வெள்ளி, 5 ஜூன், 2009

"அருமை மகளே!"


கருவினில் உனைச்சுமந்தேன்!
உருவினில் எனைவடித்தாய்!இனிய
கருவுக்குள் கனவுகள் சுமந்து
திருவுக்குள் திருவாய் நினைத்தேன்!

பெருமைக்குள் பெருமை சொல்லும்
பேருவகைக்குள் பெண்ணாய் மலர்ந்தாய்!
அருமைக்குள் அருமையாக இனிமை
அருமைக்குள் மருவும் பெண்ணே!

கருவினில் உனைச்சுமந்த உன்
அருமைத் தாயின் கண்ணீர் மடல் இது!
பெருமைகள் சொல்லும் பெண்ணே!
கருமைகள் தோய்ந்த கண்ணீர்க்

கருமணிக்கடிதம் கண்டேன்!உனைக்
கருவினில் சுமந்தபோத வளர்த்திட்ட
அருமைக்கனவுகள் கலைந்திட்ட உன்
கருமையில் கண்ணீர்க் கடிதம் கண்டேன்!

"அருமையாய் வாழ்வாய்" என்றே
அன்றுனை மணம்முடித்துக்கொடுத்து
"பெருமைகள் சொல்வாய்" என்று
அன்றுநான் மனம்மகிழ்ந்தேன்!

கருமைகள் கரைந்து கண்ணீர்
இன்றுஉன் மடல்பார்த்ததிலிருந்து
கருவினில் சுமந்தகாலம் "கனவுகள்"
என்று கண்டேன்! கவிதைநீ கதிகலங்கி

கருத்தினில் மாற்றங்காணும்
உருக்குலைத்தன்மை கண்டேன்!
கருத்தினில் தெளிவு காண்பாய்!வாழ்வுக்
கருக்குலைவுக்கு வழிநீ நாடாய்!

வருத்திடும் வாழ்க்கை மாறும்!
வருத்திட நினைக்கும் மிருகம்
உருத்தெரியாமல் மாறும்! உன்னை
வருத்திடும் நிலைதான் மாறும்!

பொறுத்திரு! பூமியாள்வாய்!
வெறுத்திடும் நிலைதான் மாறும்!
நிறுத்திடு நெஞ்சில் நீதான்!
வெறுத்திடும் நிலையை மாற்ற

பொறுத்திரு மகளே! நீயும்
பொறுத்திடும் பலனும் கிட்டும்!
கருத்திடும் வானும் விலக
வருத்திடும் நிலையும் மாறும்!

"எடுத்தேன்! கவிழ்த்தேன்! என்று வாழ்வைக்
கெடுத்தோர் பட்டியலில் நிலை
"கெடுத்தாய் நீயும்"என்ற பெயரும்
எடுத்திடா நிலை நீ உணர்வாய்!

அடுத்தவர் பலரும் சொல்வார்!
கெடுத்திட முனைந்து நிற்பார்!
விடுப்பதாய் உனது வாழ்வை
கெடுத்திடக் கனல் மூட்டிடுவார்!

விடுப்பினை கேட்கும் கயவர்
கெடுப்பினை அறிந்து நீயும்
துடுப்பெடுத்திடாதே பெண்ணே! வாழ்வைக்
கெடுத்திடாதை என் கண்ணே!

சோதனை யாவும் ஒன்றாய்
வேதனை சேர்க்கும் நேரம்
மாதுனை மயங்கச்செய்யும் மதி
வேதனை தீர்த்திடாது! மயக்கந்தான் நீயும் தெளி!

சோதனை யார்க்கு இல்லை!
வேதனை தீர்க்கும் வழிகள்
சாதனை காட்டும் நெறிகள்
மாதுனைத் தேற்றும்! மறுமலர்ச்சியை உண்டுபண்ணும்!

போதனை தாயின் அநுபவம் கண்ணே!
வேதனை தீர்த்துவிடு! விடியலும் கண்முன்னாலே!
சோதனை சூழும் போது மனம்
போதனை "பொய்வேதம்" என்னும்!

காதிலே போட்டுக்கொள்! காதலை வளர்த்துக்கொள்!
மாதுநீ நினைத்தால் நன்மை கூடிடும்! வாழ்க்கை
காதலாய்க்கனிந்து கவிதையாய் துலங்கவைக்கும்!
ஏது! நீ கவலைவேண்டாம்! கருத்தினில் தெளிவு காண்பாய்!

"அடிமை"யென்னும் "ஆண்டாள்" என்னும்
அடிமைவிலங்குகள் அறுந்துபோகும் என்றும்
அடிமைதான் அன்புக்கன்றி அதிகாரத்துக்கல்ல கண்ணே!
அடிமையாய் அன்புள் அடங்கி அறநெறி தளைக்க வாழ்வாய்!

கடிதென எதுவுமில்லை! காலம் நல்பதில்தான்சொல்லும்!
கடிதென இருப்பதெல்லாம் இலகுவாய் மாறும் மனந்தான்
கடிந்திடும் நிலை மறந்தால் கனிவோடு தெளிவுகண்டால்
கடிந்திடும் கவலை தீரும்! கருணையே உன்னைவெல்லும்!

கவலைகள் வேண்டாம் பெண்ணே!
கடவுள்தான் துணையாய் நிற்பார்!
அபலையாய் யாரும் இல்லை!
நடந்துவா! கவலை தீரும்! நிம்மதி உனக்குள் வாழும்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக