வெள்ளி, 5 ஜூன், 2009

"தென்றல் நீதான்!"

தென்றலாய் எனைத்தாலாட்டி இதய
மன்றத்தில் இடம் பிடித்தவளே!
நன்றடி! நன்று! அன்றும் இன்றும்
தென்றலாய் நினைவுகளாய் என்றும் நீ!

மன்றெலாம் மகுடம் தந்தாலும் உன்
மன்றத்தில் நீ தந்த மகுடம் அது
நன்றடி! நன்று! செந்தமிழாலே குளிரவைத்து
மன்றெலாம் வலம்வரும் சுகம்தந்தாயே!

இன்றெலாம் நினைக்கும் பொழுது!
ஒன்றோடு ஒன்றாகி உன்னோடு நன்றாகி
என்றுமே மறக்காத இளந்தென்றலாய் நீ தந்த
மன்று! மறந்திட முடியாத ஒன்று!

அன்றெலாம் உன்னை சிந்தையில் நிறுத்தி
"வென்றுவா தமிழே! நீ வென்றுவா!" என்பதே
நன்றென மந்திரம் நாளும் நான் உச்சரிக்க
நன்று நீ சொன்னாயே! நன்றியடி கண்ணே!

கொன்றெலாம் துயர்கள் வாட்டிடும்போதும்
"சென்றுவா மகனே! வென்றுவா" என்று
சென்றவிடமெல்லாம் தென்றலாய் இணைந்து
நன்று வென்றிடவைத்தாயே! நன்றி வென்றதடி கண்ணே!

தென்றலாய் வந்தாய்!தேன்மொழியினைக்கலந்தாய்
அன்றலர்ந்த மலராய் அழகுற நிறைந்தாய்!
இன்றென நினைத்தால் நினைவுகள் இனிமை!
நன்று! நன்று ! உன்வரவு உன்நினைவு நன்றடி! நன்று!

மன்றெலாம் நீ! இதய மன்றதனில் என்றும் நீ!
சென்றெல்லா மனங்களையும் குளிரவைக்கும் திங்கள் நீ!
நின்றாலும் இருந்தாலும் நடந்தாலும் நிம்மதி
மன்று அதாய் என்றும் நீதான்! தென்றல் நீதான்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4118&pid=57298&mode=threaded&start=#entry57298

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக