செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

இதயம் எழுதும் மடல் (8)



ஒன்றாய் இதயமதில் இணைந்திருக்கும் இதயமலரே!

நன்றாய் எதிர்பார்த்து எதிர்பார்த்து
"என் இதயமதின் மடலைக்காணவில்லையே!"
என்று ஏக்கமுடன் தாக்கங்கள் நிறைத்திருப்பாய்!

இதய
மன்றுதனில் எழுதுவதை
உதயமுன்றல்தனில் நீ எதிர்பார்ப்பது
நன்றுதான்! நன்றுதான்!

ஒன்றாய் உயிர்கலந்த
உன்னுறவு உனக்கும் எனக்கும்
நன்றாய்ப் பிணைந்ததுதான்!

அன்று
உன் காந்தவிழி பேசியது
இன்றும்
மனதோடு பேசுதடி!

என்றும்
இனிமையின் சுகராகமாய்
நன்று கதைபடித்து கவிதை கிறுக்க வைக்குதடி....

அன்று நனைந்து தோய்ந்து
இதயம்
பேசியதன் எதிரொலிகள்
இன்றுபோல் இருக்குதடி....

"பர்ர்த்தேன் ரசித்தேன் பக்கத்தில் அழைத்தேன்....
என்று
பாடியவன் பார்த்திருந்தால்
பல கோடிக்கவிதைகள் புனைந்திருப்பான்!

ஒன்றுமட்டும் உண்மையடி..!
உன்
காந்தவிழி பார்த்தபின்தான்
இவன்
ஏதோ கிறுக்கத்தொடங்கி...
என்
முதல் இரசிகை அதுநீதானே..

கிறுக்கனின் கிறுக்கலுக்குள்
உருக்கம் இருக்கென்றாய்...
இரக்கம் இருக்கென்றாய்...
"கருக்கிவிடும் எதிரிகளின் இதயமதை
உங்கள் கிறுக்கல்" என்றாய்..
"இரக்கமில்லா அரக்கத்தனங்களை

உருக்கி அழித்திடும் உங்கள் கிறுக்கல்"
என்றாய்...
பெருக்கிவிடும் நல்மனங்களை
உங்கள் வசமென்றாய்!

"இருக்கிறது!..இருக்கிறது! ..
உங்கள் கிறுக்கலுக்கு
சக்திஇருக்கிறது"
என்றாய்!
"என்னவோ என்மேல் உள்ள காதலினால்

கூறுகின்றாய்" என்றேன்!
"காதலினால் அல்ல
உங்கள்
ஏறுநடைதெரிந்துதான் கூறுகின்றேன்"
என்றாய்....
"உங்கள்
வீறுகொண்ட வீரம்தெரிந்துதான் கூறுகின்றேன்"
என்றாய்..
ஊறுகின்ற உன்னிதழ்கள் கூறுகின்ற அழகை
நான்
இரசித்துநிற்க..

நாணிநின்றாய்!
நாணிநின்றவாறு காதல்மொழி பேசிநின்றாய்..
ஏணியதாய்
உன்னாலே நான்கண்ட ஏற்றம்
கூற்றுவனும் நெருங்கவிடா
வாணியுந்தன் காதல் ஏற்றம்..

"காணிநிலம் வேண்டும்" என்றான்
கவிபாரதி..."கலை
வாணியுந்தன் காந்தவிழிபோதுமடி எந்தனுக்கு"
என்றேன்..
"நினைவுளதாடி!!..."

ஆணியடித்ததுபோல் அச்செழுத்துக்காரி நீ.!.
அச்சுக்குள் உன்
இதயம்
நாணிநீ சேர்த்தெடுத்த கவிதையது நினைவிருக்கா..
இன்றும் என்
இதயம்

ஏணியதாய் ஏற்றமுடன்
ஏற்றிவைத்த பலவிளக்குகள் விளக்கம் சொல்லும்..
வாணி நீ! கலைவாணி நீ!
கவிதைக்குள் நிலை வாணி நீ...
என் இதய

உதயமானவளே!
உன்
இதய அரவணைப்பில்
என்
இதயம் புலம்புவது
கவிதையல்ல..

உன்னிதயம் துடிப்பதுதான் கவிதையடி..
கண்ணே!...
"கதையும்கவிதையும் காசுதரவேண்டாம்!
உங்கள்
மனதுதனை ஆறு அதாய்
உதயசூரியனாய்
மகிழவைத்தால் போதும்" என்பாய்...

" உண்மைதானடி கண்ணே!
உன்
அன்பு அதுதான் மதுவெனக்கு...மயக்கமதைத்தந்து
மகிழவைக்கும்
உன்னன்பு
அதுவொன்றே என்றும் என்னுடன் கதைபேசும்...

உன்
பெண்மையின் நளினம் தருகின்ற
உண்மையின் இரகசியம்....அதுதானடி!
என்
மகிழ்வின் உச்சம்!" என்றேன்...
அப்படியே என்மேல் சாய்ந்தாயே!...
அன்றுதந்த

சுகம் ....
கோடிகொடுத்தாலும் கிடைக்காதே!...
இகத்தில்மட்டுமல்ல...
அகம்
தரும் சுகம் மறுபிறப்பிலும் இணையவேண்டி
இறைவனை வேண்டுகிறேனடி...

சுகங்களில்
சுகமான இராகமாய்
சுகவீணையாய் சுருதிமீட்டவேண்டுமடி கண்ணே!
சுகங்களோடு சுகநினைவுகளோடு
சுருதிமீட்டிய
இன்ப இதயவீணையே!...

மீண்டும்
மற்றுமொரு மடலோடு தென்றலாய்உனைத்தழுவும்வரை.....

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3347&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக