திங்கள், 8 ஜூன், 2009

" உண்மைக்காதல்"

எடுப்பதும், கொடுப்பதும்,
எடுத்ததை; திருப்பிக் கொடுப்பதும்,
உண்மைக் காதலில்
விடுப்பது அல்ல!

தடுப்பது, தடம் புரள்வது,
கெடுப்பது, கடுப்பது, துடுப்பது எடுத்து
அடுப்பதும், கொடுப்பது
உண்மைக் காதல் அல்ல!

உடுப்பதையிழந்த கைபோலே,
அன்பைப் பொழிவது,
துடுப்பது கிடைத்த வள்ளம் போல்,
துணையிருப்பதே உண்மைக் காதல்!

உடுப்பதும்,
உடுப்பதைக் களற்றி எறிவதும்,
முடக்கி மூலையில் படுத்திட வைப்பதும்,
வடுப்படும்படி மனத்தைச் சிதைப்பதும்,

சதைப்பற்றில் சாகடிப்பதும்,
வதைத்திடும்படி நடப்பதும்
விடுப்பதும், நடிப்பதும்,
கொடுப்பது அல்லக் காதல்!

கடுப்புடன்
கனன்று கொதிப்பதும்,
நடுத்தெருவில் விட்டு உதைப்பதும்,
கொடுப்பது அல்லக் காதல்!

நடுக்கடலினில்
துடுப்பதைப் போல்,
துன்பம் துடைப்பதே உண்மைக்காதல்
இன்பம் கொடுப்பதே தண்மைக் காதல்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்
9-8-2005

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3074&hl=

" பாசப்பிடிப்பு"


கிட்ட இருந்தால் முட்டப்பகை!
எட்ட இருந்தால் கிட்டும் சுனை!
நட்ட நடு வீதியில்
நாம் தனியே போகையில்
கிட்ட வரும் விபத்தை
தட்டி விடும் கைகள்
எட்ட வரும் உறவா!
உதரம் கட்டி வரும் உறவா!


'கிட்ட இருந்து கொண்டு
முட்டிமோதும் நிலையைவிட
எட்ட இருந்து கொண்டு சமயம்
கிட்டு கின்ற போதெல்லாம்
ஒட்டி உறவாடுவதில்
ஓர் நிறைந்த சுகம் உண்டு' என்று
எட்ட வந்த புலம்பெயர்
வாழ்வது கூறுகிறதே!


"பட்டம் பதவிகள் பெற்ற பின்பு
சுற்றம் என்ன! சூழம் என்ன!"
என்று படித்த பல பண்பரசர் பறை
கொட்டி முழக்கு கையில்
நீட்டி யளக்கையில்
எட்ட இருந்து கொண்டு
பாசம் கொட்டி விடத்
துடிக்கின்ற உண்மைத் துடிப்பு அது

கட்டி யணைத்து உணர்வால்
துடிக்கின்ற துடிப்பு அது
மட்ட மான உறவு அல்ல!
மேல் மட்டமான பாசப் பிடிப்பு அது!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"விடைதேடும் படலம்"


விடை சொல்ல வழி தெரியவில்லை!
மடைதிறந்த மொழி வெள்ளமென,
படை கொண்ட மொழி அள்ளிவரும்,
தடையின்றி உளி சொல்லும் சிற்பம் போல்,

"விடை சொல்வாயா! ஆதி
விடைசொல்வாயா" என்ற,
நடைசோல்லும் கணைகள் மோதி,
நடை போடும் தமிழ், என்னை
விடைசொல்லச் சொல்கிறதா!
தடை தாண்டச் சொல்கிறதா!

கடைநிலை கொண்ட மாந்தர்
நடைகளை நாம் பார்க்கும் போது,
விடையொன்று தெரிகிறது!
எடைநிலை கொண்ட மனத்தோடு, வாழ்வில்
விடைதேடும் பார்வைக்குள் தடம் பதிக்கும்போது,
உடைகளைகிறது! உயிர் அது பிரிகையில்,

நடைமுறை வாழ்வதன் நிலை அது தெரிகிறது!
தடைகளை உடைத்தெறிய, தழுவிடும் தர்மநீதி,
நடை தன்னையே உயிருடன் மறுபிறவிக்குள் இணைக்கிறது!
விடையிதில் ஒன்று! நம் நடைபாதை வாழ்வியல்
கடைநிலை என்றானால்,விடையிதில் ஒன்று! நம்
நடைபாதைதனில்,நாம்சந்திக்கும் தடைகளெல்லாம்,

உடைகின்ற நிலைவேண்டி படாதபாடு
நாம் படவேண்டி, தடம்புரண்டு செய்தவறுகள்,
சடைகின்ற தலைகீழ் நிலைகள்தான் தண்டிக்கும் நிலைக்குள்,
நம்மைக் கொண்டுசென்று விடுகிறது!
"உடைகின்ற நீர்க்குமிழி வாழ்வு" என்று கண்டவர்கள், "எந்நேரமும்
நாம் உடையலாம்" என்றுகண்டு,

நடைபோடும் வாழ்வியலில், மற்றவர்க்கு
துன்பமதை, கொடுக்காத
நிலையோடு பார்த்துக்கொண்டால் போதுமே!
விடைதேடும் மனவிழிகள் கடைத்தேறும்!
தடைகள் தாம் தானாக உடைந்து,
இன்பம் வாழ்வியலில் நடைபோடும்!

குடைகின்ற கேள்வியதன்
பதில்தானும் கிடைத்துவிடும்!
தடுமாறும் நிலைதானாய்
நமை விட்டு மறைந்துவிடும்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்!

"தேன்தமிழ்த் தென்றலின் இனிய தேடல்!"

தேடலின் தேடல்,
தேவையைப் பொறுத்து
நாடலில் தீரும்!

வாடலில் தேடல் இதய
வாடலில் தேடல்,
ஓடிட ஓடிட,

நாடலில் நாடும்
தேவைகள் கூடும்!
கூடிடக் கூடிட,

தேடலில் ஓடும்!
வாடலைக் கூட்டும்!
காடதைத் தேடிட

ஓடிட வழி வகுக்கும்!
ஓடிட ஓடிட
ஓடிடும் மனங்கள்,

நாடிட நாடிட,
நம்மைத்துரத்திட
நட்டாற்றில் தவிக்க வைத்திட,

வாடிட, மனங்கள் துடிப்பதை.
நம் கண்முன்னால் காண்பதை,
மறுத்திடமுடியுமா!

நாடிட, நல்வழி நாடிட,
நமைதுரத்தும்
துன்பங்கள் தொலைந்திட,

நாடிடு! மனமே நாடிடு!
நல்வழி தன்னை நாடிடு!
தினம் தினம்

தேடிடும், நல்வழிப் பாதையை
நன்றாய்த் தேர்ந்தெடு!
தேர்ந்தபின்,

நாடிய பாதையில்
தடம் புரளாது,
மனந்தனை ஒன்றாய் நிறுத்தி,

வாடிடும் வாட்டத்தைப் போக்கிடு!
வாட்டத்தைப் போக்கி,
வருங்காலத்தை நீ வரவிடு!

தேடலின் தேடல் வேண்டும்!
தெளிந்த நல்
நீரோடைபோலே,

நாடலில் நாடல், நம்
இதயங்கள் தேடும் தேடல்!
நல் நூல்களைத் தேடிச்சென்று,

நாடலில் இன்பங்கூடும்!
நம் இதயங்கள் அமைதிகாணும்!
இயற்கைச் சுகங்களில்

தேடல்! பிறர் மனங்களைச்
சிதைக்காத்தேடல்! தென்றல்
சுகங்களை வரவுவைக்கும்!

பாடலில் தேடல்!
நற்பாடலில் தென்றல் கூடல்!
இதய வாடலைப் போக்கும் தேடல்!

கூடலில் கூடல்! நல் இதயங்கள்
ஒன்று கூடல்! கூடிய மனங்களோடு
சுகங்களின் இனிய தேடல்!

தேடலில் தேடல்! நல் கவிதையின்
பொருளைத்தேடல்! நாடிடும் மனங்களோடு
நற்பண்புடன் இனிய தேடல்!

ஊடலில் உணர்வுகண்டு, உள்ளங்கள் நன்று
தேடல்! தேடலில் இனிமைத் தேடல்!
நல்லிதயங்கள் இனிமைத்தேடல்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3103&hl=

"மலரோடு மௌனம்"

நிலவோடு நீங்காத
நினைவோடு நானிருக்க
நிலவோடு தூங்காத
மனதோடு நீயிருக்க
கலவோடு தாங்காத
கனவோடு தானிருக்க-தென்றல்
குலவோடு ஏங்காத
மலரோடு மௌனம் ஏனோ?...

சிலரோடு சிலராக
சில்லறையாய் சில்மிசங்கள்
பலரோடு பலராகி
கல்லறையாய் கல்மனங்கள்
மலரோடு மலராகி
மெல்லனவே நல்மனங்கள்-முன்றலில்
உலரோடு உலராகி
சொல்லெனவே மௌனம் கொல்வதேனோ?..

பலவோடு பலவாகி
பலாப்பாலாகி பலமனங்கள்
நிலவோடு நிலவாகி
நிலாப்பிள்ளையாய் நிலமனங்கள்
கலவோடு போலாகி
கலாரசனைகளை கலைத்துவிட-மன்றம்
நிலவோடு நூலாகி நிலைமறந்துவிடும்
மலரோடு மௌனம் ஏனோ?;...

நன்றி
சுபம்
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3108&hl=

"அவனை மறந்துவிடு!"


தடுமாறும் மனங்கள்
தலைகீழாய்ப் போகும் நிலை!
'வடு ஆறும்' என்று மேலும்
வடுக்கூட்டும் தலைகீழ்நிலை!
கொடு அன்பை! எடு அன்பை!
விடு வம்பை! மனம்
கடுகடுத்து ஆவதொன்றும் இல்லை!
உன் காயங்கள்

ஆறும் நிலை! மாறும் நிலை!
உன்மனப்பதிவின்
மாறும் நிலை! உன் தடு
மாறும் நிலை! விதிப்பழி
கூறும் நிலை! உன் மனத்தராசில்
உனைச் சரிபார்! அது
கூறும் நிலை! உன் மதித்தவறாயின் மதிப்படி
உன்நிலை பார்!

பார்த்திருக்கும் விழிகளுக்குப்
பதில் சொல்! உனைச்
சேர்த்திருந்த வழிமன்னவனின் நிலை பார்!
'உனைத்தவிக்கவிட்ட
காத்திருந்து கண்ணீர் வடிக்கவிட்ட கயவனா
அவன்!' என்று உன் இதயம்
சேர்த்திருந்து கண்ணீர் வடிப்பதாயின்
அவனை மறந்துவிடு!

நன்றி
சுபம்
அன்புடன்
ஆதித்ததாஸன்

"வாழிநீ! பாரதி! வாழிநீ!"


'பாட்டுக்கொரு புலவன் நீ!"
வீட்டுக்கும் நாட்டுக்கும்
ஏட்டுக்கும் ஒளிகூட்டும்
பாட்டுக்கொரு புலவன் நீ!

நாட்டுக்கொரு புலவன் உனைப்போல்
நாட்டுக்கொரு பாட்டுப்புலவன் வழி
காட்டப்பிறந்தால் நாடுபிழைக்கும்
காட்டுக்கூச்சல் போட்டு

பாட்டைக்கெடுக்கும் கூட்டத்துள்
"ஏட்டுப்படிப்புமட்டும்
கோட்டைக்குள் நுழையும்" என்ற
கூட்டுக்கூச்சல் ஓருபுறம்! இதயக்

கூட்டுக்கூச்சல் மறுபுறம்
"நாட்டுப்பிடிப்பு" என்று
நாட்டைக்கெடுக்கும் கூட்டம் ஒருபுறம்
காட்டு மிராண்டித்தனத்தைக் காட்டி

கூட்டுமிருகங்களைக்கூட்டி
பாட்டுப்பாடும் கூட்டம் ஒருபுறம்!
பாராட்டுப்பெறும் கூட்டம் மறுபுறம்!இதற்கொரு
வேட்டுவைத்து தகர்த்து விடியல்தனைக்

காட்ட உனைப்போல் ஓரு
பாட்டுப்பாடும் புலவன்
நாட்டுக்கு வேண்டும் பாரினில் பாரதி!
பாட்டுக்கொரு புலவனாய்

நீ பிறந்த நாள் இன்று! - இதய
வாட்டங்கள் போக்கிட
நீ உதித்த நன்னாள் இன்று!
வீட்டுக்கொரு விளக்கேற்றி விடியல்தனைக்

காட்டிய நாள் இன்று!
கூட்டங்கள் நீக்கி இதயக்
கூட்டினைத்திறந்து சுதந்திரக்காற்றைச்
சுவாசிக்க நீ வந்த நாள் இன்று!

ஆட்டுமந்தைக்கூட்டத்துள் அடங்கிப்போகாமல்
அடிமைவிலங்குக்குள் அடங்கிப்போகாமல்
மோட்டுமந்தைக்குள் முத்தெடுக்க நுழைக்காமல்
பாட்டுப்பாடும் குயிலாய் சுதந்திரமாய்

பாட்டுப்பாடிய பாரதியே! நீ
காட்டிய பாதைகள்! நீ மீட்டிய வீணைகள்
வாட்டிடும் மனங்கட்கு கதிரொளியே! கிழக்குக்
காட்டிடும் பாதைகள் உன்வழியே! வாழி நீ! வாழிநீ!

நன்றி
சுபம்

அன்புடன்
ஆதித்ததாஸன்

"மனச்சாட்சிகள் உண்மைபேசும்!"

கண்ணுக்குள் கவிதைபாடி
களித்திருந்தகாலங்கள்!
மண்ணுக்குள் கவிதையுன்னால்
புளித்துப்போன கோலங்கள்!
விண்ணுக்குள் நிலவு போல
விதந்துரைத்த காலங்கள்!மனப்
புண்ணுக்குள் உலவுகின்ற
கசந்துவிட்ட காயங்கள்!

"பெண்ணுக்குள்பெருமை" என்று
பேரின்பவெள்ளமென
கண்ணுக்குள் கண்ணாக
அன்று எனைக் கொடுத்தேன்!
மண்ணுக்குள் உடல் மறைந்தாலும்
மறையாதே என்று
கண்ணுக்குள் "ஆத்மாவின்
ராகங்கள் நீ" என்றேன்!

எண்ணுக்குள் எழுத்தாய் என்
எண்ணத்தில் மலர்ந்த
வண்ணத்துள் நிறைந்த கவிதை
வண்ணத்தை உந்தன் கை
வண்ணத்துள் திணித்தேன்! எந்தன் மன
வண்ணத்தைச் சிதைத்து
கண்ணுக்குள் கண்ணான என் கவிமலர்களை என்
கண்ணுக்குள் நிறைந்த கவிமலர்களை என்

கண்ணுக்குத் தெரியாமல் உன் பெயர்
வண்ணத்தில் பதித்தாய்!
விண்ணுக்குத் தெரியும்
என் கவிதை அதுவென்று! இதய மலர்
வண்ணத்துவாசகர் இதய மன்றத்துள் தெரியும் அது
என் கவிமலர்களென்று!
எண்ணத்து நீச(கி)கர் நீ சதிசெய்தது ஏனென்று
என்தனுக்கு நன்கு புரியும்!

கண்ணுக்குள் மலர்ந்த
காதலைக் கொச்சைப்படுத்தி இதயப்
புண்ணுக்குள் வேல் பாய்ச்சி
போதை உன் இச்சையைத்தீர்க்கலாம்!
விண்ணுக்குள் அமாவாசை உன்
இதயத்துள் தினம் அமாவாசை! உன்
கண்ணுக்குள் நிறைந்த காமம்
காதல் கருத்தினை அழித்த மோசம்!

மண்ணுக்குத் தெரியவரும்! உன்
மானமும் கப்பல் ஏறும்!
விண்ணுக்குத் தெரியும் நேரம் உன்
வேசமும் கலைந்துபோகும்!
பெண்ணுக்குப் பெருமைபேசும் உன்
நாடகம் தெரியும் நேரம்
மண்ணுக்குப் புரியும்!
மனச்சாட்சிகள் உண்மை பேசும்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.blogger.com/post-create.g?blogID=5275467254641743329