ஞாயிறு, 31 மே, 2009

"இனிமை!"

முற்றும் கசந்து
பற்றுத் துறந்து
சிற்றம் பலமே
கதியெனக் கிடந்து
வற்றும் வரையில்
வெற்றுடல் சுமந்து
சுற்றும் உலகினைச்
சுற்றும் உலகினில்

முற்றும் உணர்ந்தால்
முனிவனின் நிலையே!
முற்றும் கசந்தால்
இனிமையும் இ(ல்)லையே!
பற்றும் வேண்டும்!
பாசமும் வேண்டும்!இனிமை
பற்றிப் படர்ந்திட
நல்லிதயங்கள் வேண்டும்!

சுற்றம் வேண்டும்!
சுகங்களும் வேண்டும்!மன
முற்றம் நிறைந்திடும்
நிம்மதி வேண்டும்!
பற்றும் உலகினைப்
பற்றிட வேண்டும்!தினம்
சுற்றிப் படர்ந்திடும் நல்
சிந்தனை வேண்டும்!

சுற்றிப் பார்த்தால்
சோகங்கள் உண்டு!
வற்றிப்போன பல
காயங்கள் உண்டு!இதயம்
முற்றிப் பழுத்திட்ட
ஞானிகள்கூட சுகங்கள்
பற்றிப் பிடித்திட்டே
பற்றினை விட்டார்!உடல்

வற்றிடும் முன்பிதை
உணர்ந்திடல் நன்று!
கற்றிடும் கலைகளைக்
கற்றிடல் நன்று!நன்கு
முற்றிப் பழுத்தாலே
கனிகளில் இனிமை!அன்பில்
பற்றிப் படர்ந்தாலே
உலகினில் இனிமை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக