செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

இதயம் எழுதும் மடல் (9)



இதயத்து உதயத்து நிலவே!


இனிமையுள்ள இதயம் ஒன்று
அன்றலரந்த மலராகி வனிதையுன்னை
வந்தடைந்த வரலாறு படைத்த விந்தை...

தனிமைதனை விலக்கி
தவிப்புக்கள் தனைநீக்கி இனிமை
உலகமதை உனைக்காண வைத்ததே!

மனிதநேயம் மதித்திட
மலர்ந்த நேயம்.. புனிதமுள்ள
மனதோடு இனிதமாக இணைந்து...

இசைவாக புனிதவேள்விக்குள்
தடம்பதித்த சுகங்கள்!
இடம்பிடித்த சுகராகங்கள்...

நடம்பயின்ற விந்தை
நயமான விந்தை!
சந்தத்தில் உன் சிந்தைகுளிர்வித்து...

"இந்த உலகில்
இப்படியும் சுகங்களா."...
என்ற புருவ உயர்வோடு.....

"எப்படியும் சந்தித்தே தீர்வது
இந்த சுகங்களை" என்று
சிந்தையில் நிறுத்திவைத்த சங்கற்பம்...

சாத்தியமானதடி!
சாத்திரங்கள் தொலைந்து சுக
சாத்திரம் ஒன்றெனக்கரைந்து...

நிறைந்திட்ட இதயம்
உதய இன்பவேள்விக்குள்
தடம்பதித்தது எப்படிச் சாத்தியமானதடி!

நீர்த்திவலைகள் வேர்த்திருந்து
சுகம் சேர்த்திருந்த விழிச்சந்தோச
நீர்த்திவலைகள்.... அகம்மலர்ந்த தாமரை

முகம் சிவந்து பார்த்தவிதம்....
யுகக்கணக்கணக்கில் பார்த்திடத்தோன்றுதடி!
இகத்தில் மட்டுமல்ல.. ஏழேழ்பிறப்பிலும் இணைந்திட்ட

சொந்தமாக எண்ணிட வைத்ததடி....
"வந்தோம் பார்த்தோம்
போனோம்" என்றா இருந்தோம்...

பார்வைகள் பரிமாறி
இதயக்கோர்வைகள் கவிதை பாடிவிட....
உதயகீதம் சந்தம் இசைத்து சுதிமீட்டிட....

வீணையாக நீயும்
மீட்டும் விரல்களாக நானும்.......
தேனுண்ணும் வண்டு தேன்நிறைந்த மலர்மீதமர்ந்து....

தென்றல் தழுவலுடன்
கூட்டும் சுகந்தமுடன் அசந்தநிலையில்
இசைந்திருந்த தேன்மலரே!..

உன்தேன்மொழி அதரங்கள்
வெளுத்துவிட...வான்கதிர்சுடரொளி
கண்ணதாஸன் கொடுத்திட்ட பாடலதாய்.......

மடிமீது தலைவைத்து
விடியும் வரை கதைபடித்து
விழிகள் சிவப்பாகி விடிந்தது தெரியாமல்......

கிழக்கு விழிபார்க்க
விழித்திட்ட கதிரவனின் சிவப்பு
உன்முகம் பரவ.....

கழித்திருந்த நாள்
மறந்திடமுடியாது..மறந்திடமுடியாதடி...
விழித்தபடி பார்த்திருந்தாய்!...

"என்னடி பார்க்கிறாய் கள்ளி.".
என்று கேட்டதற்கு.".ம்..ம்..புலவருக்கு
விடிந்தது தெரியாது சுதிநயமோ."..

"மதியோடு மதிசேர்ந்து கதிரொளியாய்
விதியெழுதும் கதைதனைப்பார்க்கிறேன்!கவியெழுதும்
காந்தவிழிக்கண்களைப்பார்த்த வண்ணம் இருக்கவேண்டும்"

என்றாய்.."போடி பைத்தியமே..
உன் கிருஸ்ணகாந்தவிழிமுன்னால்
இந்தக்கொள்ளிக்கண் எந்த மூலையடி!" என்றேன்...

கொல்லென்று சிரித்து
சில்லென்று என்விழியில் இதழ்பதித்து
நல்தவழும் தென்றலதாய் தலைகோதிவிட்டாயே..

"அலைமோதும் ஆசைகளைத்தூணடிவிடும்
உன்விழிகளது வடித்தகவிதைக்கு.....
ஆசைகொண்ட உன்னவனின் ஏழிசைகீதமடி இது."..என்று

மீட்டிநின்ற காலங்கள்..
என்றும் சேர்த்திருக்கும் கோலங்களாய்
திசைகாட்டியதன் திசைக்கு...என்னை இழுத்துவந்து...

உட்காரவைத்து
இதயம் மீட்டீய என்சுந்தரிக்கு
மடல் எழுதவைத்ததடி..

நேரம் இதயம் எழுதுவதை
மடலில் எழுதுதற்கு முடியாதநிலைதான்..
கிடைக்கும் நேரமெல்லாம் எழுதுகிறேனடி...

உடைக்கும் அணைதிறந்த வெள்ளமென
மனது எழுதுவதை மடல்
எழுதமுடியாதபடி நேரந்தான் பிரச்சனை...

இலட்சனைகள் மனது பதிக்கிறது..
உனது இதயம் எழுதும்மடல்
இன்னும் விரியுமடி..

நினைவுகளின் தழுவலோடு
சுகம்சேர்த்திருப்போம்...
கனவுகள் கவிதைபாடட்டும்...

கவிதையுன் கண்களில்
வேண்டும் வரம் ஒன்று..
என்றும் உனைத்தீண்டும் சுகம் என்றும்...

வேண்டும் வரமாக
வேண்டுமடி கள்ளி...மீண்டும்
மறுமடல்வரை இனிமைசேர்க்கட்டும் இம்மடல்...

மீண்டும் மறுமடலில் தென்றலாய் வருடும் வரை...

நன்றி
சுபம்..

அன்புடன்
ஆதித்ததாஸன்
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3615&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக