செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

இதயம்எழுதும்மடல் (7)


"கேள்வியதன் பதில்!"
---------------------
இதயத்து இனிய மனதுக்கு!

உதயத்தில் ஒருநாள்
உன் குரல் கேட்டு இதயத்தில்
மலர்வுகொண்டேன்!
இன்ப இதயத்தைக் கண்டுகொண்டேன்!

புலர்கின்ற பொழுதாகி
மலர்கின்ற மலராகி, கனிந்த கனியாகி
ஏனிந்த மாற்றம்!

இனம்புரியாத இன்ப மாற்றம்!
நானிந்த
நிலைமாற வானந்தான்,
வான் அலைதந்த கோலந்தான்,
கலை ஞானந்தான் காரணமா!

மலை தந்த மனத்தோடு,
கலை தந்த சுகத்தோடு,
கவித்தாய் தந்த அன்புப்பாலோடு,

பாடி வரும் இளந்தென்றலின் தெம்மாங்குத்
தேன் தமிழோடு,
ஓடி வரும் நதியலையாய் உள்ளம்
பாடிவர,
சூடிவரும் சுடரொளியாய் இதயம் நாடிவரும்
நிலை ஏனோ?..

கூடிவரும் மனங்களில்,
ஓடிவரும் கணங்களில், இளமை
தேடிவரும் நிலைதானோ?..

நாடிவரும் நிஜங்கள், சூடி
வரம் கேட்கையில்,
"தாவிவரும் வேட்கை, தளிர்க்கொடியின்
தழுவலதன் சேர்க்கை",
என்று கூடி இருமனங்கள் ஒன்றாய்
கூவிவரும் குரல்கள், கூறுவது என்ன!

மனங்கள் ஒன்றாய்
ஆறுவது, ஆறுதலாய் தேறுவது,
ஆறு அதாய், தேன் ஆறு
அதாய், ஊறுவதன் காரணந்தான் என்ன?..
காரணங்கள் யாதோ!

தோரணங்கள் அசைந்து, இசைந்து
மனம்மகிழ்ந்து,
காரணங்கள் மறந்து,
காவியங்கள் நினைந்து, ஓவியமாய்
நெஞ்சில் சாய்ந்து கொள்ளும்போது,

சேர்ந்து கொள்ளும்
கொஞ்சல், கெஞ்சுவது சொல்லும்,
காரணத்தைக் கேட்டால்,

"காதலதன் மஞ்சம் காதலர்கள் நெஞ்சம் கூறுவதுதானே
ஆருயிரின் தேடல் ஓருயிரின் பாடல் கூடிவரும் கூடல்"
இதுவன்றி ஏது!.......

இனிமை இதய இளந்தென்றலின் வருடலோடு
மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்
29-06-2005.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3151&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக