சனி, 6 ஜூன், 2009

"அழகு" "பழகு"



சத்தம் இல்லாத தென்றல் அழகு!
புத்தம் புதிதாக மலர்வது அழகு!
நித்தம் சொல்லாத மனமன்றம் அழகா!கடல்
முத்தம் கொள்ளாத தினக்கதிர்கள் அழகா!

புத்தம் புதிதான புலர் காலை அழகு!
சித்தம் குளிர்கின்ற சிந்தை அழகு!
அர்த்தம் இல்லாத கவிதை அழகா!மடல்
அர்த்தம் சொல்லாத காதல் அழகா!

எத்தர் இல்லாத உலகம் அழகு!
பித்தர் சொல்லாத கவசம் அழகு!
அத்தர் இல்லாத மலர்கள் அழகா!இதய
சுத்தர் இல்லாத சதைகள் அழகா!

நித்தம் இடுகின்ற முத்தம் அழகு!
சத்தம் இடுகின்ற அலைகள் அழகு!
அர்த்தம் இல்லாத சக்தி அழகா!உடல்
அர்த்தம் இல்லாத புத்தி அழகா!

"பத்தும் பதினாறும்" பெறுவது அழகு!
"பத்தும் பறந்தோடும்" என்பது அழகு!
நித்தம் சலிக்கின்ற முத்தம் அழகா!உடல்
பித்தம் தலைக்கேறும் சத்தம் அழகா!

கத்தல் இல்லாத கவிதை அழகு!
சுத்தல் இல்லாத கதைகள் அழகு!
முத்தல் இல்லாத கனிகள் அழகா!மனம்
முத்தல் இல்லாத முனிகள் அழகா!

புத்தன் சொல்கின்ற அன்பு அழகு!
பக்தன் சொல்கின்ற பரசமயம் அழகு!
பித்தன் சொல்கின்ற வம்பு அழகா!சதைப்
பக்தன் சொல்கின்ற சமரசங்கள் அழகா!

அர்த்தம் தெரிகின்ற ஊடல் அழகு!
அர்த்தம் தெரிகின்ற தேடல் அழகு!
அர்த்தம் தெரியாத ஆடல் அழகா!காதல்
அர்த்தம் தெரியாத கூடல் அழகா!

"புத்தம் புதுப்பூமி" என்பது அழகு!
நித்தம் நதிபோலப்பாய்வது அழகு!
"நித்தம் மதுவேண்டும"; என்பது அழகா!நீ
"நித்தம் நிதிவேண்டும்" என்பது அழகா!

"நித்தம் எதுஅழகு!" என்பது அறிந்து
"நித்தம் எதுவேண்டும்" என்பது தெரிந்து
சித்தம் குளிர்ந்து நீ வாழப்பழகு!மதிப்
பித்தம் தெளிந்து நீ வாழப்பழகு!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக