ஞாயிறு, 7 ஜூன், 2009

"பதில் சொல்லடி செந்தமிழ்ப் பெண்ணே!"


மீசைக்குள் ஆசை
ஓசையின்றி வேர்விட,
பாஷைக்குள் பரிபாஷைக்குள்,
ரோசத்தின் மீசைக்குள்,
நேசம் வீசும் தென்றல்காற்றில் தேரோட,
ஆசைக்குள் ஆசை அதிசயமாய் பேசும்!

முரட்டு மீசைக்குள்,
வரட்டுக்கௌரவம் விட்டோடிவிட,
புரட்டுப் பொய்யர்கள் வேதாந்தம்,
கட்டோடு கலைந்துவிட,
இருட்டுக்கு ஒளியாய், ஒளிக்கதிராய்
உலகுக்கு ஒளியான,
முரட்டு மீசைக்காரன், முண்டாசுக் கவிஞனவன்,
பாரதிதான், உன் காதலனோ!

ஏது! ஏது! முரட்டுப் பிடிவாதம்,
முடிசூடும் விந்தையோ!
சூது வாது தெரியாத அடிவானம்,
ஆழ்கடலோடு சங்கமிக்கும் விந்தையோ!
மாது உன் மயக்கம் தீர்க்கும் மன்னவன்,
அந்தத் தென்னவன்தானோ!
யாது பெயர்! ஏது ஊர்! உன் உளம்கவர்ந்த
மன்னவன் யாரோ!

சூதுவாது அறியாத சுகந்தமலர்,
உன் சுகத்தைக் கொள்ளையடித்துப்,
பாதிபாதி சரிபாதி, சுகந்தமதை சுமந்து,
சுகத்தை அள்ளிக் கொடுத்து,
மாதுஏது நீ மயங்கிக் கிடக்க,
மதுரசம் உண்டு களித்துப் பள்ளி கொண்ட,
சோதிசேதி அறியாத பேதையே!
உனைப் பாடாய்ப் படுத்துபவன் யாரடி!

நாதியற்றுத் தமிழ் தவித்தபோது,
வேதியந்தனைத் தூக்கியெறிந்து,
நீதியற்ற நிலைமாற்றி, சாதியற்ற நிலை ஆக்கப்,
பாதியாகத்தன்னை அர்ப்பணித்த,
போதிமரப் புத்தன் போல, ஆதிஞானமதைப் பெற்ற, கவி
பாரதித் தமிழ்க் காதலனோ!
சேதிசொலச் சித்தம் குளிரப்,
பதில் சொல்லடி செந்தமிழ்ப் பெண்ணே!

நன்றி
சுபம்
அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக