சனி, 30 மே, 2009

பாவுக்குள் நிறைந்தவள்!

பூவெழுதும் கவிதைக்குள்
பூவையிவள் கதைகள்!
நாவொழுகும் தமிழுக்குள்
பாவையிவள் இன்ப வதைகள்!

கோவெழுதும் கவிதைக்குள்
கோவையிதழ் அடக்கம்!
பாவெழுதும் கவியே!இப்
பாவையிவள் உம் மடக்கம்!

'பாவெழுத வேண்டும்!உமைப்போல்
பாவை நான் எழுதவேண்டும்!" என்று
பாவெழுதும் பாவலனே!உமைப்
பாவைநான் வேண்டிநின்றேன்!

"நாவெழுதும் நாயகியே
பாவையுன் வசமடி!நீ
பாவெழுத நான் ஏனடி!
கோவையே! நீ கவி தையடி!"

"பூவெழுதும் கவிரசிக்க
பாவையுந்தன் இதழ்படிக்க
பாவெழுதும் பாவலனே
பாவையுன்னுள் அடக்கம்!" என்றீர்!

"நாவொழுகப் பேசுகின்ற
நாவலனே!நீர் பேசும்
பாவழகுப் பைந்தமிழில்
பாவையிவள் தஞ்சம்!'என்றேன்!

"பூவழகுப் பெண்மயிலே!
பூவையுந்தன் முழுவழகும்
பாவெழுதப் பாவெழுதப்
பாவையே! படரலையே!"

"மூவழகுத் தேவதையும்
பாவையுன்னுள் தஞ்சம்!" என்று
நாவழகுத் தமிழாலே நீர்
பாவைப்போல் படம்பிடித்தீர்!

கோவழகுச் சுந்தரனே!இதழ்ப்
பாவையிவள் இதயவிரிப்பினிலே
கோவழகுச் சிரிப்பினையே வெற்றிக்
கோவையாக்கிக் கொண்டாளே!

பூவெழுதும் கவிதைக்குள்
பூவையிவள் கதைதானே!
பாவெழுதும் பாவலனுள்
பாவையிவள் நிறைந்தாளே!

பூவெழுதும் புதுமையிதோ!
பாவெழுதும் பதுமையிதோ!
பாவெழுதும் பாவலனே!
பாவெழுதும் பாவைதனையறிவீரே!

நாவெழுதும் நாயகனே!
பாவை நாயகிநிலைதான்!
கோவெழுதும் கவிதைக்குள்
பூவையிவள் படர்தொடர்கதைதான்!

பாவெழுதும் பாவலனே!
பாவையுமக்காகத்தான்!இப்
பூவெழுதும் பாவைக்குப்
பாவைப் பதிலாக்கீரோ!

பாவையிவள் பார்த்திருப்பாள்!
கோவையிவள் சேர்த்திருப்பாள்!
பூவையிதழ் சேர்த்திருக்க நீர்
பாவைப் பதிலாக்கீரோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக