ஞாயிறு, 31 மே, 2009

நீண்டதொருபயணத்தில்....


ஆண்டுகள் பலகடந்து
மீண்டுவந்த நினைவுகள்..
கூண்டுகள் தனைத்திறந்து
சீண்டுகின்ற உணர்வுகள்...

வேண்டுமடி நீ எனக்காய்
தூண்டுமடி மடிதனுக்காய்...
தாண்டிவந்த உறவுனக்காய்
வேண்டிநின்ற மனக்கணக்காய்...

மீண்டுமந்த நினைவலைகள் நாம்
தீண்டிநின்ற தினத்தடங்கள் கால்
தாண்டுகின்ற போதிலெல்லாம் காலம்
தாண்டிவந்து தொடர்ந்ததுவே...

"வேண்டும் உங்கள் உறவு!" என்று
தூண்டிவிட்ட திங்களாய் நீ!அன்று
மீண்டு நீ பிறந்ததுவாய் "வரம்
வேண்டிவந்தேன்!" என்றதுவும்...

"கூண்டில் இட்ட புழுவாழ்க்கை
தாண்டிவந்தேன்!" என்றதுவும் கடல்
தாண்டிவந்த நினைவுகளாய்
தூண்டில் இட்டே இழுத்ததுவே...

தாண்டிவிட்ட காலங்களைத்
தூண்டிவிட்டுப் பார்க்கின்றேன்!
தூண்டிவிட்ட ஒளியலையாய் மனம்
கூண்டிலிட்டுப் பார்க்கிறதே...

"மாண்டுவிட்ட காலங்கள்
மீண்டும் வாராதா!" என்று மரம்
தோண்டி நான் பெயரிணைத்த காடு
தாண்டிவிடும் போதினிலே...

வேண்டுமென்றே உன்னை நான்
சீண்டிவிட்டுப் பார்த்திருக்க சினம்
கூண்டுடைத்த பறவையதாய் உனைத்
தாண்டிவிடத் துடித்திருக்க...

தீண்டிவிடும் காதல் உணர்வுகளால்
தூண்டிலிட்டு உனைத்துவளவைக்க
நீண்டுவிட்ட காலங்களை மனம்
தூண்டிவிட்டுப்பார்த்ததடி..

மீண்டுமந்த வீடு..மீண்டுமதே நிலை..
வேண்டுமென்ற நீ இல்லை..
மீண்டுமந்தச் (ச)மையல் அறை...
வேண்டுகின்ற நீ இல்லை..

பூண்டுடைக்கும் உன்னழகு..உனை
வேண்டுமென்றே சுற்றவைக்கும்..
பூண்டு ரசம் செய்யழகு காதல்
தூண்டி நின்று பற்றவைக்கும்.....

வேண்டும்வகை சமையற்கலை
தூண்டும்வகை காதற்கலை...இன்னும்
வேண்டுமென்ற அடம்பிடிப்பைத்
தூண்டுகின்ற அழகுக்கலை..சுவிஸ்

தாண்டிவந்தும் மறக்கவில்லை...
தோண்டுகின்ற ஊற்றினைப்போல் மனம்
தாண்டிவிடவைத்ததடி...நினைவுகளைத்
தூண்டி விட்டுப்பார்த்ததடி...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக