திங்கள், 3 ஆகஸ்ட், 2009

"இதயம் எழுதும் மடல்" (4)


30-06-2005
"இதயம் எழுதும் மடல்" (4)

"நித்திரைமேகங்களின் சித்திரக் கோலங்கள்!"
--------------------------------------------------------------

உயிருக்குள் உணர்வோடு இணைந்திருக்கும் தென்றலே!

இது என்ன மர்மம்!
மதுமலர் உன் மனமலர்வில் இணைந்து,
மதி காலைப்பொழுதிற்குள் தனைமறந்து,
தன்நிலை மறந்து,
சுதி இராகமதை இணைத்து,
சுகந்தம் உன் உணர்வுக்குள்
சதிராடும் போதில்,
ஒரு சந்திப்பு!
இரு உணர்வுகள்
ஒன்றுக்குள்
புதிர்போடும், பதில் பிணைப்பு!
அதிகாலைப் புதிர்த்தித்திப்பு!

உன்மதுவிதழ் திறந்து,
மெதுவாக ஓர் தென்றலின்
இதமானமென்வருடல்!
மின்காந்தம்
உயிர்பாய்ந்து உயிர்கலந்த
அன்பான வருடல்!
முழுநிலா முற்றமதில் முழுவதுமாய்,
உன்நிலை மறந்த ஓர் தழுவல்!
தழுவலின் தென்றல்!

என்நிலை மறந்து
"என்னடி என்செல்வமே!" என்கின்றேன்!
'என்நிலை என் உயிர் மூச்சு சொல்நிலை
சொல்வது தெரியலையா!" என்கிறாய்!
"தெரிகிறதடி! தெரிகிறதடி!
புரிதல்இல்லாத உணர்வுகளா இப்படிப் பேசுகிறது!
விரிதல், மன விரிதல்,
வானத்தில் வானம்பாடிகளாய்,
புரிதல் புணர்தல்,
பூம்புனலாய் இன்பம் பெருகி ஒன்றாய்
தெரிதல்!
அது தானே உணர்தல்!
இதுதானே காதல்!
"புரியலையா" என்றால் என்னடி இதன் அர்த்தம்"
என்றேன்!

"புரிந்திருந்தும் ஏன்மௌனம்?
நான் படும்பாடு தெரிந்திருந்தும்,
விரிந்திடும் ஆசைகள் தெரிந்திருந்தும்,
ஏன்மௌனம் அத்தான்!
வருந்திடும் நிலைகள்,
வருத்திடும் நிலைகள்,
உங்களை
வருத்திடும் கவலைகள், தெரிந்திடலாமோ?
நான் தெரிந்திடலாகாதோ?
புரிந்திருந்தும்,
எனை நன்றாய்ப் புரிந்திருந்தும்
பின் ஏன் மௌனம்?"
என்றாய்!

மௌன விழிப்பார்வைக்குள் அர்த்தம்,
அது ஆயிரம்
மலர்களின் மௌன மலர்யுத்தம்!
பித்தத்தில் சித்தத்தைக் குளிரவைக்க,
மௌனமாய் இதழ்இசைத்து,
" ம்..உன் அன்புக்குள்,
அரவணைப்புக்குள்
மௌனமாய்
மோதும் பார்வைக்குள்,
மோதும் ஆசைகள் கோடியடி! மனம்
மௌனமாய் ஊறும்,
இன்ப உயிர் ஓசைகள் ஓடிவந்து,
நாடிநரம்புகளை, இனிமையாய் மீட்டுதடி!

தனிமையாய்
தவித்திருந்த நிலைமாறி,
இனிமையாய் இன்பம் கூட்டுதடி!
வனிதை உன் வரவில்,
இதயம்
இனிமையாய் துன்பம் போக்குதடி!
நீக்கமற உனக்குள்ளே,
இனிமையாய்
மீட்டுகின்ற வீணையாய்,
ஏக்கமுடன் நீ இணைகையில்,
இனிமையாய்
கூட்டுகின்ற வனிதையாய்,
என்னோடு நீ இருக்கையில்,

எனக்கேது கவலையடி!
கவலைகள் தொலைந்ததடி! கவிதையாய்
எனக்காக உனைத்தந்து
உயிர்கலந்து இருக்கையில், இனி
எனக்கேது கவலையடி!"
என்றேன்!
தென்றலாய் உனை வருடி,
எனக்காக,
எனக்குள்ளே இருக்கின்ற உனை மருவி,
இதழ் பருகி,
எனக்கேது
தடையென்ற உரிமையினால்,
உன்னிதழ்த் தேன் பருகி,

இசைத்தேன்!
இனிமையாய் நீ இசைந்து
என்மார்போடு தவழ்ந்தாய்!
"இதைத்தான்
வனிதைநான் நினைத்தேன்!
என் இதழ்த்தேன் தனைத்தான்
அத்தான், நான் தரத்தான் துடித்தேன்!
தயக்கம் என்ன! என்னிதழ்மது
அத்தான்!
அது என்றும் உங்களுக்கே அத்தான்!"
என்று இதமாக இதழ்பதித்தாய்!
முத்தான
உன் உயிர் கலந்த
முத்தங்கள் பித்தாக்க,
முழுநிலவு குளிர்சேர்க்க,

"இத்தனை நாள் எங்கிருந்தாய்!
என்நிலவே! இத்தனை நாள் எங்கிருந்தாய்!
அத்தனை சுகங்களையும்,
சுகந்தமாய் நிறைக்கின்ற
என்முத்தழகே!,
இத்தனை நாள் நீ எங்கிருந்தாயடி!
சத்தமில்லாத சங்கீத ஸ்வரங்களாய்,
அத்தனை சுகங்களோடு,
பொங்கிவரும் கடலோடு,
சங்கமிக்கும் முத்தாக,
இத்தனை நாள் நீ எங்கிருந்தாயடி!
என்செல்வமே!" என்றேன்!

"அத்தனையும்
உங்களுக்கு ஆசையாய்ப் படைப்பதற்கே,
இறைவன்
இத்தனைநாள் மறைத்திருந்தான்!
மொத்தமாய் உங்களுக்கே!
அத்தான்!
அத்தனையும் எடுத்து,
சுகம் உங்களுக்குள் சேர்த்திடுங்கள்!" என்றாய்!
இத்தனைநாள்
காத்திருந்த சுகந்தமிவள் சேர்த்துவைத்த
முத்துக்கள் இவை!
அத்தனையும்
கோர்த்து அன்பு மேனிக்குச் சூட்டிடுங்கள்!
உங்கள்

சொத்து இவை" என்றாய்!
ஒன்றாய்
உயிர்கலந்த
மூச்சுக் கலவி
முத்து அதன் வாய் திறக்க,
மௌனம்
சம்மதமாய் இதழ்விரிக்க,
கொத்துக் கொத்து அதாய்,
தேக்கி வைத்த முத்தங்கள்,
காதல்
பித்துக்குள் புகுந்துகொள்ள,
இதமாக இழுத்தணைத்து,
அழுத்தங்கள்
முத்து அதன் வாய் திறக்க,
முத்தான முத்தங்கள், முத்து முத்தாய்த்

தடம்பதிக்க,
பித்தாகிப்போனோம் நாம்!
முத்தாகி, வெயர்வை முத்துக்கள்
உடல் கொதிக்க,
தென்றல்
தெம்மாங்கு பாடியதன் கொதிப்படக்கி,
உடல் தழுவ,
இடம்பிடித்த இன்பங்கள்,
பொங்கி வழிந்திருக்கும் சுகந்தங்கள்,
மடல்விரித்த,
உன்மௌன விழி படித்த பாடங்கள்,
கடல்நிறைக்கும்!
மடல் விரிக்கும், இணைந்த காதற்பாடங்கள்!
கடல் மை கொண்டு வரைந்தாலும்,
இடம் போதாத தாள்வானம்!
அது நீள் நித்திரைமேகமதன் சித்திரக் கோலங்கள்!

மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை!

நன்றி
சுபம்
--------- அன்புடன்
ஆதித்ததாஸன்.
30-06-2005
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3083&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக