வியாழன், 4 ஜூன், 2009

"அழியாத கோலங்கள்!"


உன்னழகில் என் மனம் இலயித்து
என்மனதை நான் பறிகொடுத்த காலங்கள்!
முன்னசைவில் ஓர் அழகு!உன்
பின்னசைவில் சேர் அழகு!

சின்னப் பிள்ளையாட்டம் நீ
சின்னநடை நடந்துவந்து
என்னை வியக்கவைத்து நீ
மன்னனாய் உட்கார்ந்திருப்பாய்!

சின்னச் சின்னக் கோடுகளாய்
சின்னவுன் முதுகினிலே
முன்னிருந்து முக்கோலங்கள்
உன்னழகுக் கணிசேர்க்கையிலே

என்னை மறந்துநான்
உன்னை வியந்தேனடி!
கன்னத்தோடு உன்னை வைத்து
சின்ன முத்தங்கள் சேர்த்திருந்தேனடி!

சின்னச் சின்னக் கால்களுக்குள்
என்னே உன் வேகமடி! நீ
என்னை முந்தித் துவிச்சக்கரத்தின்
முன்னே நீ குறுக்கோடுகையில்

என்னே உன் வேகமடி! என்
பின்னே நான் திரும்பிப்பார்ப்பேன்!நீ
முன்னே வந்திட்டால் என்
பின்னே வெற்றிவரும்! என்றும்

உன்னைப் பார்த்திருந்தால்
என்மனதில் மகிழ்ச்சியடி!இன்றும்
உன்னைப் பார்க்கிறேன்! என்
மனக்கண்ணில் உன்னழகு!

சின்னச் சின்னக் கடிகடித்து நீ
தின்னுகின்ற தனியழகு! பழந்
தின்னுகின்ற உன்னழகு!பார்த்திருக்க
இன்னும் பலநூறு வரிகளுக்குப்பாலமிடும்!

வாழ்க நீ வாழ்க!அணில்
பிள்ளை நீ வாழ்க!மண்ணில்
வாழ்க! நீ வாழ்க! அணில்
பிள்ளையே!நீ என்றும் வாழ்க!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக