சனி, 6 ஜூன், 2009

"அழகு" "பழகு"



சத்தம் இல்லாத தென்றல் அழகு!
புத்தம் புதிதாக மலர்வது அழகு!
நித்தம் சொல்லாத மனமன்றம் அழகா!கடல்
முத்தம் கொள்ளாத தினக்கதிர்கள் அழகா!

புத்தம் புதிதான புலர் காலை அழகு!
சித்தம் குளிர்கின்ற சிந்தை அழகு!
அர்த்தம் இல்லாத கவிதை அழகா!மடல்
அர்த்தம் சொல்லாத காதல் அழகா!

எத்தர் இல்லாத உலகம் அழகு!
பித்தர் சொல்லாத கவசம் அழகு!
அத்தர் இல்லாத மலர்கள் அழகா!இதய
சுத்தர் இல்லாத சதைகள் அழகா!

நித்தம் இடுகின்ற முத்தம் அழகு!
சத்தம் இடுகின்ற அலைகள் அழகு!
அர்த்தம் இல்லாத சக்தி அழகா!உடல்
அர்த்தம் இல்லாத புத்தி அழகா!

"பத்தும் பதினாறும்" பெறுவது அழகு!
"பத்தும் பறந்தோடும்" என்பது அழகு!
நித்தம் சலிக்கின்ற முத்தம் அழகா!உடல்
பித்தம் தலைக்கேறும் சத்தம் அழகா!

கத்தல் இல்லாத கவிதை அழகு!
சுத்தல் இல்லாத கதைகள் அழகு!
முத்தல் இல்லாத கனிகள் அழகா!மனம்
முத்தல் இல்லாத முனிகள் அழகா!

புத்தன் சொல்கின்ற அன்பு அழகு!
பக்தன் சொல்கின்ற பரசமயம் அழகு!
பித்தன் சொல்கின்ற வம்பு அழகா!சதைப்
பக்தன் சொல்கின்ற சமரசங்கள் அழகா!

அர்த்தம் தெரிகின்ற ஊடல் அழகு!
அர்த்தம் தெரிகின்ற தேடல் அழகு!
அர்த்தம் தெரியாத ஆடல் அழகா!காதல்
அர்த்தம் தெரியாத கூடல் அழகா!

"புத்தம் புதுப்பூமி" என்பது அழகு!
நித்தம் நதிபோலப்பாய்வது அழகு!
"நித்தம் மதுவேண்டும"; என்பது அழகா!நீ
"நித்தம் நிதிவேண்டும்" என்பது அழகா!

"நித்தம் எதுஅழகு!" என்பது அறிந்து
"நித்தம் எதுவேண்டும்" என்பது தெரிந்து
சித்தம் குளிர்ந்து நீ வாழப்பழகு!மதிப்
பித்தம் தெளிந்து நீ வாழப்பழகு!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"புதுமைப்பெண்ணாள்!'

பாரதிகண்ட புதுமைப்பெண்!
யாரதில் புதுமைகொண்டார்கள்!
பாரதில் பாரதி சொன்னதன் அர்த்தம்
பாரதில் சில மாதர்கள் கொள்வதன் அர்த்தம்

பாரதில் புதுமைதான்!கவிமேதை
பாரதி பார்த்திட்டால் காறி உமிழ்வுதான்!
பாரதி கண்டது வேறுதான் சிலமாதர்கள்
பாரதில் கொண்டது வேறுதான்!

வேரதைப்பிடுங்கவா சொன்னான்!களை
வேரதைப்பிடுங்கவே சொன்னான்!அதன்
சார்பதை புரிந்திடா மாதர்கள் சிலர்
வேர்களைப்பிடுங்கி எறிவதைப்பாரீர்!

யார் அதன் காரணம்! பார் அதன் காரணம்!
நேர் அதன் தோரணம்! பார் அதன் பா ரணம்!
சேர் அதன் சீதனம்! சார் அதன் வேதனம்!
பார் அதன் பாமனம்! வேர் அதன் பூமணம்!

பார்புகழ் அன்னை திரேசா!
பார்புகழ் கண்ட திரேசா!அவள்
பார்மனம் கொண்ட அன்பால்
பார்மணம் கண்ட இன்பால்!

பாரதிகண்ட பெண்ணாள்!அவள்
பாரதி கண்ட புதுமைப்பெண்ணாள்!தன்
பேர் அபிமானங்கொண்டு தன்
பேர் அதைக் கெடுத்தாள் இல்லை!

யார் அவள் பண்பைப் பெற்றார்!
யார் அவள் தண்டம் பெற்றார்!
தேர் அவள் ஏறிவரத் தன்னைப்
பேர் அவள் கூறி விற்றாளா!இல்லை!

சார்பிலா சமயம் போற்ற
சேர்நிலா மனங்கள் ஏற்ற
பார்நிலா கண்ட பெண்ணாள்!அவள்
பார்நிலா பாரதி கண்ட புதுமைப்பெண்ணாள்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3877&pid=48099&mode=threaded&start=#entry48099

"நீதி"

எரிந்த வீட்டில் பிடுங்கியது மிச்சமாய்
எரிந்த வயிறுகள் சாபமாய் சுனாமியால்
சரிந்த மக்களின் துயர்துடைப்பு நிதிவரவில்
வரிந்த மாக்களின் கயமைத்தனம் தெரிந்ததே!

பிரிந்த உறவுகள் அவலங்கள் ஒருபுறம்!
சரிந்த மனங்களின் ஏக்கங்கள் ஓருபுறம்!
சரிந்த மனங்களின் சாவினை எதிர்பார்த்து
"விரிந்து மறுமுறை சுனாமி வராதா!" என்கின்ற

உறிஞ்சும் வர்க்க ஓநாய்கள் ஒருபுறம்!
புழிஞ்சு இரத்தத்தை உறிஞ்சும் எண்ணங்கள்
அறிஞ்சும் அறியாமல் கண்மூடித்தனங்களாகி
தெரிஞ்சும் தெரியாமல் மண்மூடும் மனங்களேனோ!

எரிஞ்ச வயிறுகள் சாபம் இவர்களை
உறிஞ்சிக்கொல்லும்! உயிர்கொல்லிபோலே
எரிஞ்சுகொல்லும்! ஏழைகள் மனம்நொந்து
எரிஞ்சு வீழும்கண்ணீர் கூரியவாளைப்போல்

அரிஞ்சு வீழ்த்தும்! ஆழ்கடல் சத்தத்தில்
தெரிஞ்சு செய்யும் மூழ்கடல் மனங்கள்
எரிஞ்சு சாம்பலாகும்! வாழ்கடல் வாழ்க்கை நியதி
அறிஞ்சு சொல்லும் சேதி தெரிஞ்சு சொல்லும் நீதி இது!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"பாலன் பிறந்திட்ட நன்னாள்!"

மார்கழி மாதம்! மண்ணில்
வேர்களின் ஈரம்!மண்ணில்
சேர்கதிர் ஒளியாய் மைந்தன்
மார்கழி தளிராய்ப் பிறந்திட்ட திருநாள்!

கார் இருள் அகற்றி புவி
சேர் அருள் நிறைக்க
பார் புகழ் மைந்தன்
பார் உதித்திட்ட திருநாள்!

நேர் கொண்ட பார்வை
சீர் கொண்ட கோர்வை
தேர்கொண்ட அன்பால்
பார்கண்ட பாலன் பிறந்திட்டத்திருநாள்!

சோர்வுள்ள மனங்கள்
சோர்வினை நீக்கி புவி
சேர்கின்ற "அன்பே ஜெயம்" என்று விளங்க
பேர்சொல்லும் அன்பன் உதித்திட்ட திருநாள்!

சீர்கொண்டு வாழ்த்துக்கள்! நிலா
சேர்கொண்ட நெஞ்சங்கள் அன்பு
வேர்கொண்ட நீர்போல் உலா
பேர்கொண்டு புகழ்பெற வாழ்த்துக்கள்!

நன்றி
சுபம்

அன்புடன்
ஆதித்ததாஸன்

1-1-2006 "வருக! தருகவே!"

அருள் தரும் ஆதித்தன்!அவன்
இருள் தனை நீக்கியே அன்பு
பொருள் தனை உணர்த்திடும்
அருள் ஒளித்தீபம் ஏற்றியே

வரும் நிலை நோக்கியே வரம்
தரும் நிலை சேர்த்திட அறம்
தரும் சுகம் சாற்றியே அவன்
அரும் அருள் போற்றிட வரும்

பொருள் நிறை மகிழ்வுடன் வரும்
அருள் நிறை புதுவருடமே!உன்
பொருள் நிறை வருகையால் உலக
இருள் நிலை தானும் அருகவே!

"வரும் வாழ்வில் வசந்தமே!" எனும்
அரும் பொருள் இதயம் நிறையவே
வரும் புது வருடமே! நீ தரும் இனிமைசுகந்தமே!
அரும் மது தரும் இரசமென அகிலம் மகிழ்வினில் மலர்கவே!

அருள் நிறை அருணனே!உன்
அருள் நிறை பார்வையால் அகிலம்
பொருள் நிறை புகழுடன் மனங்கள் மலர்மணம் பரப்பவே
அருள் நிறை ஒளிர்கவே! தினங்கள் தினம் தினம் மலர்கவே!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

அனைவர்க்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு
இதயம் நிறை வாழ்த்துக்கள்!

"பதிலாகும் மதி!"

மதியோடு தண்மதி சேர்க்கும் தனிமதியே!என்
மதியோடு தண்மதி சேர்க்கும் ஓர் ஆதங்கம்!
மதிநாடும் மதிமுற்றமதில் தனிமதியே!என்
மதிநாடும் மதிசுற்றிவரும் கவிமதிகளைத்தந்துவிடு!

சுதியோடும் இரசனையுள்ள அனைவருமே நல்
மதியோடும் இரசனையின் வண்ணங்களை நல்
மதியோடும் கவியாக்கித் தரமுடியும்! உன்
மதியோடும் கவியாக்கும் வண்ணமிது!என்

மதியோடும் நடைபோடுவது என் கிறுக்கல்கள்!அது
சுதியோடும் நடைபோடுவது என் இரசனைக்குள்!மது
மதியோடும் விடைகூடுவது உன் இரசனைக்குள்!உன்
மதியோடும் விடைதேடுவது உன் கிறுக்கல்களே!

நதியோடும் தென்றலோடு மதிதேடும் மாணவன்!இவன்
விதியோடும் முன்றலோடு விளையாடுவான்!நல்
மதியோடும் திங்களோடும் விடைதேடுவான்!சொல்
மதியோடும் பொங்கலோடும் நடைபோடுவான்!இவன்

மதியறியாப் பள்ளி மாணவன்தான்! கல்வி
மதியறியாப் புள்ளியில்லா மாணவன்தான்!இவன்
மதியறியாப் பாடங்கள் ஏராளம்!தன் தனி
மதியறியாப் பாடங்கள் தாராளம்!இவன்

சதியறியாப் பிள்ளையாய் பிறந்துவிட்டான்!தன்
மதியறியாப் பிள்ளையாய் வளர்ந்துவிட்டான்!
சுதியறியா மனங்களின் மத்தியிலே தன்
மதியறியா நற்தினங்களை செலவுசெய்தான்!

கதியறியாப் பிள்ளையாய் கதறுகையில்
கதியறிந்து கைகொடுத்த தெய்வமதாய்
சுதியறிந்த கண்ணனவன் தாஸனவன் தன்
மதியறிந்த எண்ணங்களால் வடம்பிடித்தான்!

நதியறியாப் பிள்ளையிவன் கைபிடித்து "வாழ்க்கை
விதிவழியே பயணம்" என்று தெரியவைத்து
"மதியறியாப் பிள்ளை என்று யாருமில்லை!உன்
மதிவழியே பயணமதாய் நானிருப்பேன்" என்று

நதிதவழும் தமிழ்க்கடலின் முத்துதனை என்
மதிவருடி அமிழ்தினிதாய் கோர்த்தெடுத்து
சுதிதவழும் தென்றலதாய் வருடவைத்தான்!என்
மதிவருடும் கண்ணனுக்குத் தாஸனவன்!

"நதிவழி விதிவழி பயணங்கள்! நம் கோலம்
மதிவழி முயற்சிவழி முடியும் என்ற நம்பிக்கைவழி
விதியோடும் வழியோடு நடைபோடு! காலம்
நதியோடும்! வழிகூடும் விடைதேடும்! நம்பிக்கைப்படி!"என்று

மதியோடு விடைதேட கால நதியோடுகிறது!
மதியோடு கவிதை நடை போடுகிறது! காலம்
சுதியோடு விளையாடி கரைந்தோடுகிறது!ஞாலம்
சுதியோடு கவி தையோடு நிறைந்தாடுகிறது!

நதிதேடும் படலமிது! நடைபோடும் உடலமது!
விதிதேடும் காலம்வரை விடைகூறும் பயணமிது!தன்
மதியோடும் விளையாடும் வான்சுடர்தாஸன் பயணமிது!
"கதியோடும் கலங்காதே!" என்ற செங்கதிரோனின் உடலமிது!

கதிரோடு வந்தது! கதிரோடு கலக்கட்டும்!
சதிராடும் சந்தங்கள் சுதிவிலகாது பிறக்கட்டும்!
பதிலாகும் சொந்தங்கள் பதினாறும் பெற்றிடட்டும்!
பதிலாகும் புவி வந்தது! நற்பதிலாகும் கவிதந்தது!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்
19-12-2005

"மாங்கனி!"

மாங்கனியே!
உனக்காக ஓர் கவிதை!
மாங்கனியே! நீ
எனக்காகத் தேன்தமிழில்
தாங்கிவரும்
உனக்காக ஓர் கவிதை!உயிர்
தாங்கிவரும் தேன் நீ!
உனக்காக ஓர்கவிதை!

"மாங்கனி நீ!' என்றதும்
"முக்கனியில் நீ
மாங்கனி"யாய் என்பதொன்று!
முத்தமிழில் நீ
தாங்கிவரும் தேன்தமிழ்க்
காவியமாய் கவி
தாங்கிவரும் வான்சுடர்க்
கவியரசன் "மாங்கனி" என்பதொன்று!

மாங்கனி! தேமாங்கனி!
புவிமாங்கனி தந்த தேன்
மாங்கனி நீ! தேன்
சுவையாகி தேனிதழூறும் தேன்
தாங்கிவரும் மாங்கனி நீ!
மாங்கனிகளுள் முன்
தாங்கிவரும் "முதற்கனி" நீ!
முக்கனிகளில் "முதல்வன்"நீ!

மாங்கனி உனைநினைத்தால்
வாயூறும்! வாய்நறு
மாங்கனி! உன் மணம் நுகர்மனம்
மகிழ்வூறும்!உனைத்
தாங்கிவரும் ஊர் அழகு!
உலகழகு! உன் பேர்
தாங்கிவரும் தமிழ் அழகு! உன்
தளிர் பேரழகு!

மாங்கனி நீ! சேராத பஞ்சகமா!
முதல் மஞ்சத்துள்
மாங்கனி நீ சாராத மஞ்சமா!
நெஞ்சத்துள் கவிபஞ்சமா!
தாங்கிவரும் பாடல்களில்
தழுவிவரும் உனைத்
தாங்கிவரும் தேடல்களில்
ஏங்கிவிடும் மனங்கள்தான் கொஞ்சமா!

"மாங்கனி" நீ! காவியநாயகன்
கண்ணதாஸன் அவன்
"மாங்கனி" நீ! காவியமாய்
சிறைக்கூடமதில் கவி
தாங்கிஅரும் மாங்கனியாய்
ஆறுமணிகளுக்குள்
தாங்கிஅரும் தங்கமானாய்
"தங்கம்" ஆனாய்!

"மாங்கனி" நீ! அவன்
கவிநயத்துள் தேன்
மாங்கனி நீ! தமிழ்த்
தேன்சுமந்த நயம்!மது
தாங்கிஅருந் தமிழுக்குள்
தழுவிவந்து உயிர்
தாங்கிஅருந் தேன்தமிழாய்
தென்றலாய் வருடியதே!

மாங்கனி! உனைப்பாட
மாங்கனித்தமிழுக்குள் ஒருமா
மாங்கம் போதாது! மறுபிறவி
பிறப்பெடுத்து நான் உன்
பாங்கினைப் பாட வேண்டும்!
உனைத்தழுவி தெம்
மாங்கினில் பாடவேண்டும்!
எனைத்தழுவும் நீ வாழ்க!

உன் புகழ் வாழ்க! உலகுள்ளளவும்
உன் பேர் வாழ்க! அள்ள அள்ளக்குறையாத
உன் சுவை வாழ்க! தமிழ் உள்ளவரை
உன் பேர் வாழ்க! மாங்கனியே! நீ வாழ்க!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"எனக்கும் உனக்கும்"

எனக்கும் உனக்கும்
கணக்கு வழக்கு!
நினைக்கும் பொழுது
சிரிப்பு வருகுது!

கனக்கும் இதயம்
கணக்கு வழக்கில்
எனக்குள் உதயம்
உதித்து வருகுது!

"தனக்குத் தனக்கு" என்ற
உரிமைக் கணக்கில்
மனத்துள் தனக்குள் ஒன்றாய்
கனக்கும் வழக்கில்

எனக்குள் வழக்கு ஒன்றின்
தீர்ப்புத் தெரிய என்
மனத்துள் நினைத்துப்பார்த்தேன்!
எனக்குச் சிரிப்பு வருகுது!

தினத்துள் தினம் இன்று
வருடக்கணக்கில் ஒன்று
மனத்துள் கனத்துக் கொண்டு
மறையப் போகிறது!

வனத்துள் நிறைக்கும் ஒன்று
"மனத்தில் விலக்கு" என்று
தினத்துள் தினமாய் இன்று
உருளப் போகிறது!

எனக்குள் இருக்கும் உனக்குள்
என்னைத் தெளியவைத்து
உனக்குள் இருக்கும் வழக்குள்
என்னைப்புரிய வைத்து

கனக்கும் மனத்துள் களிப்பைக்
கண்டு இரசிக்க வைத்து
எனக்கும் மனத்துள் வெளிப்பைத்
தந்து உரசிச் செல்லும்

எனக்குள் இருக்கும் உன்னை
நினைத்துப் பார்த்தேன்!என்
மனத்துள் இருக்கும் என்னை
நிறுத்துப் பார்த்தேன்!

எனக்குள் இருந்த வழக்கு
எனக்குள் கிழக்கைக்காட்ட
மனத்துள் வருத்தம் தீர்ந்து
புதுப்பொலிவை எனக்குள் பார்த்தேன்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"பெண்ணின் பெருமை!"

கண்ணில் தெரிகின்ற
கவிதையே!மனக்
கண்ணில் தெரிகின்ற
கவிதையே!தினக்
கண்ணில் தெரிகின்ற
கவிதைகள் மனக்
கண்ணில் தெரிகின்ற
கவிதையுன் கவிதையே!

பெண்ணில் இருக்கின்ற
உணர்வுகள் இதயப்
பெண்ணே! உனக்குள்ளும்
கனவுகள்!உதயக்
கண்ணில் இருக்கின்ற
காந்த சக்திக்குள் இதயப்
பெண்ணே! எனக்குள்ளும்
நீந்தும் உணர்வுகள்!

எண்ணில் இனிமைகள்!
எழுதும் பொழுதில் புதுமைகள்!
மண்ணில் இனிமைகள்!
மலரும் பொழுதின் மகிமைகள்!
கண்ணில் தெரிந்திட
கவிதை மலரும் உணர்வுகள்!
எண்ணில் புரிந்திடும்!
புவித்தை மகளின் புதுமைகள்!

பெண்ணில் இணைந்திடும்!
பெண்ணின் பெருமை உணர்த்திடும்!
மண்ணின் பொறுமையை மனது
எண்ணி மகிழ்ந்திடும்!
விண்ணில் நிலவினை
பெண்ணுக் குவமையாக்கிடும்!
மண்ணின் நிலவினாய்
பெண்ணின் தண்மை உணர்த்திடும்!

கண்ணில் கருணையாய்
கனிவு கூட்டும் பெருமையாய்
மண்ணில் அன்னையாய்
இனிமை காட்டும் தன்மையாய்
பெண்ணில் பெருமைகள்
மண்ணில் புதுமை கூட்டிடும் புவிப்
பெண்ணில் அருமைகள் மனக்
கண்ணில் இனிக்குதே!

கண்ணில் காதலைக்
கருத்தில் இனிய மோதலை
கண்ணில் கவிதையாய்
களிப்பில் இனிக்கும் மாதினை
விண்ணில் விழிச்சுடர்
வான்சுடரின் ஒளிர்வினை இதயம்
விண்ணில் வழித்தொடர்
வான்மதியாய் வடிக்குதே!

கண்ணில் தோன்றிடும்
கவிப்பெண்ணே! கவிதையே!உனை
மண்ணில் பாடவே "மாங்கனி"
கவிப்பெண்ணாய் இனிக்குதே! செம்
மண்ணில் நீரைப்போல்
செந்தமிழின் சுவையைப்போல்
பண்ணில் பாடலாய்ப்
பைந்தமிழ்த் தேன்மொழியாய்ப் பெருகுதே!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"நல்வரவு!'


அருணனின் பார்வையில்
அகிலத்தின் உயிர்ப்பு!
அருணனின் போர்வையில்
அகில்மனங்கள் இலயிப்பு!

தருணம் இதுவென்று
தழுவிவரும் தென்றல்
தருணம் பார்த்திருந்த
உழவனவன் நெஞ்சில்

வருணன் பொழிந்ததுபோல்
வருங்காலம் சிறக்குமென்று
அருணன் ஒளிக்கதிரில்
அகம்மகிழ் திருநாள் இன்று!

அருணன் அவன்தனுக்கு
அழகுறவே பொங்கலிட்டு
அருணன் அவன்மகிழ
அழகுமலர் தைமலர்ந்தாள் இன்று!

அருணன் அவன்வரவு
அகிலத்தில் நல்வரவுபெற
அருணன் அவன்தனைப்போற்றி
அகில் மணமாய் நாம் நலம்பெறுவோம்!

அருகிடட்டும் துன்பங்கள்!
பருகிடட்டும் இன்பங்கள்
பெருகிடட்டும் நல்மனங்கள்!
உருகிடட்டும் கல்மனங்கள்!

மருவிடட்டும் தென்றலதாய்!
வருடிடட்டும் திங்களதாய்!அகிலம்
உயிர்பெறட்டும்! அன்பில்
உயிர்கள் ஒளிபெறட்டும்!

அனைவர்க்கும் இதயம் கனிந்த
தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்