ஞாயிறு, 7 ஜூன், 2009

"பாட்டுக்கோட்டை"

"பாட்டுக்கொரு கோட்டை அவன்
பட்டுக்கோட்டை!" அவன் பாடல்கள்
காட்டும் கோட்டை! அவன் தேடல்கள்
கூட்டும் இனிய உதயக் கோட்டை!

காட்டுமனங்களையும் பாட்டில்வைப்பான்!
மாட்டும் மனங்களையும் ஏட்டில் வைப்பான்!
கூட்டும்! சுவை கூட்டும்!அவன் பாட்டின் சுவை
காட்டும்! சுகம் காட்டும்! அவன் பாட்டின் கோட்டை!

பாட்டைப் பாடியே அவன் பாட்டைப் பாடியே
நாட்டைப்பிடித்தவர் ஏராளம்! ஏட்டைத்தொடாதவரும்
பாட்டைப்புரிந்து கொள்ளும் பாட்டுக்கள் அவன் பாட்டு!
சாட்டைபிடித்துச் சாத்தும் அவன் பாட்டு! மிருக

வேட்டையாடும் அவன் பாட்டு! கோடு போட்டுச்
சாட்டையோடு நீதி காட்டும்! மனச்சாட்சியோடு
வேட்டையாடும்! சாதிப்பாகுபாட்டை அது ஓட்டும்!
ஓட்டைபோடும் மனங்களோடும் அவன்பாட்டு நன்றாய்

சாட்டைகொண்டு அதுதாக்கும்! ஒன்றாய் நின்று
நாட்டைக்கட்டியது ஆள வழிகாட்டி நின்று ஒளிகூட்டும்!
பாட்டைக்கொண்டு பலர் வேட்கை தீர்த்த அவன் பட்ட
பாட்டையார் அறிவாரோ! பட்டினிச்சாவினில் நாளும்

ஒட்டியுலர்ந்தான் அறிந்தாரோ! அவன்பாடல்
பட்டிதொட்டியெங்கும் நட்டவிருட்ஷமதாய்
ஒட்டியுறவாடியதே! கட்டியங்கூறியதே! ஆனால்
ஒட்டியுலரந்தான்! அவன் ஒட்டியுலரந்த கதையறிந்தாரோ!

திட்டம்போட்டுத் திருடும் கூட்டத்தை அவன்
வட்டம்போட்டுக் காட்டினான்! சட்டம்திருத்தா
வட்டத்தை அவன்பாட்டு வட்டம்திருத்தியதே!
திட்டத்தைக்காட்டியதே! உயர் திட்டத்தைக்காட்டியதே!

சட்டத்தைப் படிக்காத மனங்களைப் படித்த
சட்டவாதியவன்! சட்டாம் பிள்ளை அவன்!
பட்டத்தைப் பெறாத பள்ளிப்படிப்பறியாப் பட்டதாரி அவன்!
திட்டத்தைப் போட்டு தீர்க்கதரிசனத்தைக் கோடுகாட்டியவன்!

"பட்டுக்கோட்டையே! பாட்டுக்கோட்டையே!
இறக்கவில்லையடா நீ! இறந்தவன் நானடா!
பட்டுக்கோட்டை! இனி என்னாய் இருப்பவன் நீயடா!
இறந்தவன் நான்தானடா!" என்றானே கவிகண்ணதாஸன்!

பாட்டுக்கோட்டையே! பட்டுக்கோட்டையே!
நாட்டுப்பற்றாளனே! நீ காட்டியவழியில்தான்
நாட்டில் நல்லவர் வாழ்கிறார்கள்!கிழக்கு
காட்டும் உண்மையிதே!கிழக்கே! நீ வாழியவே!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக