டிவிட்ட...
இதயநிறை நினைவோடு மீண்டும் மறு
இதயமடல் வரும் வரை தென்றலாய் உனைவருடி....

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6214&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக