ஞாயிறு, 7 ஜூன், 2009

விதிபெரிதா! மதிபெரிதா!" உருவகக்க(வி)தை

வாழ நினைத்தோம்!
வாழ்ந்துபார்க்க நினைத்தோம்!
சூழ நின்ற கயவர்கள்
சூழ்ச்சிசெய்து சிறைவைத்தார்!
மாழ நினைத்தோம்!
மாண்டுவிட முடியவில்லை! விதி
சூழ ஒன்றுபட்டு
சூழ்ச்சிகள் வென்றுவிட வைத்ததுவே!

விதி பெரிதா கண்ணே!
நம் மதி பெரிதா! நம்
மதிநுட்பம் போதாது
என்பதுதான் மெய்யா!
சதி செய்து சாகடிக்க
நினைப்பவர் கைகளில்
கதிஒன்றும் புரியாது
கலிகாலம்தான் பதிலா!

நாளைவரும்!
நம்பிக்கை தரும் கண்ணா! நம்
வேளைவரும்!
நம்பிக்கையுடன் நாம் இருப்போம்!
கோழையல்ல நாம்!
கொண்ட கொள்கை மாறாத
"நாளை விடியும்" என்ற
நம்பிக்கையுண்டு கண்னா!

நதியாகி என்மதிக்கு
புலப்படும் புத்தி இது!
சதிகாரர் அவர்மதிக்கு
சவக்குழி தோண்டும் இது!
புதிராக நாம் சண்டை
பிடித்திடுவோம் அவர் மதிக்கு
புதிராகும்! "என்ன இது!
இவர்களுக்குள் சச்சரவா!

கோழைகளாய்த் தங்களுக்குள்
சச்சரவுச்சண்டைகளா!
வேளையிது! இனிஇவர்கள்
இணைந்திடவே மாட்டார்கள்!
நாளையல்ல! வருகின்ற
காலத்திலும் இணைந்திடார்கள்!
கோழைகளைத் துரத்திடுவோம்!"
என்று நினைத்திடுவார்!

சதியைச்சதியாலே
சாகடிக்கவேண்டும் கண்ணே! அவர்
மதிதன்னை நம்மதி
நோகடிக்கவேண்டும் கண்ணே!
புதிதல்ல இதுவொன்றும்!
"ஊனுக்கு ஊன்" என்ற
மதிநுட்பம் வாய்ந்தவர்கள்
தந்துசென்ற பாடம் கண்ணே!

வேளையிது! ஆரம்பி நாடகத்தை!
அதோவருகிறார்கள்!
நாளையல்ல! இன்றே
விடியல் பிறக்கும் கண்ணே!
மூளையில்லா மூளியர்கள்
முகத்தில் கரிபூச நல்ல
வேளையிது கண்ணே!
ஆரம்பி நம் நாடகத்தை!

நாடகத்தின் ஆரம்பம்!
நல்லதொரு ஆரம்பம்!
மேடைகட்டி ஆடவில்லை!
சிறைக்கூடமதில் ஆரம்பம்!
ஊடறுத்து வந்த புத்தியதன்
வித்திதனில் மதி
ஏடெடுத்துப்படிக்காத
அநுபவத்தின் ஆரம்பம்!

நாடகத்தை பெண்கிளிதான்
தொடக்கியது கச்சிதமாய்!
"வேடம் எல்லாம் தெரிகிறது
மோசக்காரா! என்னை
வேடமிட்டு நடித்து
ஏமாற்றிவிட்டாய்! உன் பொய்
வேடம்எல்லாம் கலைந்து
எனக்கு உண்மை தெரிந்தது!

காடதினில் வாழ்ந்தாலும்
இனியுன்னுடனே நான்வாழேன்!
ஓடதனில் பிச்சையெடுத்தாலும்
உன்னுடன் நான்வாழேன்!
ஓடு! ஓடு! எனைவிட்டு
இனிஓடிவிடு! என்முன்னே நில்லாதே!
ஓடு! ஓடு! எனைவிட்டோடு!" என்ற
அந்தப் பெண்கிளியை

"போடி! போடி! குடிகேடி
உனைப்போய் நான் நம்பி வந்து
நாடிவந்து பட்டதுன்பம் போதுமடி!
இனியுன்னோடு
வாடிவாடி வதங்கியது போதமடி
வாய்காரி! நாதியின்றி உனை
நாடி வந்ததுதான் பாவமடி! போதுமடி
உனைநம்பியது போதுமடி!"

என்றுசொல்லி சண்டைக்கு
வலிந்தழைக்க ஆண்கிளிதான்,
"நன்று! நன்று! இனிநீங்கள்
நாறடித்த நிலைபோதும்! இனி
என்றுமே ஒன்றுபடமாட்டீர்கள்
என்பதுமெய்! நம்வேலை
நன்றாயே முடிந்ததுவே!'
என்றுசொல்லிச் சதிகாரர்

நன்றாய் எகத்தாளமிட்டுச்
சிரித்தபடி சிறை தனைத்திறக்க,
ஒன்றாய்ப் பறந்தனவே!
ஒருமித்து இணைந்தபடி! "நாம்
வென்றோம் கண்மணியே!
காலம் கனிந்து வந்ததுவே!"
என்றதுமே பெண்கிளியும்
"இல்லை இல்லைக்கண்ணாளா!

நன்றாய் வியூகம் வகுத்து
நீ சொன்ன புத்தி
நன்றாய் வேலைசெய்ததுவே!
விதியே கதியென்று
ஒன்றாய் முடங்கிக்
கிடந்திருந்தால் வென்றிருப்போமா!
வென்றோம் உன்மதிநுட்பம்
ஜெயித்ததுவே கண்ணாளா!"

என்று சொல்லிப்பெண்கிளியும்
களிப்புடனே கன்னமதில்
நன்று நல்முத்தங்கள்
பதித்திடவே, ஆண்கிளியும்
"நன்றாய் நீ நடித்தாயடி கள்ளி!
உன் நடிப்புக்கு
என்றும் என்முத்தங்கள்
உன்சொந்தமடி" என்றதுவே!


"விதியே கதியென்று ஒடுங்கிக்கிடந்திட்டால்
மதிக்கங்கு வேலை எங்குண்டு!" என்ற பாடம்
மதிகெட்ட மாந்தர்க்குப் புரிவதில்லை என்றும்
விதிசொல்லித் திரிகின்ற வீணர்க்கு இதுபாடமன்றோ!..

நன்றி
சுபம்.

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3567&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக