செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

இதயம் எழுதும் மடல் (11)


இதயத்தை இனிமையாக
வருடும் இளந்திங்களே!

நலமா! நலமறிய ஆவல்!
நலமுடன் நாடிவரும் இன்பங்கள் தாலாட்டிட
வலம் வரும் வான்மதியாய்
வான்தவழும் திங்களதாய்
நீ எங்கும்
எப்போதும் நிறைந்திருக்க
இனிமையோடு நிறைந்திருக்க
என்றும் இறையருள் துணையிருக்கும்!

அன்று என்மடல்பார்த்த சந்தோசம்
"என்றும் வேண்டும" என்றாய்!
"இருப்பினும் ஓர் குறை!
அது என்ன வான்கோழிக்கதை!
வான் கோழிக்குணம் எனக்கேதையா!
நான் உங்கள் தமிழோடு
தவழ்கின்ற தென்றலவள்!
எனக்கேது வான்கோழிக்கதை"

என்றாய் மனதோடு!
பைத்தியமே! பைத்தியமே!
அதனாற்றான்
வைத்தியமாய் பக்கத்தில்
உனக்கேது அக்குணம்
என்றுபோட்டேனே!
அசடு! அசடு!
உன்அழகிதயத்தில் குடியிருக்கும்.....

இவன் மன உதயம் புரியாததா உனக்கு!
பைத்தியம்! பைத்தியம்!
அடி! அன்புப்பைத்தியமே!
போடி மண்டு!
"வாடி என்பக்கத்தில்!" என்றதும்
ஓடிநீ வந்துதரும் வசந்தம்
என்தனுக்கு என்றும் புதுசுகந்தமே!
"தாடி" என்று கேட்குமுன்னே....

பலநூறு தருவாயே!
வாடி நீ வதங்கிட்டால்
வதங்தகிடாதோ என்மனம்!
போடி!பைத்தியமே!
சித்த வைத்தியம் என்னிடம்!
உன் அன்புப்பைத்தியம் தீர்க்கும்
சித்தவைத்தியன்
நான்என்பாய்!

தேனாகி தேன்மொழியாகி
நானாகி நீயிருக்கும்
மானே! நீ என்னை அறிவாயே!
உனக்கெழுதும்
மடல்கூறும் கதைகள் பல
உன்உடல் தழுவும்
தென்றல் என்பாயே!
அப்படியிருக்கையில் ஏனடி!

கள்ளி! உனக்கு ஏனடி வருத்தம்!
வருத்தம் விடு!
மருத்துவனாய் நான் இருக்க
வருத்தம் வேண்டாம்! வருத்தம் விடு!
கதையோடு கதை
உன் "நேசிக்கும் தென்றல்" பார்த்தாயா!
வதையோடு
இன்பவதையோடு ஒன்றாய் சேர்த்தெடுத்த....

சுடரொளியாள் படர்ந்திடும்
வளர்ந்திடும் அழகை
நீ இரசிக்காததா!
பழகும் தென்றல்
படரும்தென்றல்
பல மனங்களோடு இரசம் சேர்க்கிறதாம்!
"விரசம் கலந்தாலும்
விபரம்தெரிந்த ஆள் நீங்களென்பாய்!"

"நேசிக்கும் தென்றல்"
என்னடி சொல்கிறது பெண்ணே!
"மண்ணுக்குள் புதுமைப்பெண்ணாய்
அவள் வளர்வாள்"
என்ற நம்பிக்கை
நம்பிக் கை
கொடுக்கிறது!
நம்பிக் கை தருகிறது!

இன்றைய நாள்
நினைவிருக்கா!
அன்றைய
நாள் என்றுமே மறந்திடக்கூடுமா!
அன்று
பயணித்த அன்று
உன் கண்கள் பனித்த நாள்!
"பிரிவு" என்ற ஒன்று....

என்னையும் உன்னையும்
உடலளவில் கடல் பிரித்து
வான் வழிசுமந்து
மடலெழுதும் நிலை தந்த நாள்!
வான் மதியுனக்கு
கடலெழுதிய கடல்நீர்
உன்கண்ணிறைத்து
விழிமடல் எழுதிய நாள்!...

தழுவிவரும் தென்றல் உனை
பிரிவு மடல் தழுவிய நாள் இன்று!
பரிவு! அதனோடு பிரிவு!
இணைந்துவந்து
கடமைகள் அழைக்க
காத்திருப்புக்கு வழி
வகுத்த நாள் அன்று!
இன்று நினைத்தாலும்......

மனது கசக்கிப்பிழிகிறது!
வார்த்தைகளால்
மழுப்பி மனம் மறைத்து
"அடி!பைத்தியமே!
இன்னும் நான்கு வருடங்கள்!
காத்திரு!
பூத்திருக்கும் உன்விழிகளுக்கு
பரிசுகள் காத்திருக்கு" என்றேன்!

மனதுள் பொங்கிநின்ற துயரக்கண்ணீரை
மனதுக்குள் பொத்திவைத்து
உன்னை ஆற்றினேனே!
பக்குவமாய்
உன் பரிசுத்த இதயமதில் கண்டுணர்ந்து
"பக்குவமாய் மறைத்துவிட்டு
என்னை நீங்கள் தேற்றுவது
எனக்குப்புரிகிறது!

போய்வாருங்கள்!
என்றுசொல்ல மனதில்லை!
உங்கள் மனதோடு
நான் வருகிறேனே! தடையென்ன அதற்கு"
என்றாய்!
உன் உணர்வுகள் படம் பிடித்த
என்நிலைபுரிந்த உன்இதயமதின்
சக்தி உணர்ந்து வியந்தேன் அன்று!

இன்று நினைத்தாலும்
புத்திதான் பேதலிக்கிறது!
பைத்தியம் நான்தானடி! பைத்தியமே!
மத்தியில் மனங்களின்
மத்தியில் இடம்பிடித்த என்னால்
என் புத்தியைச்சரியாய்
வைத்திருக்க முடியாத
திண்டாட்டம்!

பக்தியோடு பல கதைகள்
பக்குவமாய் நீ சேர்த்திருந்தாய்!
சக்தியோடு சக்தியாக
சிக்குகின்ற புதிர்களுக்குப்பதில்தெரியா
புத்தியுடன் நான் இருந்தேன்!
கச்சிதமாய் புரிந்து காற்றலையோடு
சக்தியதை நீ கொடுக்க
சக்தியுள் புத்தியுள் சக்திமிக்க...

சாதனைக்கு வழிசெய்த
சக்தியுன்னால் சக்திபெற்ற சக்தியானேன்!
இன்று நினைத்தாலும்
உன்சக்திதந்த தென்பு புத்தெழிலாய்
வென்றுவிட வைக்கிறது!
'தொட்டதெல்லாம் ஜெயம்" என்ற
சக்தியாக மிளிர்கிறதே!
உடலால் பிரிந்திருந்தாலும்....

சக்தியுள்ள உணர்வாலே
சந்தித்தித்து சந்தம் இசைக்கின்ற
விந்தை யார்க்குவரும்!
நமைத்தவிர யார்க்கு அது
கிடைத்துவிடும்!
நினைவோடு நினைவுகளாய்
நினைவுகளால் மடல்வரைந்து
கனவுகளின் சங்கமத்தில்...

சங்கமிக்கும் நினைவுத்தென்றலே!

மீண்டும் மற்றுமொரு மடலில்
இளந்தென்றலாய் திங்கள் உனை வருடும்வரை.....

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3839&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக