வியாழன், 4 ஜூன், 2009

"பொதுச்சொத்து!"


உலகத்தின் பொதுச்சொத்து!
உனக்குள் அடைக்க நினைக்காதே!
கலகத்தில் விடியல்சக்தி!அதைக்
கனக்கும் தடைக்குள் அடைக்காதே!

உலகத்தைப் பார்க்கும் விழிகள்!
கனக்கும் இதயத்தைக் கவியாக்கும் மொழிகள்!
சலனத்தைப் போர்வையாக்கும் மனங்களின்
கனக்கும் இதயத்தில் உதயத்தைக்காட்டும் கதிர்கள்!

உலகத்தைச் சுதிசேர்க்கும் இராகங்கள்!
உனக்குள் பூட்டிட நினைக்காதே!மௌனக்
கலசத்துள் சதிராடிடும் மனங்களின்
மனக்குளத்தினை உடைக்கும் புலர் இராகங்கள்!

உனக்குள் அடைத்திட நினைக்காதே! நீ
உனக்குள் அடைத்திட நினைத்தாலும்
தனக்குள் உடைத்திட வெளிக்கொணரும் கதிர்கள்!
உனக்குள் அடைத்திட நீ நினைக்காதே!

நன்றி!
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"வான் மலர் வாடாது!"

வசந்த வானம்!இது
வாடிப்போகாது!
இசைந்த கானம்!
தென்றல் ஓடிப்போகாது!
வசந்த கோலம்!இது
அழிந்துபோகாது!உயிரில்
இசைந்த காலம்!
என்றும் மறைந்துபோகாது!

கசந்த மனங்கள் கூட
வசந்தம் காணும்!கவிதை
இசைந்த தினங்கள் கூட
சுகந்தம் பாடும்!
இசைந்து மனங்கள் தேட
இணைந்து பாடும்!
வசந்த தினங்கள் நாட
வளைந்து நாணும்!

இசைந்த வானம் இது!
எழில் வரைந்த கோலம் இது!
வசந்த வரவுகளை
பொழில் நிறைந்து வழங்கும் இது!
இசைந்த ஞானம் இது!
இதயம் நிறைந்த ஞாலம் இது!புது
வசந்த இரவுபகல்
உதயம் வரைந்து விளங்கும் மது!

இசைந்த அலைகள்!
இதயம் நிறைந்த வான் அலைகள்!புது
வசந்த அழைப்புகளை
இதயம் வரைந்து வான் அழைக்கும் அலை!
அசைந்த அலைகள்!
உதயம் நிறைந்த வான் அலைகள்!
இசைந்த பூம்புனலாய் வான்
இதயம் நிறைந்து தென்றல் வருடும் அலைகள்!

ஓயாது! அதுசாயாது!
காயாது! அலை ஓயாது!கவி
ஓயாது! மது குறையாது!இதயம்
காயாது! புது மைகள் குறையாது!
சாயாது! மனம் சலிக்காது!இது
ஓயாது! ஒலி சுதி குறையாது!
மாயாது! தினம் வான்மலர் வாடாது!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"அழியாத கோலங்கள்!"


உன்னழகில் என் மனம் இலயித்து
என்மனதை நான் பறிகொடுத்த காலங்கள்!
முன்னசைவில் ஓர் அழகு!உன்
பின்னசைவில் சேர் அழகு!

சின்னப் பிள்ளையாட்டம் நீ
சின்னநடை நடந்துவந்து
என்னை வியக்கவைத்து நீ
மன்னனாய் உட்கார்ந்திருப்பாய்!

சின்னச் சின்னக் கோடுகளாய்
சின்னவுன் முதுகினிலே
முன்னிருந்து முக்கோலங்கள்
உன்னழகுக் கணிசேர்க்கையிலே

என்னை மறந்துநான்
உன்னை வியந்தேனடி!
கன்னத்தோடு உன்னை வைத்து
சின்ன முத்தங்கள் சேர்த்திருந்தேனடி!

சின்னச் சின்னக் கால்களுக்குள்
என்னே உன் வேகமடி! நீ
என்னை முந்தித் துவிச்சக்கரத்தின்
முன்னே நீ குறுக்கோடுகையில்

என்னே உன் வேகமடி! என்
பின்னே நான் திரும்பிப்பார்ப்பேன்!நீ
முன்னே வந்திட்டால் என்
பின்னே வெற்றிவரும்! என்றும்

உன்னைப் பார்த்திருந்தால்
என்மனதில் மகிழ்ச்சியடி!இன்றும்
உன்னைப் பார்க்கிறேன்! என்
மனக்கண்ணில் உன்னழகு!

சின்னச் சின்னக் கடிகடித்து நீ
தின்னுகின்ற தனியழகு! பழந்
தின்னுகின்ற உன்னழகு!பார்த்திருக்க
இன்னும் பலநூறு வரிகளுக்குப்பாலமிடும்!

வாழ்க நீ வாழ்க!அணில்
பிள்ளை நீ வாழ்க!மண்ணில்
வாழ்க! நீ வாழ்க! அணில்
பிள்ளையே!நீ என்றும் வாழ்க!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"திரைவிலகிடட்டும்!"

உழுகின்ற மண்ணில்
நீவிதைக்கின்ற விதைதான்
வருமென்ற எண்ணம் உன்னிடம்
உரைக்கின்ற வரைதான்!

எழுகின்ற எண்ணம் இதயம்
சிதைக்காத வரையில் நீ
வருமென்ற ஒன்று வந்து உனை
நிறைக்கின்ற வரைதான்!

அழுகின்ற மனமே! நீ
உதைக்கின்ற உதை உன்னிடம்
வருமென்ற ஒன்றை நீ
மறைக்காத வரைதான்!

விழுகின்ற காலம் நீ
விதைக்கின்ற கோலம்! அதைத்
தருமென்று என்றும் நீ
மறக்காத வரைதான்!

அழுகின்ற வரையில் நீ
புதைக்கின்ற சாட்சி நீதி
தருமென்ற நியதி நீ
மறுக்கின்ற நிலையில்......

விழுகின்ற வினைகள் வீழ்ந்திடட்டும்!
சிதைக்கின்ற மனங்கள் சாய்ந்திடட்டும்!
"வரும்" என்ற நியதி நிலைத்திடட்டும்!
மறைக்கின்ற மனங்கள் திரை விலகிடட்டும்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்


"இணைந்து நீ வாராய்!"


தென்னை இளங்கீற்றே! எனைத்தேடிவந்து
முன்னை மனதோடு உடலோடு வருடியபோது நான்
என்னை மறந்திருந்து சுகித்திருந்த காலம்
என்னை இளங்கீற்றோடு இணைத்திருந்த கோலம்

முன்னம் ஒளவைசொன்ன பாட்டு அது
இன்னும் என்மனதின் தாலாட்டு!"நன்றி"
என்னும் மூன்றெழுத்தின் "தண்மை" என்றும்
இன்னும் தோன்றிடும் தேன்பாலூட்டும்!

தன்னுள் தாழ் சேர்த்தெடுத்த நீரை தலை
தன்னுள் தான்பதமாய்த் தந்து உலகம்
இன்னும் வியந்திருக்கும் "இளநீர்" இறை
இன்னும் இயற்கையதாய் நிலை சொல்லும்!

தென்னை இளங்கீற்றே! தென்றல் தாயே!
உன்னைப் பாடவார்த்தைகள் செந்தமிழில்
என்னைத் தென்றலதாய் வருடிவருகிறதே தாயே!
உன்னைப் படைத்தவனின் பெருந்தன்மை தன்னை

இன்னமும் நான் வியக்கின்றேன் தாயே!
இன்னமுதே! தென்னைமுத்தே! என்றும்
மன்னுலகம் போற்றிடவே வாழ்வாய்!என்றும்
என்னுலகில் என்னோடு இணைந்து நீ வாராய்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"கண்துடைப்பு!"

என்னவளைத்தேடி
எங்கெங்கோ அலைகின்றேன்!
முன்னவளைச்சந்தித்து
முகத்தோடு முகம்வைத்து
பின்னலிடும் காதல்
பொங்கிப்பிரவாகிக்க நிலை
மின்னலிடும் போதினில்
சுகத்தோடு சுகம்சேர்த்து

என்னவளைச் சேர்த்திருந்து
வேர்த்திருந்த நிலையுணர
பின்னவளை மறந்துவிட
வைத்துவிட்ட நிழல்தொடர
என்னவிது என்பிழைப்பு!
ஏனிந்த வீண்பிறப்பு!காதல்
முன்னமிது பார்க்கவில்லை!
காலமதன் கண்துடைப்பு!

நன்றி!
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=5562&hl=

"புத்தம் புதியதடி!"


சித்தமது புதிது! சத்தமின்றி மலரும்
முத்தமது புதிது! புத்தம் புதுநிலவாய்
நித்தமது புதிது! சித்தமதைக் கவரும்
சுத்தமது புதிது! முத்துக் கவிதையிது புதிது!

எத்தனை நாளடி ஏங்கிநின்றாய்! இதயம்
எத்தனைதரமடி தாங்கிநின்றாய்! உதயம்
எத்தனைதூரம் என்றபோதும் உன் இதயம்
எத்தனை நாளடி தூங்கியதோ!

இத்தரைமீதினில் இத்தனை நாள் நீ
புத்தரைப்போல்தான் தவமிருந்தாய்! தேன்
பத்தரைமாற்றாய் நீயிருக்க வீண்
பித்தரைப் போற்றிப்பாடி வைத்தேன்!

அத்தனை காலமும் மறைந்ததடி!
பித்தனாய் அலைந்தேன்! உறைத்ததடி!
முத்தனாய் நிறைத்தாய் இனித்ததடி!இதயம்
புத்தனைப் போலமைதி கொண்டதடி!

சித்தந்தானது குளிர்ந்ததடி!இதழ்கள்
முத்தத்தாலது நனைந்ததடி! முகைகள்
முத்துக்களாய் கவிதை உதிர்த்ததடி!மனந்தான்
வித்துக்களாய் புதிதாய்ப் பதித்ததடி!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்