சனி, 30 மே, 2009

இன்றே எழுந்துவிடு




நன்றும் தீதும் பிறர்தர வாரா!
என்று ஆன்றோர் வாக்கு ஒன்று!
என்றும் எதிலும் நிதானம்,
நன்றாய் ஒன்றாய் திடமதில் தெளிந்து, இதய
மன்றில் மாது சிந்தையை நிறைத்து,
உண்மையை வளர்த்து, தண்மையாய் இணைந்து,
ஒன்றில் ஒன்றாய் நன்றாய் நடைபோட,
என்றும் இல்லையே துன்பம்!

ஒன்று உண்மை! உனை நீ உணர்ந்து,
நன்று மனங்களை எடை போடப்பழகு!
என்றும் பெண்மை தனை நீ மதிப்பாய்!
உனை மிதிக்க நினைக்கும் மனமும் திருந்தும்!
என்றும் திருந்தும்! உனை மறைத்தும்
உனை நீ ஏய்க்க நினைத்தால்,
என்றும் வருந்தும் நிலைதான் தொடரும்!
உனை நீ மாய்க்கும் நிலைதான் வளரும்!

என்றும் இதை நீ மறவாதே!
என்று பெண்ணே! உனக்குள் உனை நீ,
நன்று அதை நீ என்றும் எடை போடு!
தென்றல் சுகங்கள் உனக்குண்டு!
அன்றும் இன்றும் பெண்மைக்கே
சோதனை உண்டு! நானறிவேன்!
வென்று வரவே வாழ்க்கையது!
இன்றே உணர்வாய் நன்றாய் நீ!

தொன்று தொட்டு வரும்கதைதான்!
என்றும் முட்டும் கண்ணீர்தான்!
என்று உனை நீ வருத்தாதே!
நன்று சிந்தி! நன்று சிந்தி! கண்ணீர்
என்றும் சிந்தும் நிலைவராது!
சந்தம் இசைக்கும் சொந்தம் இணைக்கும்!
என்றும் வாழ்வில் வசந்தம் நிறைக்கும்!
சென்றதை இன்றே மறந்துவிடு!

நன்று சொன்னான் பாரதிதான்!
என்றும் அவனை நினைத்தாலே
என்றும் துணிச்சல் சாரதியாய் இதய
மன்றல் நன்றாய் துணிந்துவிடும்!
என்றும் கவலை உனக்கில்லை! உதயம்
என்றும் நன்றாய் உனக்குள்ளே!
நன்றும் தீதும் சரிபார்த்து
நன்றாய் இன்றே எழுந்துவிடு!

1 கருத்து: