திங்கள், 1 ஜூன், 2009

"பேதை மடந்தைகள் பெண்களல்ல!"


காலையில் கடிகாரம்
ஏழுதரம் அடித்திருக்க
சோலையில் புதுமலராய்
பாவை நீ மலர்ந்திருந்தாய்!
சேலையில் படிமானம்
அழகாகச் சேர்த்திருந்தாய்!
"வேலையில் கவனம்!" என்று
விழிமேல் நீ மொழியானாய்!

"வேலையென்ன வேலையடி!
போடி மண்டு!" என்று தென்றல்
சோலைமலர் உன்னைச்
சுகமாகச் சேர்த்தெடுத்து
மாலைமலர்த் தென்றலதாய் இதழ்
முத்தங்கள் பதித்திட்டேன்!
"காலையில் இனியென்ன!
எழுந்திருங்கள்!" என்றாய்!

"காலையென்ன! மாலையென்ன!
மதியமென்ன!நள்ளிரவென்ன!விடி
காலையென நீயிருக்க இனி
வேலையென்ன வேலையடி!
மாலைவரை மகிழ்வோமடி
வாடி" என்று வளைத்திட்டேன்!
"வேலைநேரம் முடித்து நீங்கள்
மாலைவந்து சேர்ந்திடுங்கள்!விடி

காலைவரை பாவையுங்கள்
கைப்பிடிக்குள் வசப்படுவாள்!
காலைவரை சுகராகம் நீங்கள்
பாடிடுங்கள்!கூடிடுங்கள்!இப்போது
வேலைநேரம் எழுந்திடுங்கள்!என்று
வேல்விழியாலே மொழிமலர்ந்தாய்!
காலைநேரம் கோதையுன் கோவை
இதழ் இனிக்க இதழ்வெளுக்க

பாலைப்போல் பாவையுனைப்
பருகிவிட பகிர்ந்திருக்க
வேலைநேரம் மறந்து நீ
மயங்கிநின்று விருந்தளிக்க
காலையில் தொலைபேசி
அழைப்புமணி குரல்கொடுக்க
வேலையிட அழைப்புமணி
அதுவென்று புரியாமல் அவ்

வேலையும் பறிபோக மேதை
பாவையுன் சொற்கேளாது
காலைமுதல் மாலைவரை
வேலைதேடும் படலமதாய்
வேலைதேடி நானலைய
வறுமைநமைச் சூழ்ந்துவிட
சோலைமலர்ச் சுடரொளி நீ
கவலையிலே துரும்பானாய்!

காலையது கடுப்பாக
வேலையில்லா விடுப்பாக
மாலையது நெருப்பாக
மகிழ்வெல்லாம் தொலைப்பாக
காலை மாலைமதியமெல்லாம்
மனம்வெதும்பும் நிலைப்பாக
காலைமலர் உன் சொற்கேளாது
கடந்ததுவே காலங்கள்!

கடந்தவிட்ட காலங்கள்
உணர்த்தியவை ஏராளம்!"காலம்
கடந்துவிட்டால் திரும்பாது!
கவனம் மிகத்தேவை!"என்று
கடந்துவிட்ட காலங்களால்
வடம்பிடித்த ஞானங்கள்! "பேதை
மடந்தைகள் பெண்களல்ல!" என்று
கடந்து புத்தி உரைத்ததுவே!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6441&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக